தேடுதல்

இந்திய கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள்  (AFP or licensors)

இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 154 வன்முறை நிகழ்வுகள்

இந்தியாவில், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலேயே அதிக அளவில், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

2021ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவின் 17 மாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான 154 வன்முறை நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

கிறிஸ்தவ சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக  உழைக்கும் UCF (United Christian Forum) என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலேயே கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை நிகழ்வுகள், அதிக அளவில் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், சத்தீஸ்கரிலும், ஜார்கண்டிலும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 22 வன்முறை நிகழ்வுகள், உத்திரபிரதேசத்தில் 19, கர்நாடகாவில் 17, தமிழ் நாட்டில் 6 நிகழ்வுகள் உட்பட, 17 மாநிலங்களில் 154 வன்முறை நிகழ்வுகள்  இடம்பெற்றுள்ளதாக UCF தெரிவிக்கிறது.

இவ்வாண்டு முதல் ஆறுமாதங்களில் இவ்வமைப்பின் உதவி கேட்டு 1137 விண்ணப்பங்கள் வந்ததாகவும், அநீதியாக சிறைப்படுத்தப்பட்ட 86 கிறிஸ்தவர்களின் விடுதலையைப் பெற்றுத்தந்ததாகவும், தாக்குதலின் காரணமாக மூடப்பட்ட 29 கிறிஸ்தவக் கோவில்களை திறக்க உதவியுள்ளதாகவும் தெரிவிக்கும் இந்த உரிமைகள் அமைப்பு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், பெரும்பாலும், தலித் மக்கள், பழங்குடியினர், மற்றும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுவதாகவும், அதுவும், காவல்துறையின் ஒத்துழைப்புடனேயே இடம்பெறுவதாகவும் அறிவிக்கிறது.

இது தவிர, இந்தியாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் பல்வேறு வழிகளில் இடம்பெறுவதாக உரைக்கும் UCF அமைப்பு, கிறிஸ்தவ ஊர்வலங்களுக்கு தடைவிதித்தல், மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்தல், போன்றவைகளை சுட்டிக்காட்டுகிறது.

கிறிஸ்தவர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு, பலவேளைகளில் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும், இக்குற்றச்சாட்டு, இதுவரை, எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகத்து.

இந்தியாவில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, 2.3 விழுக்காடு என்ற அளவிலேயே பல ஆண்டுகளாக, தொடர்ந்து இருந்துவருகிறது.

 

15 July 2021, 13:51