தேடுதல்

Todi பேராலயம் Todi பேராலயம் 

திருத்தந்தையர் வரலாறு – அதிகாரப் பிடிக்குள் ஆன்மீகத் தலைவர்கள்

பேராயராக இருந்தபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட Gerbert என்பவர், இரண்டாம் சில்வெஸ்டர் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

பல்வேறு இன்னல்களையும் தாண்டி சிறப்பான முறையில் திருஅவை நிர்வாகத்தை வழிநடத்திச் சென்ற திருத்தந்தை 5ம்கிறகரி, 999ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயிரிழந்தபின், பேரரசரின் ஆதரவோடு தேர்வுசெய்யப்பட்டவர் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர். இவரின் வாழ்க்கை வரலாற்றைக் கொஞ்சம் விரிவாக பார்ப்பது நல்லது.

திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர்

940 முதல் 950ம் ஆண்டிற்கிடையில் பிரான்சின் Aurillacல் பிறந்தார் Gerbert என்ற இயற்பெயருடைய இத்திருத்தந்தை. அதே ஊரில் உள்ள துறவு மடத்தில் இளவயதில் நுழைந்து பயிற்சிகளைப் பெற்றார். இஸ்பானிய பிரபு ஒருவரால் இஸ்பெயினுக்கு எடுத்துச் செல்லப்பட்ட Gerbert, Barcelonaவில் அரேபிய ஆசிரியர்களிடம் கணிதம் மற்றும் இயற்பியலில் அதிகக் கவனம் செலுத்தி கல்வி கற்றார். அதன் பின்னர், இவரின் இறையியல் ஆசிரியராக இருந்த ஆயர் Hattoவுடன் இணைந்து உரோமுக்குப் பயணமானார். திருத்தந்தை 13ம் ஜானுக்கு இவர் அறிமுகப்படுத்தப்பட, திருத்தந்தையும் இவரை, அதாவது இரண்டாம் சில்வெஸ்டர் என பின்னர் அழைக்கப்பட்ட Gerbertஐ, பேரரசர் முதலாம் Ottoவிடம் அனுப்பி பரிந்துரையும் செய்தார். பேரரசரும் Gerbertஐ Reimsன் தலைமை திருத்தொண்டராக்கி இருந்த Gerannusடம் அனுப்பி வைக்க, இவர் பேராயர் Adalberoவினால், பேராலயப் பள்ளியின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

  இதற்கிடையில், பல பகுதிகளுக்கும் பியணம் மேற்கொண்ட Gerbertக்கு பேரரசர் இரண்டாம் Ottoவால் Bobbio துறவு மடத்தின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆனால், சிறிது காலத்திலேயே Reimsக்கு திரும்பி, தன் கல்விப் பணியைத் தொடர்ந்தார் Gerbert. பேராயர் Adalbero, தனக்குப் பின் Reims பேராயராக Gerbert  நியமிக்கப்பட வேண்டும் என விரும்பினார். ஆனால், பேராயர் Adalbero இறந்தபோதோ, 988ல் மன்னர் Lothaireன் மகன் அப்பதவியை எடுத்துக் கொண்டார். அதேவேளை, 991ம் ஆண்டு மன்னருக்கு எதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் Arnulph பதவி நீக்கம் செய்யப்பட, பின்னாள் திருத்தந்தையான இரண்டாம் சில்வெஸ்டர், அதாவது Gerbert, பேராயர் பதவியில் நியமிக்கப்பட்டார். ஆனால், Gerbert இப்பதவியை ஏற்றதிலிருந்தே அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மன்னரின் மகன் வகித்த பேராயர் பதவி இவருக்கு வழங்கப்பட்டதால், அம்மகனின் விசுவாசிகளின் கூட்டம் இவரை ஏற்கத் தயங்கியது. திருத்தந்தை 15ம் ஜானும் Leo என்ற துறவியை விசாரணை செய்துவர அனுப்பினார்.

   995ம் ஆண்டு ஜுன் மாதம் 2ம் தேதி அவை கூடியது. பேராயர் Gerbertம் வந்திருந்து தன் பக்க நியாயங்களை எடுத்துரைத்தார். இறுதியில் அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் திரும்பவும் ஜுலை மாதம் முதல் தேதி கூடிய அவையில் Arnulph பதவி நீக்கமும், Gerbertன் பேராயர் பதவியும் செல்லாது என தீர்ப்பு வழங்கப்பட்டது. உடனே எவ்வித மறுப்பும் சொல்லாமல் வெளியேறிய Gerbert, இளம் பேரரசர் மூன்றாம் Ottoவின் அரசவைக்குச் சென்று அரசருக்கு கல்வியறிவிப்பவர் ஆனார். பேரரசரின முடிசூட்டலுக்காக அவருடன் இத்தாலிக்குச் சென்ற Gerbert அங்கேயே தங்கிவிட்டார். 998ம் ஆண்டு திருத்தந்தை 5ம் கிறகரி, இவருக்கு Ravenna பேராயர் பதவியைக் கொடுத்து கௌரவித்தார். ஒரே ஆண்டில், அதாவது, 999ம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி, திருத்தந்தை மரணமடைய, அதே ஆண்டு பேரரசரின் ஆதரவுடன் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்ட பேராயர் Gerbert, திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர்  என்ற  பெயரை வைத்துக்கொண்டார். இவர் திருஅவை வரலாற்றில் முதல் பிரெஞ்ச் திருத்தந்தை என்பது மட்டுமல்ல, திருஅவை வரலாற்றின் ஆயிரமாம் ஆண்டில் பதவி வகித்தார்.

   திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர், மிகுந்த பொறுப்புணர்வுடனும், மிகுந்த ஆர்வத்துடனும் திருஅவையை வழிநடத்திச் சென்றார் என வரலாற்று ஆசிரியர்கள் உரைக்கின்றனர். அருள்பணியாளர்களிடையே இருந்த தீமைகளைக் களைவதில் அதிக முயற்சி எடுத்தார். எவ்வித தீமையும் செய்யாத, கறைபடியா கரத்தினரே ஆயர் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தவர் திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர். பேரரசர் மூன்றாம் Ottoவுடன் நட்புணர்வுடன் பழகிவந்த திருத்தந்தைக்கு, பேரரசரும் பல சலுகைகளை வழங்கினார். இதற்கிடையே, பேரரசருக்கு எதிரான கிளர்ச்சி உரோமில் துவங்க, திருத்தந்தையும் பேரரசரும் உரோமிலிருந்து தப்பியோட வேண்டியதாகியது. 1001ம் ஆண்டு தப்பியோடிய திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டர்,  சில மாதங்கள் உரோமுக்கு வெளியே வாழவேண்டி இருந்ததால்  Todi என்ற நகரில் ஆயர் பேரவையையும் கூட்டினார். Otto பேரரசரின் மரணத்திற்குப் பின்னரே இவர் உரோம் நகர் திரும்பினார். மே மாதம் 12ந்தேதி 1003ம் ஆண்டு உயிரிழந்த இத்திருத்தந்தை குறித்து சில முக்கிய விடயங்களைக் கூறலாம்.

   - இவர் பதவியேற்றவுடனேயே, தன்னோடு முன்னர் Reims நகர் பேராயர் பதவிக்குப் போட்டியிட்ட Arnulphஐ எவ்வித பகைமையும் பாராட்டாமல் பேராயராக நியமித்தார்.

  - போலந்தின் Gnesno விலும் Hungaryயின் Granலும் புதிய உயர்மறைமாவட்டங்களை உருவாக்கினார்.

  - 1000மாம் ஆண்டில் ஹங்கேரி ஆட்சியாளருக்கு மன்னர் என்ற பட்டத்தை வழங்கி, அவரை அந்நாட்டிற்கான திருப்பீட நிர்வாகியாகவும் நியமித்தார்.

  - பிரான்ஸ் மன்னர் இராபர்ட்டின் திருமண விவகாரங்களில் திருஅவை படிப்பினைகளை விட்டுக்கொடுக்காமல், நியாயமான தீர்ப்பை வழங்கினார்.

  - இவரே மேற்கு ஐரோப்பாவில் அராபிய எண் முறையை புகுத்தினார் என நம்பப்படுகிறது.

 -  பென்டுலம் கடிகாரத்தைக் கண்டுபிடித்தவர் இவரே எனவும் கூறுகின்றனர்.

திருத்தந்தை 17ம் ஜான்

இத்திருத்தந்தைக்குப்பின், அதாவது திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டரின் மரணத்திற்க்குப்பின் 1003ம் ஆண்டு பதவிக்கு வந்தார் திருத்தந்தை 17ம் ஜான். திருத்தந்தை இரண்டாம் சில்வெஸ்டரின் மரணத்திற்க்குப்பின், உரோம்நகர் பிரபுக்களின் அதிகாரத்தை அடக்கிவைக்கும் உண்மையான அதிகாரம் எவரிடமும் இருக்கவில்லை. ஏற்கனவே பேரரசர் மூன்றாம் Ottoவினால்  தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட Crescentiusன் மகன் John Crescentius அதிகாரத்தைக் கைப்பற்றினார். தானே திருத்தந்தையை தேர்வு செய்தார். முதலில் Sicco என்பவர் தேர்வு செய்யப்பட்டு 17ம் ஜான் என்ற பெயரையும் எடுத்துக் கொண்டார். இவர் அருள்பணியாளராவதற்கு முன்னர் திருமணம் புரிந்து, மூன்று மகன்களையும் கொண்டிருந்தார். இவரின் மகன்களும் பின்னர் அருள்பணியாளராயினர். இத்திருத்தந்தை 17ம் ஜான் சில மாதங்களே பொறுப்பிலிருந்தார், அதாவது, 1003ம் ஆண்டு ஜூன் 13லிருந்து, நவம்பர் 6ம் தேதி வரை. இவர் திருத்தந்தையாக ஆற்றிய பணிகள் குறித்து அவ்வளவாகத் தெரியவில்லை.

திருத்தந்தை 18ம் ஜான்

1003ம் ஆண்டில் அடுத்து பதவிக்கு வந்தார் திருத்தந்தை 18ம் ஜான். Phasianus என்ற இயற்பெயர் கொண்ட இவர் லியோ என்ற உரோமைய அருள்பணியாளரின் மகன். இவரும் Crescentiusன் அதிகாரத்தினாலேயே, அவ்வதிகாரத்திற்கு உட்பட்டே தலைமைப் பொறுப்பிற்கு வந்தார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் பதவி வகித்த இவர், துறவு இல்லங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்துள்ளார். Constantinople திருஅவையில் இவர் உரோம் நகர் ஆயர் என்றே குறிக்கப்பட்டுள்ளார். 1009ம் ஆண்டு உயிரிழந்தார் இத்திருத்தந்தை. ஒரு வரலாற்று ஏட்டின்படி, இவர் உரோம் நகருக்கு அருகேயுள்ள புனித பவுல் பெருங்கோவிலின் துறவு மடத்தில் 1009ம் ஆண்டு ஜுன் மாதம் ஒரு துறவியாக உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.

திருத்தந்தை 4ம் Sergius

  இரு திருத்தந்தையர்களை தன் அதிகாரத்தின் கீழ் கொண்டிருந்த பிரபு Crescentius, மூன்றாவதாக மீண்டும், Albano நகர் ஆயரை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்க உதவினார். இத்திருத்தந்தை 4ம் Sergius துணிந்து நின்று Cresentiusன் அதிகாரத்தை எதிர்த்து போரிட்டார். ஆனால், அதில் வெற்றிபெற முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல பிரபுக்கள் தங்கள் நிலங்களை இவரின் பாதுகாப்பின் கீழ் வைக்குமளவுக்கு இவரின்மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். உரோம்நகரில் பஞ்சம் தலைதூக்கியபோது ஏழைகளுக்காக நிறைய உதவிகளைச் செய்தார் இத்திருத்தந்தை 4ம் Sergius. 1009ம் ஆண்டு ஜூலை 31 முதல், ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு சிறிது குறைவாக தலைமைப் பதவியில் இருந்த இத்திருத்தந்தை, 1012ம் ஆண்டு மே மாதம் 12ந்தேதி காலமானார். இவர் உடல் இலாத்தரன் பெருங்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டது.

அரசியல் அதிகாரப்பிடியின்கீழ் இருந்து திருத்தந்தையர் எவ்வாறு வெளியே வந்தனர் என வரும் வாரங்களில் நோக்குவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 July 2021, 14:00