தேடுதல்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மடகாஸ்கர்  

வறட்சியால் வாடும் மடகாஸ்கர் மக்களுக்கு உதவ ஜெர்மன் ஆயர்கள்

கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக கடும் வறட்சியை எதிர்கொள்ளும் மடகாஸ்கரில் உணவுப்பொருள்களின் விலை அதிகரிப்பு, மற்றும், வெட்டுக்கிளிகளால் அறுவடை பாதிப்பு ஆகியவையும் மக்களின் பசிக்கொடுமையை அதிகரித்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மடகாஸ்கர் நாட்டில் அண்மை வாரங்களாக நிலவும் கடும் வறட்சியால், பூச்சிகள், களிமண், மற்றும், இலைகள் ஆகியவற்றை மட்டுமே உணவாக உட்கொள்ளும் அந்நாட்டு மக்களுக்கு உடனடி உதவிகள் செய்வதற்கு, ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இன்றைய உலகில், தென் சூடான், ஏமன், மற்றும், நைஜீரியாவின் வடபகுதிகள், ஏற்கனவே கடும் பசிக்கொடுமையை எதிர்கொள்ளும்வேளை, அப்பட்டியலில் மடகாஸ்கர், மற்றும் எத்தியோப்பியா, ஆகிய இரு நாடுகள் புதிதாக இணைந்துள்ளன என்ற ஐ.நா.வின் கணிப்பை, ஜெர்மன் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மடகாஸ்கர் நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து, ஜெர்மன் ஆயர்களின், உலகளாவிய திருஅவை பணிக்குழுவின் தலைவர் பேராயர் Ludwig Schick அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நாட்டின் தற்போதைய நிலைமை, படுகொலைகள் இடம்பெறும் பேராபத்தை உருவாக்கியுள்ளது, மற்றும், அங்கு நிலவும் பசிக்கொடுமை, அச்சமூட்டுவதாக உள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மண் புயல்கள் வீசுவதாலும், வயல்கள் வறண்டுவிட்டதாலும், கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் ஏற்கனவே தங்கள் இடங்களைவிட்டு வெளியேறிவிட்டனர் என்று கூறியுள்ள பேராயர் Ludwig அவர்கள், தென் பகுதியில் வாழும் மக்கள் வாழ்வதற்கு உதவிவரும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளும் சிறாரும் எலும்பும் தோலுமாக காணப்படுகின்றனர், விரைவில் பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்றுரைத்துள்ள பேராயர் Ludwig அவர்கள், மடகாஸ்கர் மக்கள் உயிர்வாழ உதவவேண்டியது உலகளாவிய சமுதாயத்தின் கடமை என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக கடும் வறட்சியை எதிர்கொள்ளும் மடகாஸ்கர் நாட்டில் உணவுப்பொருள்களின் விலை அதிகரிப்பு, மற்றும், வெட்டுக்கிளிகளால் அறுவடை பாதிப்பு ஆகியவையும், மக்களின் பசிக்கொடுமையை அதிகரித்துள்ளன என்று, ஐ.நா.வின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2019ம் ஆண்டு செப்டம்பரில் மடகாஸ்கர், மொசாம்பிக், மொரீசியஸ் ஆகிய மூன்று நாடுகளுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

31 July 2021, 14:31