தேடுதல்

Vatican News
அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. வீரவணக்கம் அருள்பணி ஸ்டான் சுவாமி சே.ச. வீரவணக்கம்  (AFP or licensors)

ஸ்டான் சுவாமி என்ற கூண்டுக்கிளியின் இரத்தம், நம் கரங்களில்

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு இறுதி வழியனுப்பும் திருப்பலி, மும்பையின் பாந்த்ரா புனித பேதுரு ஆலயத்தில், ஜூலை 06, இச்செவ்வாய் இந்திய நேரம் மாலை நான்கு மணிக்குத் துவங்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில், பழங்குடியினர், தலித் மக்கள், மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளையும், மாண்பையும் மீட்டெடுக்க, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக உழைத்துவந்த சமூகப்போராளி, மற்றும், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு இறுதி வழியனுப்பும் திருப்பலி, மும்பையின் பாண்ட்ரா புனித பேதுரு ஆலயத்தில், ஜூலை 06, இச்செவ்வாயன்று, இந்திய நேரம் மாலை  நான்கு மணிக்குத் துவங்கியது.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, குறைந்த அளவு எண்ணிக்கையிலே விசுவாசிகள் இத்திருப்பலியில் பங்குகொள்ள அனுமதிக்கப்பட்டனர். ஏராளமானோர், அத்திருப்பலியின் நேரடி ஒளிபரப்பை ஒலி-ஒளி வலைக்காட்சியில் பார்த்து, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் ஆன்மா நிறையமைதியடைய இறைவேண்டல் செய்தனர்.

இந்த அடக்கச் சடங்கு திருப்பலியில், டில்லியிலிருந்து, இணையம் வழியாக பங்குபெற்ற, இந்திய இயேசு சபைத் தலைவர், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் டி சூசா அவர்கள் ஆற்றிய மறையுரையில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், இயேசு கூறியதுபோன்று, தன் வாழ்வை மிகுதியாகப் பலனளிக்குமாறு இறுதிவரை வாழ்ந்தார் என்று கூறினார்.

இந்திய கத்தோலிக்கத் தலைவர்களின் இரங்கல்

ஸ்டான் சுவாமி அவர்களின் இறப்பையொட்டி, இந்தியாவின் கத்தோலிக்க, மற்றும், அரசியல் தலைவர்கள் பலர், தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்திய ஆயர் பேரவையின் தலைவரும், மும்பைப் பேராயருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், வாய்ப்பிழந்த, மற்றும், புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வும், மாண்பும் உயர, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், ஒருமித்த மனதோடு, கடுமையாக, அயராது உழைத்ததற்கு தானே சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.  

இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி, ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும்வரை, அவர் குற்றமற்றவர் என்றே கருத்தப்படுவார் என்றும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம், விசாரிக்கப்படவே இல்லை என்றும் கூறியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், உண்மை விரைவில் வெளிவரும் என்றும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் பெயர், அனைத்து சதித்திட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் தான் நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் கைது செய்யப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கின்றது எனவும், அடிப்படை உரிமை இழந்த மக்களுக்காக அவர் ஆற்றிய நற்பணிகளுக்குத் தான் நன்றி கூறுவதாகவும், அவரின் ஆன்மா நிறையமைதி அடைய தான் செபிப்பதாகவும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி, துணிச்சலின் அடையாளம்

மேலும், இராஞ்சி உயர்மறைமாவட்ட பேராயர் ஃபெலிக்ஸ் டோப்போ அவர்களும், துணை ஆயர் தியோடர் மஸ்கரெனாஸ் அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், பழங்குடியினத்தவரின் உரிமைகளை மீட்டெடுக்க உழைத்தவர், நீதிக்காகப் போராடியவர், மற்றும், துணிச்சலின் அடையாளம் என்று, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களைப் பாராட்டியுள்ளனர்.

மனிதர்கள் என்ற முறையில், நமது கொடுமையான நீதி அமைப்பின்முன் பலவீனர்களாக, மற்றும், கையறு நிலையில் உள்ளோம் என்றுரைக்கும் அவ்வறிக்கை, அருள்பணி ஸ்டான் சுவாமி என்ற கூண்டுக்கிளி, இப்போது விண்ணகத்தில் பாடிக்கொண்டிருக்கிறது, ஆனால், அவரது இரத்தம், நம் கரங்களில் உள்ளது என்றும் கூறியுள்ளது.

பார்க்கின்சன் என்ற நரம்புத்தளர்ச்சி நோயால் துன்புற்ற அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள்,  84வது வயதில் கைதுசெய்யப்பட்டு, ஏழு மாதங்களுக்கு மேலாக பிணையல் மறுக்கப்பட்டு, காலணிகள் அணிவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டு, இறுதியில் சிறையில் கோவிட்-19 பெருந்தொற்றால் தாக்கப்பட்டது, குற்றமற்ற மனிதரை கைதுசெய்தவர்கள், மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றுவோரின் பயங்கரமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நாம் இழந்துவிட்டோம், ஆனால், காழ்ப்புணர்வு, உணர்ச்சியற்றநிலை, மற்றும், அநீதி ஆகியவற்றுக்குப் பலியாகியுள்ள அனைத்து குற்றமற்றவர்களுக்கும் நீதி கிடைக்க கடவுள் உதவுவார் என நம்புவோம் என்றுரைக்கும், இராஞ்சி உயர்மாறைமாவட்ட இரங்கல் அறிக்கை, நல்லதொரு பயணத்தை முடித்துள்ள அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் ஆன்மா நிறையமைதியடைய கடவுளை மன்றாடியுள்ளது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டம், விரகாலூர் என்ற கிராமத்தில், 1937ம் ஆண்டு, ஏப்ரல் 26ம் தேதி பிறந்த ஸ்டான் அவர்கள், தன் 20வது வயதில் இயேசு சபையில் இணைந்து, ஜாம்ஷெட்பூர் இயேசு சபை மாநிலத்திற்கென, 1970ம் ஆண்டு, தன் 33வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்றார். (Agencies)

06 July 2021, 15:47