தேடுதல்

புனித இலெயோலா இஞ்ஞாசியார் புனித இலெயோலா இஞ்ஞாசியார்  

இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டில் அவரின் ஆன்மீகத்தோடு பயணிக்க

நமது மனமாற்ற பயணத்தில், ஆண்டவரோடு உள்ள உறவை ஆழப்படுத்தவும், கிறிஸ்துவில் அனைத்தையும் புதியதாகக் காணவும், இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டு நமக்கு அழைப்புவிடுக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

புனித இலெயோலா இஞ்ஞாசியார் மனம் மாறியதன் 500ம் ஆண்டின் நினைவாக, உலகளாவிய இயேசு சபையினர், இவ்வாண்டு மே மாதம் 20ம் தேதி முதல், 2022ம் ஆண்டு ஜூலை மாதம் வரை, இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டை சிறப்பித்துவரும்வேளை, உலகளாவியர் இயேசு சபையினர், இந்த யூபிலி ஆண்டிற்கு உதவியாக, மின்-நூல் (E-book) ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

“ஆண்டு முழுவதும் இஞ்ஞாசியாரின் ஆன்மீகத்தோடு” என்ற தலைப்பில், இயேசு சபையினரின் இணையதளப் பக்கத்தில் (www.jesuits.org) வெளியிடப்பட்டுள்ள இந்த மின் நூலில், புனித லெயோலா இஞ்ஞாசியாரின் இறைவேண்டல்கள், அவர் பற்றிய கவிதைகள், தியானச் சிந்தனைகள் மற்றும், இந்த யூபிலி ஆண்டு பற்றிய ஏனைய தகவல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

புனித இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டு, மற்றும், அவரது திருவிழாவைச் சிறப்பிப்பதற்கு உதவியாக, 26 பேர் இணைந்து இந்த மின் நூலைத் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

மின்-நூல்
மின்-நூல்

இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டு

புனித இஞ்ஞாசியாரின் வாழ்வில் மனமாற்றம் இடம்பெற்ற தருணத்தைத் தியானிப்பதன் வழியாக, இறைவனோடு நமக்குள்ள உறவிலும், ஒருவர் ஒருவரை அன்புகூர்வதிலும் நாம் எவ்வளவு தூரம் வளர்ந்துள்ளோம்? என்பதை சிந்திப்பதற்கு, இஞ்ஞாசியார் யூபிலி ஆண்டு அழைப்புவிடுக்கிறது.

நமது மனமாற்ற பயணத்தில், ஆண்டவரோடு உள்ள உறவை ஆழப்படுத்தவும், கிறிஸ்துவில் அனைத்தையும் புதியதாகக் காணவும் இந்த யூபிலி ஆண்டு மேலும் நமக்கு அழைப்புவிடுக்கின்றது என, அந்த மின் நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஜூலை 31, இச்சனிக்கிழமை, இயேசு சபையை நிறுவிய புனித இலெயோலா இஞ்ஞாசியாரின் திருநாள் சிறப்பிக்கப்பட்டது. 

31 July 2021, 14:46