தேடுதல்

Vatican News
அருள்பணி ஸ்டான் சுவாமி  மரணத்தை அடுத்து நிகழ்ந்த போராட்டம் அருள்பணி ஸ்டான் சுவாமி மரணத்தை அடுத்து நிகழ்ந்த போராட்டம் 

அருள்பணி ஸ்டான் சுவாமியின் உடல் தகனம்

பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல், அவர், தன் இறுதி ஆண்டுகளில் பணியாற்றிவந்த இராஞ்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு புதைக்கப்படும்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மும்பையின் திருக்குடும்ப மருத்துவ மனையில், ஜூலை 5, இத்திங்களன்று இறையடி சேர்ந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல், ஜூலை 6, இச்செவ்வாயன்று, மாலை 6.30 மணியளவில் மின்சாரத் தகனம் செய்யும் கருவியின் உதவியுடன் தகனம் செய்யப்பட்டது என்று, இயேசு சபை அருள்பணியாளர் ஜோசப் சேவியர் அவர்கள், ஜூலை 7 இப்புதனன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இச்செவ்வாய் மாலை 4 மணிக்கு, மும்பையின் பாண்ட்ரா புனித பேதுரு ஆலயத்தில், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் அடக்கத்திருப்பலி நிறைவேற்றப்பட்டபின், நீதி மன்றம் விடுத்திருந்த ஆணையை மதித்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது என்று அருள்பணி சேவியர் அவர்கள் கூறினார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள் மும்பை டலோஜா சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, அவரது வழக்கு தொடர்பான விடயங்களை ஒருங்கிணைத்து வந்த பெங்களூரு இந்திய சமுதாய நிறுவனத்தின் இயக்குனர் அருள்பணி சேவியர் அவர்கள், இயேசு சபையின் மும்பை மாநிலத் தலைவர் அருள்பணி அருண் டி சூசா, அவர்களுடன் இணைந்து அருள்பணி ஸ்டான் அவர்களின் அடக்கத் திருப்பலியை நிறைவேற்றினார்.

பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடிவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் சாம்பல், அவர் தன் இறுதி ஆண்டுகளில் பணியாற்றிவந்த இராஞ்சிக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு புதைக்கப்படும் என்று அருள்பணி சேவியர் அவர்கள் கூறினார்.   

கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய தேசிய புலனாய்வு துறையினரால் கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், தான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்பதை உணர்ந்திருந்தார்.

"எனக்கு நிகழ்வது ஒன்றும் தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இந்நாட்டில் பல அறிஞர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மனித உரிமை போராளிகள், மாணவத்தலைவர்கள் ஆகியோர் சிறைப்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். அவர்கள் அனைவரும், அரசு செய்துவரும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பி வந்ததால், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே நிலை எனக்கும் ஏற்படலாம். என் பணிக்கென இந்த விலையைக் கொடுக்க நான் தயார்" என்று அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சிறைக்குச் செல்வதற்கு முன் கூறியது நினைவில கொள்ளத்தக்கது. (UCAN)

07 July 2021, 15:14