தேடுதல்

Vatican News
ஜூலை 3, புனித தோமா திருநாளன்று சிறப்பிக்கப்படும் ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ ஜூலை 3, புனித தோமா திருநாளன்று சிறப்பிக்கப்படும் ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ 

ஜூலை 3, புனித தோமா திருநாள் – ‘இந்திய கிறிஸ்தவ நாள்’

இந்தியாவில், கிறிஸ்தவ மறையானது, தொன்றுதொட்டு வளர்ந்துவரும் ஒரு மதம் என்பதையும், அது, இந்நாட்டில், ஒரு வெளிநாட்டு மதம் அல்ல என்பதையும் உணர்த்தும், இந்திய கிறிஸ்தவ நாள்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 3 இச்சனிக்கிழமை, திருத்தூதரான புனித தோமா திருநாள் சிறப்பிக்கப்படும் வேளையில், அதனை, ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ என்று இணைந்து கொண்டாட, இந்தியாவின் கத்தோலிக்கத் திருஅவை, மற்றும் ஏனைய கிறிஸ்தவ சபைகள் முடிவெடுத்துள்ளன என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இந்தியாவில், கிறிஸ்தவ மறையானது, தொன்றுதொட்டு வளர்ந்துவரும் ஒரு மதம் என்பதையும், அது, இந்நாட்டில், ஒரு வெளிநாட்டு மதம் அல்ல என்பதையும் உணர்த்த, இந்தக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் முன்னாள் செய்தித் தொடர்பாளர், அருள்பணி பாபு ஜோசப் அவர்கள் கூறினார்.

கி.பி. 52ம் ஆண்டில், இந்திய மண்ணில் காலடி வைத்து, 72ம் ஆண்டு முடிய இந்தியாவில் கிறிஸ்துவத்தை விதைத்து வளர்ந்துவந்த திருத்தூதரான புனித தோமா அவர்களின் திருநாள், இவ்வாண்டு முதல்முறையாக ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ என்று கொண்டாடப்படுகிறது என்பதை அருள்பணி ஜோசப் அவர்கள் கூறினார்.

2021ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு முடிய 10 ஆண்டுகள், இந்திய கிறிஸ்தவத்தைக் கொண்டாடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதென்றும், இயேசு கிறிஸ்து இறையரசை அறிவித்ததன் 2000மாம் ஆண்டைச் சிறப்பிக்கும் வண்ணம், இந்தக் கொண்டாட்டங்கள் அமையும் என்றும், அருள்பணி ஜோசப் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த பத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி, யுனெஸ்கோ, இந்தியாவின் மிகப் பழமையான ஆலயங்களை, கலாச்சாரக் கருவூலங்களாக அறிவிக்கவேண்டும் என்றும், இந்தியக் கலாச்சாரம், வரலாறு ஆகிய தளங்களில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பை மக்கள் உணரவேண்டும் என்றும், அருள்பணி ஜோசப் அவர்கள் விண்ணப்பித்தார்.

01 July 2021, 14:50