தேடுதல்

Vatican News
மறைசாட்சி அருள்பணி ஸ்டானின் அஸ்தி மறைசாட்சி அருள்பணி ஸ்டானின் அஸ்தி 

நவீன காலத்தின் மறைசாட்சி அருள்பணி ஸ்டானின் அஸ்தி

தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள், படிப்படியாகக் கொல்லப்பட்டது, இந்திய சனநாயகத்தின் உயிர், வேகமாக அழிக்கப்பட்டு வருவதன் அடையாளம் - அருந்ததி ராய்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மும்பை நீதிமன்றம் விடுத்திருந்த ஆணையை மதித்து, மின்சாரத் தகனம் செய்யும் கருவியின் உதவியுடன், தகனம் செய்யப்பட்ட, மனித உரிமைப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களது உடலின் சாம்பல், ஜாம்ஷெட்பூர் லொயோலா பள்ளி ஆலயத்தில் மக்களின் மரியாதைக்கு வைக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

நவீன காலத்தின் மறைசாட்சியான, இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் இணைந்திருந்த ஜாம்ஷெட்பூர் இயேசு சபை மாநிலத்திற்கு, அவரது உடலின் சாம்பல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

தந்தை ஸ்டான் அவர்கள் சார்ந்திருந்த இயேசு சபையினர், நம் காலப் புனிதரின் அடக்கத் திருப்பலி என்றே, ஜூலை 6ம் தேதி, இச்செவ்வாயன்று மும்பை புனித பேதுரு ஆலயத்தில் நடைபெற்ற அடக்கத் திருப்பலி பற்றிக் கூறினர்.    

மேலும், எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள், தந்தை ஸ்டான் அவர்கள் பற்றிக் கூறியபோது, தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள் படிப்படியாகக் கொல்லப்பட்டது, இந்திய சனநாயகத்தின் உயிர் வேகமாக அழிக்கப்பட்டு வருவதன் அடையாளம் என்று கூறியுள்ளார்.

மனித உரிமைகளைக் கட்டுப்பாடின்றி மீறும் கொடுமைக்கார்களால் நாம் ஆளப்பட்டு வருகிறோம், அவர்கள், நம் பூமியின் மீது சாபத்தை வரவழைத்துள்ளனர் என்றும், அருந்ததி ராய் அவர்கள் கூறியுள்ளார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, ஓர் இயேசு சபை அருள்பணியாளராகவும், குறிப்பாக, பழங்குடியினரரின் வாழ்வாதார உரிமைகளை மீட்டுக்கொடுக்கும் பணியிலும் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள், ஜூலை 05, இத்திங்களன்று மும்பையின் திருக்குடும்ப மருத்துவமனையில், இறையடிசேர்ந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பால் அநீதியாய் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி, 84 வயது நிரம்பிய தந்தை ஸ்டான் சுவாமி அவர்கள், மும்பை டலோஜா சிறையில் வைக்கப்பட்டார்.

இன்னும், தந்தை ஸ்டான் அவர்களின் மறைவையொட்டி, இரங்கல் அறிக்கை வெளியிட்ட தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் அந்தோனி பாப்புசாமி அவர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காய் வாழ்ந்த ஒரு துறவியை மாபெரும் குற்றவாளியைப்போல் சிறைபிடித்து, உடல்நலம் குன்றிய நிலையிலும் அவர்தம் முதுமைக்குக்கூட கருணை காட்டாது, கடுமையாக நடந்துகொண்ட அரசு அதிகாரிகளையும், அவர்களுக்கு ஆதரவாக நின்ற அரசு நிறுவனங்களையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார் (Agencies)

09 July 2021, 15:05