தேடுதல்

எத்தியோப்பியாவில் போரால் குடிபெயரும் மக்கள் எத்தியோப்பியாவில் போரால் குடிபெயரும் மக்கள் 

அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ள எத்தியோப்பிய ஆயர்கள்

எத்தியோப்பிய ஆயர்கள் : நாட்டு மக்களின் துன்பங்களை நாங்களும் உணர்கிறோம், மக்களின் பாதுகாப்பு, மற்றும் அமைதிக்காக இறைவனிடம் தொடர்ந்து செபிக்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
எத்தியோப்பியாவின் Tigray பகுதியை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டிருப்பதில் Tigray மாநில அரசுக்கும் எத்தியோப்பிய ஒன்றிய அரசுக்கும் இடையே இடம்பெறும் மோதலில், எண்ணற்ற இழப்புக்கள் இடம்பெற்று வருவதுகுறித்த கவலையை வெளியிட்டு, அமைதிக்கும் ஒப்புரவிற்கும் அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.
2020ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல், எத்தியோப்பியாவில் இடம்பெற்றுவரும் வன்முறைகள் முடிவுக்கு வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன் வைத்துள்ள எத்தியோப்பிய ஆயர்கள், Tigray பகுதியின் வன்முறைகள், Amhara மாநிலப் பகுதிக்கும், Afar மாநிலப் பகுதிக்கும் பரவியுள்ளது கவலைதருவதாக உள்ளது என உரைத்துள்ளனர்.
எத்தியோப்பிய நாட்டு மக்களின் துன்பங்களை தாங்களும் உணர்வதாகக் கூறும் ஆயர்கள், மக்களின் பாதுகாப்பு, மற்றும் அமைதிக்காக இறைவனிடம் தொடர்ந்து செபிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
வன்முறை என்பது ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமையாது எனக் கூறும் ஆயர்கள், போரால், உயிர்களின் அழிவும் உடமைகள் அழிவுமே இடம்பெறுகின்றன என கவலையை வெளியிட்டுள்ளனர்.
எத்தியோப்பிய நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உடன்பிறந்த நிலையில் சகோதரர் சகோதரிகளாகச் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ள எத்தியோப்பிய ஆயர்கள், அமைதியின் கருவிகளாக ஒவ்வொருவரும் செயல்பட உதவுமாறு இறைவனை நோக்கி செபிப்போம் என இறைமக்களை நோக்கி விண்ணப்பித்துள்ளனர்.
Tigray மாநிலப்பகுதியில் கடந்த 8 மாதங்களாக இடம்பெற்றுவரும் மோதலால் இதுவரை 20 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன, 54,000 பேர் வரை புலம்பெயர்ந்துள்ளனர்.
Tigray பகுதியின் ஏறக்குறைய 4 இலட்சம் மக்கள் மிகப்பெரிய அளவில் பசிக்கொடுமையை அனுபவித்து வருவதாகவும், Tigray, Amhara, மற்றும் Afar மாநிலங்களில் 40 இலட்சம் மக்கள் ஏதாவது ஒருவகையில் அவசரகால துயர் துடைப்பு உதவிகளைச் சார்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2021, 15:16