தேடுதல்

மகராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் தேசியப் பேரிடர் அமைப்பினர் மகராஷ்டிராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் தேசியப் பேரிடர் அமைப்பினர் 

பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நிற்க அழைப்பு

கர்தினால் ஆஸ்வால்டு : பெருமழையால், மகராஷ்டிராவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, கத்தோலிக்க திருஅவையின் அனைத்து கதவுகளும் திறக்கப்படவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒரு வாரத்திற்கு மேல் மகராஷ்டிராவில் இடம்பெற்றுவரும் பெருமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி, அவர்களுக்கு பக்கபலமாகச் செயல்படுமாறு, அனைத்து அருள்பணியாளர்களுக்கும் துறவறத்தாருக்கும் அழைப்புவிடுத்துள்ளார், மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

மகராஷ்டிராவின் Raigad, மற்றும் Sindhudurg மாவட்டங்களில், குறிப்பாக, மும்பைக்கும் கோவாவுக்கும் இடையேயுள்ள கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற பெருமழையாலும் நிலச்சரிவுகளாலும் பேரிழப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், தன் ஆழ்ந்த கவலையையும், மனித உயிர்கள், உடமைகள், பயிர்கள், வீடுகள், மற்றும் கால்நடைகளை இழந்துள்ள மக்களுக்கு தன் ஆறுதலையும், அவர்களுக்கு உதவுவதற்கு, திருஅவையின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார், கர்தினால் ஆஸ்வால்டு.

பெருமழையால், மகராஷ்டிரா முழுவதும் 164 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, கத்தோலிக்க திருஅவையின் அனைத்து கதவுகளும் திறக்கப்பட வேண்டும் என விண்ணப்பித்துள்ளார், மும்பை கர்தினால்.

பெருமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடி நிவாரணப் பொருட்கள், அவசரகால மருத்துவ உதவிகள், திருஅவைப்பணியாளர் குழு என அனைத்தும் உடனடியாக அனுப்பப்பட்டுள்ளதாக மும்பை உயர் மறைவமாவட்டத்தின் பிறரன்பு அமைப்பான Jan Kalyan Trustன் தலைவர் அருள்பணி Pravin D'Souza அவர்கள் தெரிவித்துள்ளார். (AsiaNews)

26 July 2021, 14:06