தேடுதல்

பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்ட மும்பை கத்தோலிக்க கோவிலின் முன் செபிக்கும் பக்தர்கள் பெருந்தொற்றின் காரணமாக மூடப்பட்ட மும்பை கத்தோலிக்க கோவிலின் முன் செபிக்கும் பக்தர்கள் 

500க்கும் அதிகமான இந்திய திருஅவைப் பணியாளர், கொரோனாவுக்கு பலி

பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா, மற்றும் பிரேசில் நாடுகளில், திருஅவைப் பணியாளர்களின் இழப்பு அதிகமாக இருந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில், பல நூற்றுக்கணக்கான அருள்பணியாளர்களும், அருள்சகோதரிகளும் இந்நோயால் தாக்கப்பட்டு தங்கள் உயிர்களை இழந்துள்ளதாக, ICN செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

பெருந்தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட இத்தாலி, அமெரிக்க ஐக்கிய நாடு, இந்தியா, மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில், திருஅவைப் பணியாளர்களின் இழப்பு அதிகமாக இருந்ததைச் சுட்டிக்காட்டும் செய்தி நிறுவனங்கள், இது திருஅவைக்கு மட்டும் பிரச்சனையல்ல, மாறாக, மருத்துவமனைகளிலும், முதியோர் இல்லங்களிலும் வாழும் மக்களின் தேவைகளைக் கவனித்துச் செயலாற்றும் திருஅவைப் பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்துவருவது, சமுதாயத்திற்கும் பெரும் இழப்பாகுமென தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இறையழைத்தல்கள் குறைந்துவரும் நிலையில், கோவிட் பெருந்தொற்றால் மேலும் திருஅவைப் பணியாளர்களை இழந்துவருவது, சமூகப்பணிகளை மேலும் பெருமளவில் பாதிக்கும் என்று கூறியுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டின் வெர்ஜினியா பல்கலைக்கழக கத்தோலிக்க கல்வித்துறையின் தலைவர் Andrew Chesnut அவர்கள், பங்குதளப் பணிகளும் பெருமளவில் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்று கூறினார்.

இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் கொரோனா பெருந்தொற்றுக்கு பலியாகியுள்ளதாக உரைத்துள்ள புது டெல்லி உலக மீட்பர் ஆலய அருள்பணி சுரேஷ் மாத்யு அவர்கள், மே மாதத்தில் உயிரிழப்புக்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகத் தெரிவித்தார்.

இத்தாலி நாட்டில் 292 அருள்பணியாளர்கள் கொரோனா பெருந்தொற்றுக்குப் பலியாகியுள்ளதாகவும், அமெரிக்க ஐக்கிய நாட்டில் இந்நோய்க்குப் பலியான ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோரில், அருள்பணியாளர்கள் மற்றும் அருள்சகோதரிகளின் எண்ணிக்கை அதிகமெனவும், ஒரு துறவு சபையில் மட்டும் 21 அருள்சகோதரிகள் இந்நோய்க்குப் பலியாகியுள்ளதாகவும், பிரேசில் நாட்டில் ஒரு கர்தினால், இரண்டு ஆயர்கள் உட்பட குறைந்தது 65 அருள்பணியாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 July 2021, 15:13