தேடுதல்

மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் துறவியர் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் துறவியர் 

இலத்தீன் அமெரிக்க ஆயர்கள்: வாழ்வு விற்பனை சரக்கு அல்ல

மனித வர்த்தகம், நவீன ஓர் அடிமைமுறை. உலகில் இலட்சக்கணக்கான மக்கள், ஒவ்வொரு நாளும், பல்வேறு வழிகளில் அடிமைப்படுத்தப்படுகின்றனர் - இலத்தீன் அமெரிக்க ஆயர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதிகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தோர், மற்றும், குடிபெயர்ந்தோர் உள்ளிட்ட அனைத்து மக்களின் வாழ்வு பாதுகாக்கப்பட்டு போற்றப்படவேண்டும் என்று, இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதி ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜூலை 30, இவ்வெள்ளியன்று கடைப்பிடிக்கப்பட்ட மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளில், "வாழ்வு விற்பனைக்கு விடப்படும் சரக்கு அல்ல, அது மக்களைப் பற்றியது" என்ற இலச்சினையுடன் நான்கு காணொளிகளை வெளியிட்டுள்ள ஆயர்கள், மனித வர்த்தகத்தை ஒழிக்கும் திருஅவையின் நடவடிக்கையில் அனைவரும் இணையுமாறு அழைப்புவிடுத்துள்ளனர்.

இந்த காணொளிகளை, சமூகவலைத்தளங்கள், வலைக்காட்சிகள், வாட்சப், Telegram குழுக்கள் ஆகியவை வழியாகவும் வெளியிட்டுள்ள, இலத்தீன் அமெரிக்கா மற்றும், கரீபியன் பகுதி ஆயர்கள், மனித வர்த்தகம், நவீன அடிமைமுறை என்றும், உலகில் இலட்சக்கணக்கான மக்கள், ஒவ்வொரு நாளும், பல்வேறு வழிகளில் அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் கூறியுள்ளனர்.

புறக்கணிப்பு கலாச்சாரத்தை எதிர்த்து, சந்திப்பு கலாச்சாரத்தையும், வாழ்வுக்கு ஆதரவாக, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் திருஅவையின் மறைப்பணிக்கு ஆதரவாக, அனைவரும் செயல்பட்டு, சான்று வாழ வாழுமாறு, ஆயர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

பாலியல் பயன்பாடு, அடிமைவேலைக்கு கட்டாயமாகத் தெரிவுசெய்தல், உடல் உறுப்புகள் வர்த்தகம் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக, இலத்தீன் அமெரிக்காவில், குற்றக்கும்பல்கள் மனித வர்த்தகத்தை நடத்துகின்றன எனவும், இதற்கு ஒவ்வோர் ஆண்டும் நாற்பது இலட்சம் மக்கள் பலிகடா ஆகின்றனர் எனவும், ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வர்த்தகத்தில், பாலியல் பயன்பாட்டிற்காக, 80 விழுக்காட்டு பெண்களும், சிறுமிகளும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ள இலத்தீன் அமெரிக்க ஆயர்கள், மனித வர்த்தகத்தால், குற்றக்கும்பல்கள், ஒவ்வோர் ஆண்டும், 32 பில்லியன் டாலர்களுக்குமேல் வருவாய் பெறுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். (Fides)

31 July 2021, 14:38