தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமி மரணத்தையொட்டி, மும்பை கத்தோலிக்கரின் அமைதி போராட்டம் அருள்பணி ஸ்டான் சுவாமி மரணத்தையொட்டி, மும்பை கத்தோலிக்கரின் அமைதி போராட்டம் 

சுவாமியின் மரணம், சமுதாய மனசாட்சிக்கு ஓர் அதிர்ச்சி

பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த அருள்பணி சுவாமிக்கு நேர்ந்த பெருந்துயரம், இனிமேல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது – தமிழக முதலமைச்சர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஜூலை 05, இத்திங்களன்று, மனித உரிமைப் போராளி, மற்றும், இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் இறையடி சேர்ந்ததை முன்னிட்டு, தமிழகம், கேரளா, வடகிழக்கு இந்தியா உட்பட, இந்தியாவின் ஏறத்தாழ எல்லா மாநிலங்களின் ஆயர்களும், தங்களின் ஆழ்ந்த இரங்கல் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர், மற்றும், சமுதாயத்தில் நீதி மறுக்கப்பட்ட மக்களின் குரலாக மாறியவர் என்று கூறியுள்ள கேரளாவின் Varapuzha உயர்மறைமாவட்ட பேராயர் Joseph Kalathiparambil அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, நீதி கிடைத்ததா? என்பது, சமுதாயத்தின் மனசாட்சியில் இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மாவோயிஸ்ட் புரட்சியாளர்களோடு தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைதுசெய்த, இந்திய புலனாய்வு அமைப்பு, தன் குற்றச்சாட்டுகள் எதையும் நிரூபிக்கமுடியாமலே உள்ளது என்றுரைத்துள்ள பேராயர் Kalathiparambil அவர்கள், அவரின் மரணம், சமுதாய மனசாட்சிக்கு ஓர் அதிர்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும், சுவாமியின் மரணம் குறித்து, கேரள ஆயர்கள் பேரவையும் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அதேவேளை, வடகிழக்கு இந்திய ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள செய்தியில், முற்றிலும் குற்றமற்றவர் என்ற நிலையில், பல்வேறு நோய்களால் மிகவும் பலவீனமான, 84 வயது நிரம்பிய சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி அவர்களுக்கு, பிணையல் மறுக்கப்பட்டதற்கு காரணம் என்ன என்ற கேள்வியைக் கேட்க நாம் தவறியுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது, இந்திய நீதி அமைப்பின் நம்பகத்தன்மையை ஆட்டம்காண வைத்துள்ளது என்றும், உலகளவில், இந்தியாவின் பெயரைக் கறைப்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ள வடகிழக்கு இந்திய ஆயர்கள், ஸ்டான் சுவாமி அவர்களின் மாசற்றதன்மை, அதிகமான இளையோர், ஏழைகளுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணிக்கத் தூண்டுவதாக என்று கூறியுள்ளனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் இரங்கல்

இன்னும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் இறப்பையொட்டி, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக உழைத்த அவரது இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்த இவருக்கு நேர்ந்த பெருந்துயரம், இனிமேல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. (Agencies)

06 July 2021, 15:41