தேடுதல்

"மனித வர்த்தகத்திற்கு எதிரான பராமரிப்பு" - இணையவழி கொள்கைப்பரப்பு முயற்சி "மனித வர்த்தகத்திற்கு எதிரான பராமரிப்பு" - இணையவழி கொள்கைப்பரப்பு முயற்சி 

மனித வர்த்தகத்திற்கு எதிரான பராமரிப்பு - கொள்கைப்பரப்பு முயற்சி

ஜூலை 30, வருகிற வெள்ளியன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, Talitha Kum அமைப்பினர், இந்த இணையவழி கொள்கைப்பரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகத்திற்கு எதிராக, உலக அளவில், பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் Talitha Kum என்ற அமைப்பு, #CareAgainstTrafficking அதாவது, "மனித வர்த்தகத்திற்கு எதிரான பராமரிப்பு" என்ற கருத்தில், இணையவழி கொள்கைப்பரப்பு முயற்சியொன்றை ஜூலை 22, இவ்வியாழனன்று துவங்கியுள்ளது.

ஜூலை 30, வருகிற வெள்ளியன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, Talitha Kum அமைப்பினர், இந்த இணையவழி கொள்கைப்பரப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

உலகெங்கும் பணியாற்றும் துறவு சபையினரின் உலகத்தலைவர்கள் ஒன்றியமான UISG என்ற கூட்டமைப்பு, மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கென்று, 2009ம் ஆண்டு, உருவாக்கிய Talitha Kum அமைப்பு, இன்று 90 நாடுகளில் தீவிரமாகப் பணியாற்றிவருகிறது.

2020ம் ஆண்டில், Talitha Kum அமைப்பின் உதவியுடன், உலகின் பல நாடுகளில் மனித வர்த்தகத்திற்கு உள்ளான 17,000 பேர் காப்பாற்றப்பட்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு, கல்வி வசதி மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

உடலைக் கொல்லும் நஞ்சைப்போல, மனித சமுதாயத்தைக் கொன்றுவரும் மனித வர்த்தகம் என்ற நஞ்சை, இவ்வுலகிலிருந்து முற்றிலும் நீக்க, நல்மனம் கொண்டோர் அனைவரும் இணைந்து வந்து தீவிர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு, Talitha Kum அமைப்பின் உலக ஒருங்கிணைப்பாளரான அருள் சகோதரி காபிரியெல்லா பொத்தானி (Gabriella Bottani) அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம், ஆயுத வர்த்தகம் ஆகிய இரு வர்த்தகங்களுக்கு அடுத்ததாக உலகெங்கும் பரவியுள்ள மனித வர்த்தகத்தை ஒழிப்பதற்கு, ஐ.நா. நிறுவனம், ஜூலை 30ம் தேதியை, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளாக, 2013ம் ஆண்டு உருவாக்கியது.

2021ம் ஆண்டு கடைபிடிக்கப்படும் மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாளுக்கு, "பாதிக்கப்பட்டோரின் குரல்கள் வழி நடத்துகின்றன" என்பது மையக்கருத்தாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 July 2021, 14:21