தேடுதல்

Vatican News
கர்தினால் Luis Antonio Tagle கர்தினால் Luis Antonio Tagle  (Vatican Media)

போதிப்பதன், வாழும் சான்றாக இருக்க அருள்பணியாளருக்கு அழைப்பு

கர்தினால் தாக்லே: அதிகாரத்தோடு செயல்படுவதன் வழியாக அல்ல, மாறாக, எடுத்துக்காட்டான சான்று வாழ்வு வழியாக, இயேசுவை மக்களிடம் எடுத்துச் செல்வோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்

ஓர் அருள்பணியாளர், நம்பிக்கையாளர் மத்தியில் தாழ்ச்சியோடும் எளிமையோடும் பணியாற்றுவதன் வழியாக, அவர் தன் மறைப்பணியில் மகிழ்வைக் காண இயலும் என்று, அருள்பணியாளர்களின் சிறப்பு கருத்தரங்கு ஒன்றிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே.

ஐவரி கோஸ்ட் நாட்டின் Yamoussoukro நகரில் இடம்பெற்றுவரும் அருள்பணியாளர் சிறப்பு மாநாட்டில் கலந்துகொள்வோருக்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் தாக்லே அவர்கள், அதிகாரத்தோடு செயல்படுவதன் வழியாக அல்ல, மாறாக, எடுத்துக்காட்டான சான்று வாழ்வு வழியாக இயேசுவை மக்களிடம் எடுத்துச் செல்வோமென விண்ணப்பித்துள்ளார்.

இம்மாதம் 7ம்தேதி முதல் 11ம் தேதி வரை இடம்பெறும் இச்சிறப்பு மாநாட்டில் கர்தினால் தாக்லே அவர்களின் செய்தியை வாசித்தளித்த ஐவரி கோஸ்ட் நாட்டிற்கான திருப்பீடத் தூதர் பேராயர் பவுலோ போர்ஜியா (Paolo Borgia) அவர்கள், இயேசுவை வளர்க்கும் பொறுப்பு வழங்கப்பட்ட புனித யோசேப்பை எடுத்துக்காட்டாக ஒவ்வொரு அருள்பணியாளரும் எடுத்துக்கொள்ளவேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கடவுளின் இதயத்தைப் பிரதிபலிக்கும் தியாக அன்புடன் ஒவ்வொரு அருள்பணியாளரும் செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த பேராயர் போர்ஜியா அவர்கள், வாழ்வில் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளையும், சவால்களையும், விசுவாசத்தில் உறுதியாக நிற்பதன் வழியாக வெற்றி கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஐவரி கோஸ்டில் தற்போது இடம்பெற்றுவரும் அருள்பணியாளர் சிறப்பு மாநாட்டைப் பற்றி கருத்து வெளியிட்ட அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Ignace Bessi Dogbo அவர்கள், நாட்டிற்கும், உலகிற்கும், திருஅவைக்கும் பலன் தரும்வகையில், இந்த சிறப்பு மாநாடு புதுப்பித்தலைக் கொணரும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

'ஐவரி கோஸ்ட் நாட்டில் அருள்பணி வாழ்வும், பணியும் எதிர்கொள்ளும், உயிருக்கே சவால்விடும் சூழல்கள்' என்ற தலைப்பில் இடம்பெறும் அருள்பணியாளர் மாநாட்டில், அந்நாட்டின் 15 மறைமாவட்டங்களையும், துறவு சபைகளையும் சார்ந்த 250 அருள்பணியாளர்கள், 50 சிறப்புப் பிரதிநிதிகள் என 300 பேர் கலந்துகொள்கின்றனர்.

 

10 July 2021, 15:22