தேடுதல்

தென் ஆப்ரிக்காவின் பதட்ட நிலைகளைக் கட்டுப்டுத்தும் தேசிய பாதுகாப்பு படையினர் தென் ஆப்ரிக்காவின் பதட்ட நிலைகளைக் கட்டுப்டுத்தும் தேசிய பாதுகாப்பு படையினர் 

தென் ஆப்ரிக்காவுக்கு இறைவேண்டல்கள் தேவை

தென் ஆப்ரிக்காவை தற்போது முடக்கிப்போட்டிருக்கும் கலவரங்களும், வழிப்பறிக் கொள்ளைகளும், அந்நாட்டில் 1994ம் ஆண்டில் மக்களாட்சி அமைக்கப்பட்டபின்னர் இடம்பெறும் கடுமையான வன்முறைகள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் Jacob Zuma அவர்கள் கைதுசெய்யப்பட்டதையடுத்து, அந்நாட்டில் அண்மை நாள்களாக பதட்டநிலைகள் இடம்பெற்றுவரும்வேளை, அந்நாட்டிற்காக அனைவரும் இறைவேண்டல் செய்யுமாறு, அந்நாட்டு கர்தினால் Wilfrid Napier அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

ஜூலை 18, ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில், தென் ஆப்ரிக்காவில் அமைதி நிலவவும், உதவி தேவைப்படும் மக்களுக்கு அனைத்து உதவிகளும் ஆற்றப்படவேண்டும் எனவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விண்ணப்பித்ததற்கு, டர்பன் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயரான, கர்தினால் நாப்பியர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவின் தற்போதைய நிலைமை குறித்து, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் நாப்பியர் அவர்கள், தென் ஆப்ரிக்காவுக்காக திருத்தந்தை மேற்கொண்டுவரும் செபங்கள், அந்நாட்டிற்காக, திருஅவை முழுவதும் செபிக்கின்றது என்பதன் அடையாளம் என்று கூறினார்.

அந்நாட்டின் கத்தோலிக்க ஆயர் பேரவை, மற்றும், பல்வேறு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களோடு இணைந்து, தென் ஆப்ரிக்காவின் திருப்பீடத் தூதர் பேராயர் பீட்டர் வெல்ஸ் அவர்கள், திருப்பீடத்திற்கு, நாட்டின் நிலைமையை விவரித்து மடல் ஒன்றை அனுப்பியதற்கு, அவருக்கும், கர்தினால் நாப்பியர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

தென் ஆப்ரிக்காவை தற்போது முடக்கிப்போட்டிருக்கும் கலவரங்களும், வழிப்பறிக் கொள்ளைகளும், அந்நாட்டில் 1994ம் ஆண்டில் மக்களாட்சி அமைக்கப்பட்டபின்னர் இடம்பெறும் கடுமையான வன்முறை என்று செய்திகள் கூறுகின்றன. இவற்றில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், மற்றும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் Jacob Zuma அவர்கள், 15 மாதங்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

20 July 2021, 15:11