தேடுதல்

கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்  

தேசிய நீதி நாள் நிகழ்வுகளில், ஆயர்கள் கலந்துகொள்ள அழைப்பு

வறியோர் மற்றும், நசுக்கப்பட்டோருக்குப் பணியாற்றுகையில், அருள்பணி ஸ்டான் அவர்கள் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையை, தொடர்ந்து வாழவைப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் வானொலி

மனித உரிமைப் போராளி அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களை நினைவுகூரும் முறையில், ஜூலை 28, இப்புதனன்று, இந்திய இயேசு சபை துறவியரால், நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் தேசிய நீதி நாள் நிகழ்வுகளில், அனைத்து கத்தோலிக்கரும் கலந்துகொள்ளுமாறு, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் ஊக்கப்படுத்தியுள்ளார். 

இந்திய இயேசு சபைத் தலைவர், அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் டிசூசா அவர்கள்  அழைப்பு விடுத்துள்ள தேசிய நீதி நாளன்று ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் இடம்பெறும்  நிகழ்வுகளில், ஆயர்கள், கொரோனா பெருந்தொற்று விதிமுறைகளுக்கு உட்பட்டு, கலந்துகொள்ளுமாறு, கர்தினால் கிரேசியஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

இப்புதன் உள்ளூர் நேரம் மாலை 6 மணி முதல், 6.45 மணி வரை நடைபெறும் தேசிய நீதி நாள் பற்றி, அனைத்து ஆயர்களுக்கும் மடல் ஒன்றை அனுப்பியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இந்நாளில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய விவரங்கள், மற்றும், பதாகைகளை அருள்பணி ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் அனுப்பி உதவுவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்கள், ஜாம்ஷெட்பூரில் வாழ்ந்த குழுமத்தில் தானும் பல ஆண்டுகளுக்குமுன்னர் சில காலம் தங்கியிருந்தாகவும், அச்சமயத்தில் அருள்பணி ஸ்டான் அவர்கள், பழங்குடி இன மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத்தரும் நடவடிக்கைகளில், ஒவ்வொரு நாளும், ஒருமித்த தீவிர சிந்தனையுடன், தன்னையே அர்ப்பணித்து உழைத்ததைப் பார்த்துள்ளதாகவும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள், தன் மடலில் கூறியுள்ளார்.

அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணம், நம் எல்லாருக்குமே அதிர்ச்சியை அளித்தது,  கனிவும், தெளிந்த சிந்தனையும் கொண்ட அவரை, நாம் இப்போது மிகுந்த பாசத்தோடு நினைவுகூருகிறோம், வறியோர் மற்றும், நசுக்கப்பட்டோருக்குப் பணியாற்றுகையில், அவர் கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையை, தொடர்ந்து வாழவைப்பதே, நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதை என்றும், மும்பை பேராயரான கர்தினால் கிரேசியஸ் அவர்களின் மடல் கூறுகிறது.

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் 1937ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி பிறந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், 1970ம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலாவில் இறையியல் படிப்பையும், சமூகவியலில் முதுகலைப்பட்ட படிப்பையும் முடித்தவர். அதே ஆண்டில் மனிலாவில் அருள்பணித்துவ திருப்பொழிவு பெற்றார். ஜாம்ஷெட்பூர் இயேசு சபை மாநிலத்தில், இயேசு சபை துறவியாக தன்னை இணைத்துக்கொண்ட இவர், ஜார்க்கண்ட் பழங்குடி இன மக்களின் துயர்நிலையைக் கண்ணுற்று, தன் வாழ்வில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக, அம்மக்களுக்காக உழைத்தவர். இவர், 2021ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, விசாரணைக்கு உட்பட்ட ஒரு கைதியாக, கடும் நோயால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். (Ind.Sec/Tamil)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 15:03