தேடுதல்

சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich 

வன்முறை கலாச்சாரம் குறித்து சிக்காகோ கர்தினால்

பெருந்தொற்றிலிருந்து வெளியேறி, சுமுகமான வாழ்வை மேற்கொள்ளலாம் என நம்பிய அமெரிக்க ஐக்கிய நாட்டு மக்களுக்கு, தற்போது வன்முறைக் கலாச்சார அச்சுறுத்தல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் சிக்காகோ நகரில் அண்மைய நாள்களில் நடைபெற்ற  துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளில் நூறு பேர் வரை பலியாகியுள்ளது குறித்து தன் வன்மையான கண்டனத்தையும் கவலையையும் தெரிவித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், சிக்காகோ பேராயர், கர்தினால் Blase Cupich.

வன்முறைக் கலாச்சாரத்திற்கு குழந்தைகள் உட்பட எண்ணற்றோர் அமெரிக்க ஐக்கிய நாட்டில் பலியாகிவருவதும், தினசரி வாழ்வில் அச்சத்துடனேயே வாழவேண்டியிருப்பதும், துப்பாக்கிக் கலாச்சாரம் தொடர்வதும், மிகவும் அச்சத்தையும் கவலையையும் தருவதாக உள்ளது என, தன் செய்தியில் உரைத்துள்ளார் கர்தினால் Cupich.

பெருந்தொற்றிலிருந்து வெளியே வந்து ஒரு சுமுகமான வாழ்வை மேற்கொள்ளலாம் என நம்பிக்கொண்டிருந்த மக்களுக்கு, தற்போது வன்முறைக் கலாச்சாரம் அச்சுறுத்தலைத் தந்துகொண்டிருக்கிறது என்று கூறிய கர்தினால் Cupich அவர்கள், இத்தகைய வன்முறை நிகழ்வுளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என அழைப்புவிடுத்தார்.

கண்காணிப்புகளை அதிகரித்தல், குற்றவியல் நீதி அமைப்புக்களைப் புதுப்பித்தல், சட்டவிரோத துப்பாக்கிகளைத் தடைசெய்தல், குற்றக்கும்பல்களை ஒடுக்குதல், ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் மேம்பாட்டுத் திட்டங்களைக் கொணர்தல், கல்விக்கும் குடும்ப வாழ்வுக்கும் ஊக்கமளித்தல், என பலர் முன்வைத்துள்ள பரிந்துரைகளையும், தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Cupich.

சோகத்தையும், அச்சத்தையும், நம்பிக்கையிழப்பையும், வன்முறைகள் உருவாக்கும்போது, அதனால் ஒருவர் மற்றவரிலிருந்து விலகிப்போவது மட்டுமல்ல, மற்றவர்கள் மீது காட்டப்படவேண்டிய இரக்கம், பொறுப்புணர்வு போன்றவைகளும் காணாமல் போகின்றன என்ற கவலையையும் வெளியிடும் சிக்காகோ பேராயர், இத்தகைய நிலைகளில் நல்மாற்றத்தைக் கொணர வேண்டியது, திருஅவையின் கடமையாகிறது என கூறியுள்ளார்.

இன்றைய நிலைகள் குறித்து கேள்வி கேட்பதும், செவிமடுப்பதும், இறைவேண்டல் செய்வதும், கலந்துரையாடல் நடத்துவதும், இறைவன் காட்டும் வழிகளில் நடைபோடுவதும், அவரோடு தொடர்பில் இருப்பதும், எச்சூழலிலும் நம்பிக்கையை கைவிடாதிருப்பதும், கிறிஸ்தவர்களுக்கு காட்டப்படும் வழிகள் என, தன் செய்தியில் கூறும் கர்தினால் Cupich அவர்கள், 'அமைதி வேண்டுமெனில் நீதிக்காக உழையுங்கள்' என்று திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்கள் கூறிய வார்த்தைகளுடன் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

10 July 2021, 15:29