தேடுதல்

Vatican News
கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் 

சதுப்பு நிலத்தில் தொழிற்சாலை வேண்டாம் – கர்தினால் இரஞ்சித்

Muthurajawela சதுப்பு நிலத்தில் தொழிற்சாலையை அமைக்க அரசு திட்டமிட்டு வருவதற்கு கர்தினால் இரஞ்சித் அவர்கள் ஜூலை 6 இச்செவ்வாயன்று நடத்திய ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில், தன் எதிர்ப்பை பதிவுசெய்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இலங்கையின் தலைநகர் கொழும்புவில், திரவமயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று நிறுவப்படுவதற்கு, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொழும்புவுக்கு அருகே, பாதுகாக்கப்பட்டு வரும், Muthurajawela சதுப்பு நிலத்தில் இந்த தொழிற்சாலையை அமைக்க அரசு திட்டமிட்டு வருவதற்கு கர்தினால் இரஞ்சித் அவர்கள், ஜூலை 6 இச்செவ்வாயன்று நடத்திய ஒரு செய்தியாளர்கள் கூட்டத்தில், தன் எதிர்ப்பை பதிவுசெய்தார்.

சதுப்பு நிலப்பகுதியில் வாழும் பல்வேறு உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், அப்பகுதியை நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை, அரசு உடனே நிறுத்த வேண்டும் என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

இந்த தொழிற்சாலையைக் குறித்து மக்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட அரசு 30 நாள்கள் அவகாசம் கொடுத்துள்ளது எனபதை குறிப்பிட்ட கர்தினால் இரஞ்சித் அவர்கள், தற்போதைய கோவிட் பெருந்தொற்று நேரத்தில், மக்கள் கூடிவந்து விவாதிக்கும் நிலையில் சூழ்நிலை சரியில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Muthurajawela சதுப்பு நிலத்தில், 120 ஏக்கர் நிலத்தில் இந்தத் தொழிற்சாலை உருவாக்கப்பட்டால், அது மக்கள் வாழும் பகுதிகளில் வெள்ளத்தை உருவாக்கும் ஆபத்து உள்ளது என்றும் கர்தினால் இரஞ்சித் அவர்கள் எடுத்துரைத்தார்.

இலங்கை நாடு, அரசுத்தலைவருக்கும், அவரது மந்திரிகளுக்கும் தாரைவார்த்து கொடுக்கப்படவில்லை என்பதை செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், மக்களின் நலனை மையப்படுத்தாமல் தனிப்பட்டோரின் நலனை மையப்படுத்தும் முயற்சிகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார். (AsiaNews)

07 July 2021, 15:25