தேடுதல்

Vatican News
லெபனோன் அமைதிக்கென இறைவேண்டல் லெபனோன் அமைதிக்கென இறைவேண்டல்   (Vatican Media)

லெபனோனின் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உடனடியாக...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனோன் நாட்டின் அரசியல், மற்றும், இஸ்லாம் ஆன்மீகத் தலைவர்களை வத்திக்கானில் சந்தித்துப் பேசவேண்டும் - கர்தினால் Al-Rahi

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

லெபனோன் நாட்டில் தூதரகங்களை அமைத்துள்ள நாடுகளின் உதவியோடு, அந்நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் வழிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று, அந்நாட்டு மாரனைட் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் Beshara Al-Rahi அவர்கள், லெபனோன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"அமைதிக்கென ஆண்டவராகிய கடவுள் திட்டங்கள் வகுத்துள்ளார்: லெபனோன் அமைதிக்கென இணைவோம்" என்ற மையக்கருத்துடன், ஜூலை 1, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள், மற்றும், பிரதிநிதிகளோடு, வத்திக்கானில் நடத்திய ஓர் இறைவேண்டல் நாள் பற்றி அளித்த பேட்டியில், கர்தினால் Al-Rahi அவர்கள் இவ்வாறு கூறினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனோன் நாட்டின் அரசியல், மற்றும், இஸ்லாம் ஆன்மீகத் தலைவர்களை வத்திக்கானில் சந்தித்துப் பேசவேண்டும் என தான் கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்த கர்தினால் Al-Rahi அவர்கள், அத்தலைவர்களை, தனித்தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு, தான் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

வத்திக்கானில் நடைபெற்ற ஒரு நாள் இறைவேண்டல் நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை, லெபனோன் தலைவர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு, தான் அவர்களை ஊக்கமளிக்கவிருப்பதாகவும், கர்தினால் Al-Rahi அவர்கள், தொலைக்காட்சி பேட்டியில் குறிப்பிட்டார்.

லெபனோன் நாட்டில் தற்போதைய பொருளாதாரச் சரிவு மற்றும், அரசியலின் தேக்கநிலை ஆகியவற்றுக்கு காரணம் யார் என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Al-Rahi அவர்கள், நாட்டின் அரசுத்தலைவர் உட்பட, அனைவருமே, அரசியலமைப்பை மீறுகின்றனர் என்றுரைத்தார்.

இதற்கிடையே, லெபனோனின் நெருக்கடி நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட, யுனிசெப் அமைப்பு, அந்நாட்டில் முப்பது விழுக்காட்டிற்கும் அதிகமான சிறார் பசியால் வாடுகின்றனர் எனவும், 77 விழுக்காட்டு குடும்பங்கள் போதுமான உணவை வாங்குவதற்கு வசதியின்றி உள்ளன எனவும், 15 விழுக்காட்டு குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புகின்றன எனவும் கூறியுள்ளது. (AsiaNews)

03 July 2021, 14:54