தேடுதல்

புதைக்கப்பட்ட பழங்குடியின குழந்தைகளின் நினைவாக, பள்ளியின் வாசலில்.... புதைக்கப்பட்ட பழங்குடியின குழந்தைகளின் நினைவாக, பள்ளியின் வாசலில்.... 

கனடா பழங்குடியினருக்கும் திருஅவைக்கும் இடையே ஒப்புரவு

பழங்குடியினரின் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் புரிந்துகொள்ளாத காரணத்தால், கத்தோலிக்கத் திருஅவை, பழங்குடியினரின் குழந்தைகளை, மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்க்கும் முயற்சியாக, பள்ளிகளைத் துவக்கினர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கனடா நாட்டு பழங்குடியினரின் குழந்தைகள் தங்கிப் பயில்வதற்கென உருவாக்கப்பட்ட பள்ளி ஒன்றில் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அந்நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்கள், பழங்குடியினருடன் பல்வேறு ஒப்புரவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கனடா நாட்டின் டொரான்டோ (Toronto) உயர் மறைமாவட்டம் பழங்குடியினருக்கென்று பள்ளிகள் நடத்தவில்லை என்றாலும், கத்தோலிக்கத் திருஅவைக்கும், பழங்குடியினருக்கும் இடையே வளரவேண்டிய ஒப்புரவை மனதில் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பழங்குடியினரின் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் புரிந்துகொள்ளாத காரணத்தால், கத்தோலிக்கத் திருஅவை, பழங்குடியினரின் குழந்தைகளை, மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்க்கும் முயற்சியாக, இந்தப் பள்ளிகளைத் துவக்கினர் என்பதை ஏற்றுக்கொள்ளும் தலத்திருவை, தற்போது துவங்கப்பட்டுள்ள ஒப்புரவு முயற்சிகளின் முதல்படியாக, பழங்குடியினரின் கலாச்சாரத்தையும், ஆன்மீகத்தையும் புரிந்துகொள்வது அவசியம் என்று கூறியுள்ளது, டொரான்டோ உயர் மறைமாவட்டம்.

இந்த ஒப்புரவு முயற்சிகளின் முக்கிய அங்கமாக, குழுக்களின் சந்திப்புக்கள், குறிப்பாக, பழங்குடியினரின் உண்மை நிலைகளுக்கு செவிமடுத்தல், ஒப்புரவைக் கொணரும் இறைவேண்டல் சந்திப்புக்களை மேற்கொள்ளுதல் என்ற திட்டங்களை டொரான்டோ உயர் மறைமாவட்டம் முன்வைத்துள்ளது.

1883ம் ஆண்டுக்கும் 1996ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில், 1,50,000த்திற்கும் அதிகமான குழந்தைகள், பழங்குடியினரின் குடும்பங்களைவிட்டு பிரிக்கப்பட்டு, கனடா அரசும், திருஅவையும் இணைந்து நடத்திய பள்ளிகளில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டனர். இக்குழந்தைகளில், குறைந்தது, 4,000 பேர், இந்த பள்ளிகளில் உயிரிழந்தனர்.

பழங்குடியினருக்கும், கனடா திருஅவைக்கும் இடையே ஒப்புரவைக் கொணரும் ஒரு முயற்சியாக, இவ்வாண்டு டிசம்பர் மாதம், 17ம் தேதி முதல் 20ம் தேதி முடிய, வத்திக்கானில் நடைபெறும் ஒரு கூட்டத்தில், கனடா நாட்டு பழங்குடியினரின் பிரதிநிதிகள், மற்றும் திருஅவையின் பிரதிநிதிகளுடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்பது நினைவுக்கூரத்தக்கது.

21 July 2021, 13:36