தேடுதல்

இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்குப் பின் இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்குப் பின்  

NIAன் எதிர்ப்பால் மும்பை உயர் நீதிமன்றத்தின் புகழ்மொழி இரத்து

அருள்பணி ஸ்டான் அவர்கள், பழங்குடி மக்களுக்கு ஆற்றியுள்ள பணிகள் பற்றி மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்த புகழ்மொழிகளுக்கு, தேசிய புலனாய்வு முகமை கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், அச்சொற்களை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் ஆற்றியுள்ள பணிகளைப் புகழ்ந்துபேசி, அப்பணிகளுக்கு, தனது மிகப்பெரும் மரியாதையை செலுத்திய, மும்பை உயர் நீதிமன்றம், அந்த புகழுரைக்கு, இந்திய தேசிய புலனாய்வு முகமை (NIA), தன் எதிர்ப்பை தெரிவித்ததோடு, அதனை நீதிபதிகள் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதால், அந்தப் புகழுரையை தாங்கள் திரும்பப் பெறுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர் என்று ஊடகங்கள் கூறியுள்ளன.
பார்க்கின்சன்ஸ் எனப்படும் நரம்புத்தளர்ச்சி நோயால் கடுமையாய் பாதிக்கப்பட்டிருந்த 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு பிணையல் வழங்கப்படவேண்டும் என்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனுவை, அவரது மறைவுக்குப்பின், இம்மாதம் 19ம் தேதி, இத்திங்களன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், S.S.Shinde, N.J.Jamadar ஆகிய இருவரும் விசாரித்தனர்.
அவ்விசாரணயின்போது பேசிய நீதிபதி ஷிண்டே அவர்கள், அருள்பணி ஸ்டான் அவர்கள், மிக உன்னதமான மனிதர், அவர் மிகச் சிறந்த சேவையை சமுதாயத்திற்கு ஆற்றியுள்ளார், சட்டமுறைப்படி அவருக்கு எதிராக என்ன கூறப்பட்டிருந்தாலும், அவர் ஆற்றியுள்ள பணிக்கு, நாங்கள் மிகுந்த மரியாதை செலுத்துகிறோம் என்று குறிப்பிட்டார்.
நீதிபதிகளும் மனிதர்களே
இந்தப் புகழ்மொழிகளுக்கு, தேசிய புலனாய்வு முகமை, தன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்ததால், அச்சொற்களை நீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ள அதேவேளை, நீதிபதிகளும் மனிதர்களே எனவும், அருள்பணி ஸ்டான் அவர்களின் மரணம், ஜூலை 5ம் தேதி திடீரென இடம்பெற்றது தங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது எனவும், கூறிய நீதிபதி ஷிண்டே அவர்கள், விசாரணையின்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் (UAPA) அருள்பணி ஸ்டான் அவர்கள் கைது செய்யப்பட்டது, அல்லது, சிறையில் வைக்கப்பட்டது குறித்து எந்தக் கருத்தும் கூறப்படவில்லை எனவும், கூறியுள்ளார்.
அருள்பணி ஸ்டான் அவர்களுக்கு எதிராக, சட்டமுறைப்படி என்ன கூறப்பட்டிருந்தாலும், அது வேறொரு விடயம், அருள்பணி ஸ்டான் அவர்கள் பற்றி, தனிப்பட்ட முறையில் நான் கூறியது எதுவும் யாரையும் புண்படுத்தியிருந்தால், அவ்வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன், என்று கூறிய நீதிபதி ஷிண்டே அவர்கள், நாங்களும் மனிதர்கள்தான் என்பதால், இதுபோன்று சில காரியங்கள், திடீரென நிகழ்கின்றன என்றும், எங்களது பெருமுயற்சி எப்போதுமே சமநிலைகாப்பது என்றும், கூறியுள்ளார்.
அருள்பணி ஸ்டான் அவர்கள் விவகாரத்தில், எந்த தனிப்பட்ட வழக்கறிஞர் அல்லது, அமைப்புக்கு எதிராக, தனிப்பட்டு எந்தக் குறையும் கூறப்படவில்லை என்றும், நீதிபதி ஷிண்டே அவர்கள் கூறியுள்ளார்.
84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் அவர்கள், மும்பை டலோஜா சிறையில், அதிகாரிகளால், மனிதமற்ற முறையில் நடத்தப்பட்டார். இறுதியில் அவர் சிறையில் கோவிட்-19 பெருந்தொற்றாலும் தாக்கப்பட்டார். அவரது மருத்துவப் பிணையல் மனு இறுதியாக விசாரணைக்கு வரவேண்டிய 2021ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, மும்பை திருக்குடும்ப மருத்துவமனையில் அவர் உயிர்துறந்தார்.
 

24 July 2021, 15:03