தேடுதல்

கொலம்பிய வன்முறை கொலம்பிய வன்முறை 

வன்முறைகளைக் கைவிட்டு, வருங்காலத்திற்காக உழைக்க..

கொலம்பிய ஆயர்கள் : பகைமை, மற்றும், பிரிவினைகளின் பாதையில் நாட்டை இழுத்துச்செல்ல முயல்வது, மேலும் கேடு விளைவிப்பதாகவே இருக்கும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொலம்பியாவில் தற்போது இடம்பெறும் வன்முறைகளால் தங்கள் நம்பிக்கையை இழக்காமல், இயேசுவின் குரலுக்குச் செவிமடுத்து தொடர்ந்து நடைபோடவேண்டும் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

வருமான வரி கட்டுவதற்காக குறிக்கப்பட்டுள்ள வருமான வரம்பைக் குறைப்பதற்கு கொலம்பியா அரசு முன்வைத்துள்ள பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஏப்ரல் 28ம் தேதி  இடதுசாரி கட்சிகளால் துவக்கி வைக்கப்பட்ட தேசிய அளவிலான போராட்டம், இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர், கொலம்பிய ஆயர்கள்.

அரசுக்கு எதிரான போராட்டங்களில் இதுவரை குறைந்தது 59 உயிர்களை இழந்துள்ளதையும், 2300 பேர் காயமடைந்துள்ளதையும் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்ட கொலம்பிய ஆயர்கள், மிகப்பெரும் சவால்களை எதிர்நோக்கிவரும் கொலம்பியாவில், மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடைபோட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, வருங்காலம் குறித்த நம்பிக்கையின்றி வாழும் மக்களின் நிலைகளை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு குடிமகனும் மற்றவர்களுக்காகத் தியாகங்களை ஆற்ற முன்வரவேண்டும் என்ற விண்ணப்பத்தை முன்வைத்த ஆயர்கள், பசியாலும் நோயாலும் பல குடும்பங்கள் வாடுவதைக் காண்பது, வேதனை தருவதாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஜூலை 20, செவ்வாய்க்கிழமையன்று கொலம்பியாவில் கொண்டாடப்பட்ட, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ள ஆயர்கள், பகைமை மற்றும் பிரிவினைகளின் பாதையில் நாட்டை இழுத்துச்செல்ல முயல்வது, மேலும் கேடு விளைவிப்பதாகவே இருக்கும் என எச்சரித்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றால் நாடு பாதிக்கப்பட்டுள்ள இன்றையச் சூழலில், அனைத்து மக்களும் வன்முறைகளைக் கைவிட்டு, நாட்டின் வருங்காலத்தையே மனதில்கொண்டு உழைக்கவேண்டும், என குரல் எழுப்பியுள்ள கொலம்பிய நாட்டு ஆயர்கள், ஒப்புரவு, நீதி, வளர்ச்சி ஆகியவைகளை வலியுறுத்தி உழைத்து வருகின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 July 2021, 15:07