ஆலயம் அழிக்கப்பட்டுள்ளது குறித்து கத்தோலிக்கர் அதிர்ச்சி
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
டெல்லியில் அரசு அதிகாரிகளால் அழிக்கப்பட்டுள்ள சிறு மலர் கத்தோலிக்க ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உதவுமாறு, Faridabad ஆயர் Kuriakose Bharanikulangara அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.
டெல்லியின் Lado Sarai என்ற பகுதியில், சீரோ-மலபார் வழிபாட்டுமுறை கத்தோலிக்கரால் மேலாண்மை செய்யப்பட்டுவந்த சிறு மலர் கத்தோலிக்க ஆலயம், முறையான அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளது என்று கூறி, அது, ஜூலை 12, இத்திங்களன்று, டெல்லி வளர்ச்சித்திட்ட அதிகாரிகளால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யூக்கா செய்தியிடம் கூறிய, ஆயர் Bharanikulangara அவர்கள், இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ள நிலப்பகுதி, 2006ம் ஆண்டில் விலைக்கு வாங்கப்பட்டு, அவ்விடத்தில் ஆலயம் கட்டப்பட்டது என்றும், கடந்த 12 ஆண்டுகளாக, இவ்வாலயத்தில் திருவழிபாடுகள் நடைபெற்று வருகின்றன என்றும் கூறினார்.
இந்த நிலம் சார்ந்த ஆவணங்கள் எல்லாம் முறைப்படி உள்ளன என்றும், இவ்விவகாரம் குறித்து பிரதமர் மோடி அவர்கள், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில், இது தவறான செய்தியை வெளிப்படுத்தும் என்றும், ஆயர் Bharanikulangara அவர்கள் கூறியுள்ளார்.
தற்போது இறைவேண்டல் செய்வதற்கு இடமில்லாத கத்தோலிக்கருக்கு, அரசு மாற்று வழிகளை அமைத்துக் கொடுக்கவேண்டும் என்றும் ஆயர் கூறியுள்ளார்.
இதற்கிடையே, இந்த ஆலயம் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது குறித்து ஊடகங்களிடம் பேசிய, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், இந்த ஆலயம் அமைந்திருந்த பகுதி, மத்திய அரசின்கீழ் உள்ளது எனவும், ஆலயத்தை இழந்துள்ள கத்தோலிக்கருக்கு, தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்குவதாகவும் கூறியுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்