தேடுதல்

Vatican News
அமேசான் பருவமழைக் காடுகள் அமேசான் பருவமழைக் காடுகள்  (AFP or licensors)

அமேசான் மழைக்காடுகளில் பணியாற்றிய மறைப்பணியாளர்கள்

பெரு நாட்டு மழைக்காடுகளில் பணியாற்றும் தொமினிக்கன் சபை துறவிகள், தங்களின் முன்னோர்கள் ஆற்றிவந்த மறைப்பணிகளைத் தொடர்ந்து ஊக்கமுடன் ஆற்ற தீர்மானித்துள்ளனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் அமெரிக்க நாடான பெரு, இம்மாதம் 28ம் தேதி, தன் 200வது சுதந்திர நாளைச் சிறப்பிக்கும்வேளை, அந்நாட்டின் அமேசான் பருவமழைக் காடுகளில் பணியாற்றிய மறைப்பணியாளர்களின் பணிகளைத் தொடர்ந்து ஆற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது, பெரு நாட்டு தலத்திருஅவை.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கத்தால், 200ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் ஆடம்பரமாக இடம்பெறாது எனினும், பெரு நாட்டு அரசியலமைப்பின் விழுமியங்களுக்கு ஒத்தமுறையில், சமுதாயங்களைத் தொடர்ந்து கட்டியெழுப்ப, 2050ம் ஆண்டை நோக்கிய ஆறு அம்சத் திட்டங்களை வகுத்துள்ளது, தலத்திருஅவை. 

மக்களின் அடிப்படை உரிமைகள், மற்றும் மாண்பு; பணிகளுக்கு வாய்ப்புக்கள் மற்றும், வழிமுறைகள்; நாடு, மற்றும் அரசு; பொருளாதாரம், போட்டிமனப்பான்மை மற்றும், வேலைவாய்ப்பு; மாநில வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு; தேசிய வளங்கள் மற்றும், சுற்றுச்சூழல் ஆகிய பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் மறைப்பணிகளை மேற்கொள்ளவிருக்கும் பெரு நாட்டு தலத்திருஅவை, பல்வேறு புவியியல், சமுதாயவியல், பொருளாதாரவியல், மற்றும், கலாச்சாரயியல் ஆகியவற்றின் அடிப்படையில் பணிகளை ஆற்ற திட்டமிட்டுள்ளது. 

பெரு நாட்டு மழைக்காடுகளில் பணியாற்றும் தொமினிக்கன் சபை துறவிகள், தங்களின் முன்னோர்கள் ஆற்றிவந்த மறைப்பணிகளைத் தொடர்ந்து ஊக்கமுடன் ஆற்றவும், கடினமான சூழல்களில் பணியாற்றிய முன்னோர்களுக்கு நன்றி சொல்லவும், இந்த 200ம் ஆண்டில் திட்டமிட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது. (Fides)

02 July 2021, 15:43