தேடுதல்

Vatican News
"ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?" (திபா 15:1) "ஆண்டவரே, உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?" (திபா 15:1) 

விவிலியத்தேடல்: திருப்பாடல் 15 – இறைவனோடு குடியிருப்போர் 1

கடவுளோடு தங்கியிருக்க, அல்லது, கடவுளோடு வாழ்வதற்குத் தகுதியுள்ளோர் கொண்டிருக்கும் பண்புகள், 15ம் திருப்பாடலில் கூறப்பட்டுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருப்பாடல் 15 – இறைவனோடு குடியிருப்போர் 1

'இறைப்பற்று இல்லாதவரை', இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில், 'இறைவனே இல்லை என்ற மமதையில் வாழ்பவரை' மையப்படுத்தி, நாம் சிந்தித்த 14ம் திருப்பாடலைத் தொடர்ந்து, 15ம் திருப்பாடல், 'இறைவனுடன் வாழ்பவர்' எத்தகையவர் என்பதைக் கூறுகிறது. 'கடவுள் மனிதரிடம் எதிர்பார்ப்பவை' என்று, இத்திருப்பாடல் தலைப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், கடவுளோடு தங்கியிருக்க, அல்லது, கடவுளோடு வாழ்வதற்குத் தகுதியுள்ளோர் கொண்டிருக்கும் பண்புகள், இப்பாடலில் கூறப்பட்டுள்ளன.

உடன்படிக்கை பேழை எருசலேமுக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வையொட்டி (2 சாமுவேல் 6) இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம் என்பது, விவிலிய விரிவுரையாளர்களின் கருத்து. உடன்படிக்கை பேழை எருசலேமுக்கு கொண்டுவரப்பட்ட நிகழ்வு, சாமுவேல் 2ம் நூலில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது:

2 சாமுவேல் 6:15,17

தாவீதும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆரவாரத்தோடும் எக்காள முழக்கத்தோடும் ஆண்டவரின் பேழையைக் கொண்டுவந்தார்கள்... ஆண்டவரின் பேழையைக் கொணர்ந்து அதற்கென நிறுவிய கூடாரத்தின் நடுவில் அதை வைத்தார்கள். தாவீது ஆண்டவர் முன்பு எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தினார்.

பேழை நிறுவப்பட்டப்பின், கூடாரத்திற்கு முன் நின்று, ஓர் அரசனாக பலிகளை செலுத்திய தாவீது, அக்கூடாரத்திற்குள் செல்வதற்கு இயலாமல் வெளியிலேயே நிற்கவேண்டியதாயிற்று. கூடாரத்திற்குள் செல்லும் உரிமை, லேவியர் இனத்தைச் சேர்ந்த குருக்களுக்கே இருந்தது. தான் கூடாரத்திற்குள் செல்ல இயலாத ஏக்கத்தை, தாவீது, 15ம் திருப்பாடலின் முதல் வரிகளில், ஏக்கம் நிறைந்த இரு கேள்விகளாக எழுப்பியுள்ளார். "ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?" (திபா 15:1) என்ற முதல் இறைவாக்கியத்தில், இறைவனுடன் தங்கவும், குடியிருக்கவும், தாவீது கொண்டிருந்த ஏக்கத்தை, இக்கேள்விகள் வழியே புரிந்துகொள்ளலாம்.

இறைவனுடன் தங்குதல், குடியிருத்தல், ஆகிய எண்ணங்களை சிந்திப்பதற்குமுன், இவ்விரு கேள்விகளில், குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டவரின் 'கூடாரம்' மற்றும் 'திருமலை' என்ற இரு இடங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இஸ்ரயேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான இவ்விரு இடங்களைக் குறித்து புரிந்துகொள்வது நல்லது.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மக்களை மீட்டு, செங்கடலைப் பிளந்து, மக்களை வழிநடத்திய இறைவன், அவர்களை சந்திக்க தெரிவுசெய்த முதல் இடம், சீனாய் மலை. அதிலும், குறிப்பாக, அம்மக்கள் அனைவரையும் நேரடியாகச் சந்திக்காமல், அவர்களின் பிரதிநிதியான மோசேயை மட்டும், இறைவன், நேருக்கு நேர் சந்தித்ததை, நாம் விடுதலைப்பயண நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்: ஆண்டவர் சீனாய் மலைமேல் மலையுச்சியில் இறங்கிவந்தார். அப்போது ஆண்டவர் மோசேயை மலையுச்சிக்கு அழைக்க, மோசே மேலே ஏறிச்சென்றார். (வி.ப. 19:20)

இச்சந்திப்பில், இஸ்ரயேல் மக்கள் பின்பற்றவேண்டிய கட்டளைகளை, இறைவன், மோசே வழியே வழங்கினார் என்பதை அறிவோம்.

சீனாய் மலையில் இறைவனைச் சந்தித்த மோசே, தொடர்ந்து, தன் மக்களோடு மேற்கொண்ட பாலைநிலப் பயணத்தில், இறைவனைச் சந்திக்க, கூடாரம் அமைத்தார் என்பதை, விடுதலைப்பயண நூல் இவ்வாறு சித்திரிக்கிறது: மோசே பாளையத்துக்கு வெளியே கூடாரத்தைத் தூக்கிச்செல்வதும், பாளையத்திற்கு வெகுதூரத்தில் கூடாரம் அடிப்பதும் வழக்கம். அதற்கு அவர் சந்திப்புக் கூடாரம் என்று பெயரிட்டார். ஆண்டவரைத் தேடும் யாவரும் பாளையத்துக்கு வெளியேயுள்ள சந்திப்புக் கூடாரத்திற்குச் செல்வர்... மோசே கூடாரத்தில் நுழைந்ததும், மேகத்தூண் இறங்கி வந்து கூடார நுழைவாயிலில் நின்றுகொள்ளும். அப்போது கடவுள் மோசேயிடம் பேசுவார்... ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போலவே ஆண்டவரும் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார். (வி.ப. 33:7,9,11)

இவ்வாறு, சீனாய் திருமலையின் மீதும், சந்திப்புக் கூடாரத்திலும், கடவுள், மோசேயை, முகமுகமாய்ச் சந்தித்தார் என்பதை அறிந்திருந்த தாவீது, தன்னால் இறைவனை நேரில் சந்திக்க இயலவில்லை என்ற ஏக்கத்தை, 15ம் திருப்பாடலின் அறிமுக வரிகளில், கேள்விகளாக வெளிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இவ்விரு கேள்விகளில், தாவீது பயன்படுத்தியுள்ள தங்குதல், குடியிருத்தல் என்ற இரு சொற்கள் நம் சிந்தனைகளைத் தூண்டுகின்றன. 'உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?' என்ற முதல் கேள்வியில், கடவுளின் கூடாரத்தில், அவரது விருந்தாளியாக குறுகிய காலம் தங்குவதைப்பற்றி பேசும் தாவீது, அடுத்துவரும், 'உம் திருமலையில் குடியிருப்பவர் யார்?' என்ற கேள்வியில், கடவுளோடு குடியிருக்கும் பெரும் பேற்றினைக் குறித்து பேசுகிறார்.

கடவுளின் திருமலையில் குடியிருப்பதைக் குறித்து தாவீது பேசுவது, 'ஆண்டவரே என் ஆயர்' என்ற 23ம் திருப்பாடலின் இறுதியில், தாவீது கூறியுள்ள புகழ்பெற்ற சொற்களை நினைவறுத்துகிறது. "நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்" (திபா 23:6) என்பன, 23ம் திருப்பாடலின் இறுதிச் சொற்கள். இந்த இறுதி வரியில், முதலில், "ஆண்டவரின் இல்லம்" என்ற சொற்களை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முயல்வோம்.

நாம் குடும்பமாய் வாழுமிடத்தைக் குறிக்க, ஆங்கிலத்தில், இரு சொற்களைப் பயன்படுத்துகிறோம். House மற்றும் Home. தமிழில் இதை ‘வீடு’ அல்லது ‘இல்லம்’ என்று சொல்லலாம். கல், மண், சிமென்ட், கம்பிகள் என்று, பல பொருட்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடத்தை, House, அதாவது, வீடு என்று சொல்கிறோம். ஓர் இல்லம் உருவாக, பொருள்கள் தேவையில்லை, மனங்கள் தேவை. மனங்கள் ஒன்றி உருவாகும் ஓர் அமைப்பையே, நாம் Home, அதாவது, இல்லம் என்று சொல்கிறோம்.

இல்லம் என்ற வார்த்தையைக் கேட்டதும் நம் மனதில் தோன்றும் ஓர் எண்ணம் பாதுகாப்பு. இந்தப் பாதுகாப்பை, நான்கு சுவர்களோ, தலைக்கு மேல் உள்ள கூரையோ தருவதில்லை. நம்மைச் சூழ்ந்திருக்கும் இதயங்கள் தரும் பாதுகாப்பே, நாம் இல்லத்தில் இருக்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்தும். 'ஆண்டவரின் இல்லத்'தைக் குறித்து, திருப்பாடல் ஆசிரியர், வேறொரு திருப்பாடலில் கூறியுள்ள அழகிய வரிகளும் நமக்குப் பழக்கமான வரிகள்தாம்:

திருப்பாடல்கள் 27:4

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்: அதையே நான் நாடித் தேடுவேன்: ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்கவேண்டும், ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்: அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறியவேண்டும்.

இந்த வரிகளில், ஆசிரியர் குறிப்பிடும் 'ஆண்டவரின் இல்லம்', வெறும் கட்டடம் அல்ல. கடவுளின் அருகாமை, அதனால் கிடைக்கும் கடவுளின் முக தரிசனம், கடவுளின் வழிநடத்தும் பரிவு ஆகியவை இருப்பதாலேயே அந்த இல்லத்தில் தான் நெடுநாள் வாழ விரும்புவதாகக் கூறுகிறார் தாவீது. கடவுள் இல்லாத வெறும் கட்டடம், பெரிய அரண்மனையாய் இருந்தாலும் அதில் தங்க விரும்பவில்லை என்பதையும், வேறொரு திருப்பாடல் கூறியுள்ளது.

திருப்பாடல்கள் 84:1, 10

என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது… வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒருநாளே மேலானது: பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது.

இதேயொத்த எண்ணங்களை, இயேசுவும், தன் சீடர்களுக்குக் கூறியுள்ளார்.

யோவான் நற்செய்தி 14:1-3

இயேசு தன் சீடர்களிடம் கூறியது: “நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், ‘உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்’ என்று சொல்லியிருப்பேனா? நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்.

தன் தந்தையின் மாளிகையில் பல உறைவிடங்கள் உண்டு என்று ஆரம்பிக்கும் இயேசு, இறுதியில், அங்கு, தன் சீடர்களுடன் தான் இருப்பேன் என்ற உறுதியையும் தருகிறார். அந்த உறுதியாலேயே அம்மாளிகை, இல்லமாக மாறுகிறது.

நாணயத்தின் இரு பக்கங்கள் போல், எந்த ஓர் உண்மைக்கும் மறுபக்கமும் இருக்குமல்லவா? அன்பிற்கும் பாதுகாப்பிற்கும் இலக்கணமாய் அமைவது இல்லங்கள் என்று சொல்லும்போது, எல்லா இல்லங்களும், எல்லா நேரங்களிலும், அன்பையும், பாதுகாப்பையும் அளிக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகின்றது. இல்லத்தில் வாழ்பவர்களிடையே, இரகசியங்கள், ஒளிவு மறைவுகள் அதிகமாகும்போது, சந்தேகங்கள் என்ற கார்மேகங்கள் திரளும்; புயல்கள் உருவாகும். புயல்கள் உருவானபின், அன்பையும், பாதுகாப்பையும் வழங்கவேண்டிய இல்லங்கள், சந்தேகச் சிறைகளாக மாறிவிடும்.

கடவுளின் இல்லம் என்று சொல்லும்போது, அங்கும் ஒரு மறுபக்கம் உண்டு. அந்த இல்லத்தில் வாழும் பக்குவம் நமக்கில்லையென்றால், அந்த வீட்டில் வாழ்வது எளிதல்ல. இறைவனோடு வாழ்வது என்பது, அவரது அருகாமை, அவரது தொடர்ந்த கண்காணிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்த எண்ணம், நம்மை அமைதியில் நிறைக்கலாம், அல்லது சங்கடத்திலும் ஆழ்த்தலாம். கடவுளின் தொடர்ந்த கண்காணிப்பில் வாழ கொடுத்து வைத்திருக்கவேண்டும் என்றாலும், அந்த கண்காணிப்பில் வாழும் பக்குவத்தை நாம் பெறவேண்டும்.

ஆண்டவரின் இல்லத்தில் வாழவோ, இறைவனின் கூடாரத்தில் தங்கவோ, இறைவனின் திருமலையில் குடியிருக்கவோ தேவையான பக்குவம் என்ன என்பதை, தாவீது 15ம் திருப்பாடலில் விளக்கிக் கூறியுள்ளார். அந்த உண்மைகளை, நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

13 July 2021, 13:57