தேடுதல்

Vatican News
புனித சார்லஸ் ஆலயம், வியன்னா புனித சார்லஸ் ஆலயம், வியன்னா  (AFP or licensors)

பசிச் சாவுகளை நினைவுபடுத்தும் ஆலய மணிகள்

ஆஸ்ட்ரியாவில் ஜூலை 30ம் தேதி ஒலிக்கப்படும் ஆலய மணிகள், நம் அன்றாடப் பணியிலிருந்து சற்று விலகி, நம்மைச் சுற்றிலும், உலகெங்கிலும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றிச் சிந்திக்க அழைப்பு விடுக்கின்றன - பேராயர் Lackner

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பசி, மற்றும், அது தொடர்பான காரணங்களால், உலகில் தினமும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், சிறாரும் உயிரிழந்துவருவது குறித்து பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில், இம்மாதம் 30ம் தேதியன்று, ஆஸ்ட்ரியாவின் அனைத்து ஆலய மணிகளும், இறந்தோர் நினைவாக ஒலிக்கப்படும் ஒலியை, ஐந்து நிமிடங்களுக்கு ஒலிக்கும்.  

இயேசு மரணமடைந்த நேரமான மாலை 3 மணிக்கு, இவ்வாண்டு ஜூலை 30ம் தேதி, ஆஸ்ட்ரியாவின் அனைத்து ஆலய மணிகளும் இறந்தோர் நினைவு ஒலியை எழுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு குறித்துப் பேசியுள்ள ஆஸ்ட்ரிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர்  Franz Lackner அவர்கள், பசிக்கொடுமை நிலவும் ஓர் உலகில் நாம் வாழ்ந்துவருகிறோம், உதவி தேவைப்படும் இடங்களுக்கு நாம் உதவவேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜூலை 30ம் தேதி ஒலிக்கப்படும் ஆலய மணிகள், நம் அன்றாடப் பணியிலிருந்து சற்று விலகி, நம்மைச் சுற்றிலும், உலகெங்கிலும் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் பற்றிச் சிந்திக்க அழைப்புவிடுக்கின்றன என்றும், பேராயர்  Lackner அவர்கள் கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆதரவோடு, அப்பேரவையின் காரித்தாஸ் அமைப்பு, இந்நிகழ்வை, கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்திவருகிறது.

இப்பூமிக்கோளத்தில், ஏறத்தாழ 82 கோடிப் பேர், அதாவது, ஒன்பதில் ஒருவர், பசியால் துயருறுகின்றனர், கோவிட்-19 பெருந்தொற்று விதிமுறைகளால் இவ்வெண்ணிக்கை கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது என்று, ஆஸ்ட்ரிய காரித்தாஸ் கூறியுள்ளது.

ஆப்ரிக்காவில், பல போர்களாலும், காலநிலை மாற்றத்தின் பாதிப்பாலும், ஏற்கனவே, மக்கள் துன்புறும்வேளை, பெருந்தொற்று நெருக்கடியும், இத்துன்பத்தை அதிகரித்துள்ளது என்றுரைத்துள்ள காரித்தாஸ் அமைப்பு, ஆப்ரிக்காவில், மூன்று சிறாருக்கு ஒருவர், கடும் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறியுள்ளது.

23 July 2021, 14:48