தேடுதல்

நைரோபி வயதானவர் இல்லம் நைரோபி வயதானவர் இல்லம் 

வயதுமுதிர்ந்தோருடன் திருஅவை நெருக்கமாக உள்ளது

தேவையில் இருக்கும் வயதுமுதிர்ந்தோருக்கு, மாத ஓய்வூதியம் வழங்கும்வண்ணம் ஒரு திட்டத்தை உருவாக்கி, அவர்களுக்கு நிதியுதவி செய்வது குறித்து, பங்குத்தந்தையர் ஆராயவேண்டும் - கொல்கத்தா பேராயர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தாத்தாக்கள், பாட்டிகள், மற்றும், வயதுமுதிர்ந்தோர் முதல் உலக நாளுக்கென்று, மேய்ப்புப்பணி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள, கொல்கத்தா உயர்மறைமாவட்ட பேராயர் தாமஸ் டி’சூசா அவர்கள், ஒவ்வொரு பங்குத்தளமும், தன் பகுதியிலுள்ள வயதுமுதிர்ந்தோர் மீது அக்கறை காட்டுவதற்கு, இந்த உலக நாள் அழைப்பு விடுக்கின்றது என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு பங்குத்தந்தையும், அருள்பணியாளர், துறவியர், இளையோர், மற்றும், சிறாரைக்கொண்ட சிறு குழுக்களை உருவாக்கி, அப்பங்கிலுள்ள ஒவ்வொரு முதியோரையும் சந்திப்பதற்கு, அக்குழுக்களை ஊக்கப்படுத்தவேண்டும் என்று, பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்புக்களின்போது, அக்குழுக்கள், வயதுமுதிர்ந்தோருக்கு, ஒப்புரவு, மற்றும், திருநற்கருணை அருளடையாளங்களை வழங்கலாம் என்று கூறியுள்ள பேராயர் தாமஸ் டி சூசா அவர்கள், இந்த நெருக்கடி காலத்தில், திருஅவை அவர்களுக்கு மிக நெருக்கமாக உள்ளது என்பதை, அவர்கள் உணரச்செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், வயதுமுதிர்ந்தோர் ஆலயங்களுக்கு வர இயலாத நிலையில், நாம் அவர்களை நேரில் சந்தித்து, தேவையான உதவிகளை ஆற்றவேண்டும்  என்றும், கொல்கத்தா பேராயரின் அறிக்கை கூறியுள்ளது.

பங்குத்தளங்களிலுள்ள வயதுமுதிர்ந்தோரோடு தொடர்புவைத்து அவர்களை மகிழ்விக்கும் வழிகளையும், தேவையில் இருப்போருக்கு மாத ஓய்வூதியம் வழங்கும்வண்ணம் ஒரு திட்டத்தை உருவாக்கி, அவர்களுக்கு நிதியுதவி செய்வது குறித்தும், பங்குத்தந்தை ஆராயவேண்டும் எனவும், கொல்கத்தா பேராயர் தாமஸ் டி’சூசா அவர்கள், தன் அறிக்கையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

இதற்கிடையே, பேராயரின் இந்த அறிக்கை பற்றி கருத்து தெரிவித்த, 76 வயது நிரம்பிய Margaret Coelho அவர்கள், தானும், தனது 85 வயது நிரம்பிய கணவர் பயஸ் அவர்களும் தனியாக வாழ்கிறோம், கோவிட் பெருந்தொற்றாலும் பாதிக்கப்பட்டோம், மிகவும் சிரமப்பட்டு எனது கணவருக்கு உதவினேன், திருஅவை எங்களுக்கு நெருக்கமாக இருந்தால் அதுவே மிகுந்த ஆறுதல் என்று, ஊடகங்களிடம் கூறியுள்ளார். (The Times of India)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 July 2021, 15:13