தேடுதல்

Vatican News
இந்திய கிறிஸ்தவர்கள் இந்திய கிறிஸ்தவர்கள் 

முதல் ‘இந்திய கிறிஸ்தவ நாள்’ சிறப்பிக்கப்பட்டது

பேராயர் கொர்னேலியோ : நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான விரோதப்போக்குகள் அதிகரித்துவரும் சூழலில், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது கட்டாயம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நாட்டின் ஓர் அங்கமாக இருக்கும் கிறிஸ்தவர்களை, வெளிநாட்டவர்கள் போல், காலனி ஆதிக்கத்துடன் வந்தவர்களாக சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றுவரும் வேளையில், ஜூலை மாதம் 3ம் தேதி, இந்திய கிறிஸ்தவ நாள் சிறப்பிக்கப்பட்டது, ஒவ்வொரு நாளும் சிறப்பிக்கப்பட வேண்டிய ஒன்று, என்று போபால் பேராயர் Leo Cornelio அவர்கள் கூறினார்.

கிறிஸ்தவ சபைகள் தங்களிடையே நிலவும் வேறுபாடுகளை மறந்து, கத்தோலிக்கர்கள், பிரிவினை சபையினர், ஆர்த்தடாக்ஸ் சபையினர் என அனைவரும் ஒரே குழுவாக ஜூலை 3ம் தேதியை இந்திய கிறிஸ்தவ நாளாக இணைந்து சிறப்பித்தது பற்றி, ஜூலை 5ம் தேதி திங்கள்கிழமையன்று கருத்து வெளியிட்ட பேராயர் கொர்னேலியோ அவர்கள், நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான விரோதப்போக்குகள் அதிகரித்துவரும் சூழலில், கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றிப்பையும் அவர்களிடையே காணப்படும் கலாச்சாரப் பகிர்வையும் வலியுறுத்த வேண்டியது அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.

போர்த்துக்கீசியர்களோ, பிரித்தானியர்களோ இந்தியாவுக்கு வருமுன்னரே, இந்திய கலாச்சாரம், மற்றும் நாகரீகத்தின் ஓர் அங்கமாக கிறிஸ்தவம் இருந்தது என்று கூறிய பேராயர் கொர்னேலியோ அவரகள், கி.பி 52ம் ஆண்டிலேயே புனித தோமாவால் இந்தியாவில் நற்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இந்திய மக்கள் தொகையில் 2.3 விழுக்காட்டினராக இருக்கும் கிறிஸ்தவர்கள், நாட்டைக் கட்டியெழுப்புவதில், குறிப்பாக கல்வி, மற்றும் மருத்துவத்துறைகளில் ஆற்றியுள்ள பணி மகத்தானது, என்பதையும், இப்பணிகளால் இந்தியாவின் வறியோர் பயனடைந்து வருவதையும் சுட்டிக்காட்டினார் பேராயர் கொர்னேலியோ.

இந்திய கிறிஸ்தவ நாள், இவ்வாண்டு முதல், ஜூலை மாதம் 3ம் தேதி, இந்தியாவில் நற்செய்தி அறிவித்த திருத்தூதர் புனித தோமாவின் திருவிழாவன்று, சிறப்பிக்கப்படுகின்றது.

05 July 2021, 14:46