தேடுதல்

"இணைந்து இறைவேண்டல் செய்யும் குடும்பம், இணைந்து வாழும்" "இணைந்து இறைவேண்டல் செய்யும் குடும்பம், இணைந்து வாழும்" 

மகிழ்வின் மந்திரம் : குடும்ப வாழ்வின் ஊற்றுகள்

"நம்பிக்கை கொள்ளாத கணவர், நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார். அப்படியே, நம்பிக்கை கொள்ளாத மனைவி, நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார்." (1 கொரி. 7:14)

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கிணறு, குளம், அல்லது, ஏரி போன்ற நீர்நிலைகளில், தண்ணீர் ஊற்றெடுக்கும் சுனைகளை, அவ்வப்போது சுத்தம் செய்தால்தான், அவற்றில், தொடர்ந்து நீர் ஊற்றெடுக்கும். அவ்வூற்றுகளை கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில், அவை அடைபட்டு, நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிப்போகும்.

அதேவண்ணம், திருமண வாழ்விலும், அன்பின் ஊற்றுகளை தொடர்ந்து பேணிக்காக்கவேண்டும். திருமண வாழ்வில் இணைந்துள்ள தம்பதியருக்கிடையிலும், குடும்பத்திலும், அன்பின் ஊற்றுகளை தொடர்ந்து புதுப்பிப்பதற்கு, தலத்திருஅவை ஆற்றக்கூடிய உதவிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "ஒரு சில ஊற்றுகள்" (Some resources) என்ற தலைப்பில், எட்டு பத்திகளாக (223-230) வழங்கியுள்ளார். இவற்றில், 227, மற்றும் 228ம் பத்திகளில், அவர் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

குடும்பங்கள் நம்பிக்கையில் வளர, மேய்ப்பர்களாகிய நாம் ஊக்கமளிக்கவேண்டும். அடிக்கடி பெறக்கூடிய ஒப்புரவு அருளடையாளம், ஆன்மீக வழிகாட்டுதல், அவ்வப்போது நடைபெறும் தியான முயற்சிகள் ஆகியவற்றின் வழியே பயன்பெற, தம்பதியரை ஊக்கப்படுத்தவேண்டும். "இணைந்து இறைவேண்டல் செய்யும் குடும்பம், இணைந்து வாழும்" என்பதை மனதில் கொண்டு, குடும்பத்தினர் இணைந்து செபிக்கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும். மேய்ப்பர்கள், குடும்பத்தினரை சந்திக்கச்செல்லும் வேளையில், குடும்பத்தினர் அனைவரையும் இணைத்து செபிக்கவேண்டும். இறைவனுக்கென நேரம் ஒதுக்கி, தங்கள் பிரச்சனைகளை அவரிடம் எடுத்துச்செல்லும் பழக்கத்தை, தம்பதியர் ஒவ்வொரிடமும் உருவாக்கவேண்டும்.

குடும்பவாழ்வின் அடித்தளமாக இறைவார்த்தை அமையவேண்டும் என்று, ஆயர் மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர். குடும்பத்தை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் மேய்ப்புப்பணிகளில், இறைவார்த்தை, மையமான இடம் பெற்றிருக்கவேண்டும். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வுக்கு, இறைவார்த்தை நற்செய்தியாக அமைவதோடு, தம்பதியரும், குடும்பத்தினரும் சந்திக்கும் சவால்களில் அவர்களை வழிநடத்தவும், இறைவார்த்தை உதவியாக இருக்கும். (227)

ஒருசில வேளைகளில், தம்பதியரில் ஒருவர், திருமுழுக்குப் பெறாதவராக இருக்கலாம். அல்லது, மத நம்பிக்கையை பின்பற்ற விரும்பாதவராக இருக்கலாம். இது, அடுத்தவர், கிறிஸ்தவ வாழ்வில் வளர்வதற்கு தடையாக இருப்பதோடு, உறவில், துன்பத்தை விளைவிக்கலாம். இருப்பினும், இருவரும் தங்களிடையே நிலவும் உன்னத விழுமியங்களைப் பகிர்ந்துகொள்ளவும், அவற்றில் வளரவும் இயலும். மத நம்பிக்கையற்ற துணைவரின் மீது அன்புகாட்டி, அவரை மகிழ்விப்பதும், புனிதத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு வழியே. அன்பு பொழியப்படும் குடும்பங்களில், "நம்பிக்கை கொள்ளாத கணவர், நம்பிக்கை கொண்ட தம் மனைவியால் தூயவராகிறார். அப்படியே, நம்பிக்கை கொள்ளாத மனைவி, நம்பிக்கை கொண்ட கணவரால் தூயவராகிறார்." (1 கொரி. 7:14)  (அன்பின் மகிழ்வு 227,228)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 July 2021, 13:52