மகிழ்வின் மந்திரம்: புதுமணத் தம்பதியரின் உறவு உறுதிப்பட..
மேரி தெரேசா: வத்திக்கான்
'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" (பிரிவு 6) என்ற தலைப்பில், புதுமணத் தம்பதியருக்கு உதவும் ஒரு சில ஊற்றுக்கள் எவை என்பது பற்றி, 224,225,226 ஆகிய மூன்று பத்திகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ…
புதுமணத் தம்பதியர், ஒருவர் ஒருவரைப் புரிந்துகொண்டு அன்புகூர்ந்து, அவரவர் இருப்பதுபோலவே ஏற்று, வலுவான உறவைக் கட்டியெழுப்ப காலம் தேவைப்படுகிறது. இவர்களுக்கு, சிலநேரங்களில், நம் சமுதாயமும், பணித்தளங்களும் ஏற்படுத்தும் மனஅழுத்தங்களும், பிரச்சனைகளை உருவாக்குகின்றன. இன்னும் சிலநேரங்களில், தம்பதியர் சேர்ந்து செலவழிக்கும் நேரம் குறைவாக இருப்பதாலும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, மேய்ப்புப் பணியாளர்கள், மற்றும், திருமண வாழ்வில் அனுபவமிக்க தம்பதியர், இளம் தம்பதியருக்கு உதவும் வழிகளை ஆராயவேண்டும். இதில் பயனுள்ள வழிகளை நன்றாக அறிந்துள்ள, அனுபவம்மிக்க தம்பதியர், இளம் தம்பதியர், ஓய்வுநேரத்தை எவ்வாறு ஒன்றுசேர்ந்து செலவிடலாம் என்பதைத் திட்டமிடுவதற்கு சில நடைமுறைகளைப் பரிந்துரைக்கலாம். மனமகிழ்வு நேரங்களை பிள்ளைகளோடு செலவிடுவது, முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டாடுவது, ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் வாய்ப்புக்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றுக்கு ஓய்வுநேரத்தை செலவழிப்பது பற்றி கற்றுக்கொடுக்கலாம். இளம் தம்பதியர், அந்த நேரங்களை அர்த்தமுள்ளதாகவும், அன்புநிறைந்ததாகவும் அமைப்பதற்கு உதவும் வளங்களைக் கொடுத்து உதவலாம். இதனால் அத்தம்பதியர்க்கிடையே தொடர்பு மேம்படும். ஓய்வுநேரத்தை ஒன்றுசேர்ந்து செலவழிக்கும் வழிகளை அறியாத தம்பதியர், சமூக ஊடகங்களிலோ, அல்லது மற்ற நிகழ்வுகளிலோ தங்களை அர்ப்பணிப்பர். இறுதியில், அவர்கள், ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதையே விரும்பாத நிலைக்கு உட்படுவர். எனவே, புதிதாகத் திருமணம்புரிந்த இளம் தம்பதியர், தங்கள் வாழ்வில் தினமும் நடைபெறும் செயல்களைப் பகிர்ந்துகொள்வதற்கு ஊக்குவிக்கப்படவேண்டும். இதனால் அவர்களிடையே நல்லதொரு நெருக்கம், மற்றும், உறுதியான உறவு வளரும். காலையில் எழுந்தவுடன் ஒருவரையொருவர் வாழ்த்துவது, வேலை முடிந்து வருபவரை, வீட்டில் இருக்கும் அடுத்தவர், வீட்டு வாயிலில் நின்று வரவேற்பது, ஒன்றுசேர்ந்து சுற்றுலாக்களை மேற்கொள்வது, வீட்டுவேலைகளைப் பகிர்ந்துகொள்வது, தினசரி அலுவல்களிலிருந்து சற்று விடுபட்டு, குடும்பத்தின் ஆண்டு நிகழ்வுகள், மற்றும் சிறப்பு நிகழ்வுகளில் கலந்துகொள்ளல் போன்றவற்றை, அவர்கள் ஆற்ற பரிந்துரைக்கலாம். கடவுளின் கொடைகளை மகிழ்ந்து அனுபவிக்க இந்த குடும்ப நிகழ்வுகள் அவசியம். இளம் புதுமணத் தம்பதியர் இவ்வாறு வாழ்வதன் வழியாக, தங்களின் அன்பை புதுப்பிக்கலாம். தினசரி பணிகளுக்கு நம்பிக்கையோடு மெருகூட்டலாம். (அன்பின் மகிழ்வு 224,225,226)