தேடுதல்

மனச்சான்று மனச்சான்று 

மகிழ்வின் மந்திரம்: பிள்ளைகளைக் கொண்டிருப்பதில் திட்டமிடுதல்

பிள்ளைகள் கடவுளின் சிறந்த கொடை. அவர்கள், பெற்றோருக்கும், திருஅவைக்கும் மகிழ்வைக் கொணர்பவர்கள். அவர்கள் வழியாக ஆண்டவர் உலகத்தைப் புதுப்பிக்கிறார் என்ற உண்மைக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவது முக்கியம்

மேரி தெரேசா: வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின் 222ம் பத்தியில், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதில் பொறுப்புடன் திட்டமிடுதல் பற்றி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறியுள்ள கருத்துக்களின் சுருக்கம்...

புதுமணத் தம்பதியர் வாழ்வை வழங்குவதில் தாராளமாக இருப்பதற்கு ஊக்குவிக்கப்படல் அவசியம். அவர்கள் பிள்ளைகளைக் கொண்டிருப்பது குறித்த குடும்பக்கட்டுப்பாடு குறித்து திட்டமிடும்போது, தங்களுக்கிடையே கலந்துபேசி, இருவருக்கும் ஏற்புடைய ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும். அந்த நிலைப்பாடு, அவர்களின் தனிப்பட்ட, மற்றும், முழு மனிதப்பண்பிற்கு ஒத்ததாய், ஒருவர் ஒருவரின் மாண்பை கருத்தில்கொள்வதாய் இருக்குமாறு கவனிக்கவேண்டும். மனித வாழ்வு பற்றிய திருமடல், மற்றும், நவீன உலகில் கிறிஸ்தவக் குடும்பத்தின் பங்கு குறித்த திருத்தூது ஊக்கவுரை (Familiaris Consortio காண்க.14:2835) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். பொறுப்புள்ள பெற்றோராய் தீர்மானங்கள் எடுப்பது, அவர்கள் தங்களின் மனச்சான்றை உருவாக்குவதைப் பொறுத்தது. மனச்சான்று, ஒரு மனிதரின் இரகசிய மையம், மற்றும், புனித இடம். அங்கு ஒவ்வொரு மனிதரும் கடவுளோடு தனியாக இருக்கிறார், மற்றும், அவரது குரலும், அதன் உள்ளாழத்தில் எதிரொலிக்கிறது. தம்பதியர், தங்களது மனச்சான்றில், கடவுளுக்கும், அவரின் கட்டளைகளுக்கும் எந்த அளவுக்கு செவிமடுக்கின்றார்களோ, அந்த அளவுக்கு, அவர்கள் எடுக்கும் தீர்மானங்கள், சுதந்திரமாகவும், சமுதாய விதிமுறைகளுக்கு ஏற்புடையதாகவும் அமையும். தம்பதியர், தங்களின், மற்றும், தங்கள் பிள்ளைகளின் வருங்காலப் பொருளாதாரம், மற்றும், ஆன்மீக நலனில், அக்கறைகொண்டு தீர்மானங்களை எடுக்கவேண்டும். இறுதியில், அவர்கள், அதற்கு, குடும்பக் குழு, சமுதாயம், மற்றும் திருஅவையிடமிருந்து ஆலோசனைகளையும் பெறவேண்டும். குடும்பக்கட்டுப்பாடு குறித்து திட்டமிடவேண்டியவர்கள், பெற்றோர் மட்டுமே. அவர்கள், இதனை கடவுளின் பார்வையில் மேற்கொள்ளவேண்டும். மேலும், அவர்கள் இதில் பயன்படுத்தும் வழிமுறைகள், இயற்கையின் சட்டம் மற்றும், கருவுறுதல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டிருப்பதை ஊக்குவிக்கவேண்டும். ஏனெனில், இந்த முறைகள், தம்பதியரின் உடல்களை மதிக்கின்றன, அவர்கள் இருவருக்குமிடையே கனிவை வளர்க்கின்றன, மற்றும், உண்மையான சுதந்திரத்தைக் கற்றுக்கொடுக்கின்றன. பிள்ளைகள் கடவுளின் சிறந்த கொடை. அவர்கள், பெற்றோருக்கும், திருஅவைக்கும் மகிழ்வைக் கொணர்பவர்கள். அவர்கள் வழியாக ஆண்டவர் உலகத்தைப் புதுப்பிக்கிறார் என்ற உண்மைக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவது முக்கியம் (அன்பின் மகிழ்வு 222)

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஜூலை 2021, 13:06