தேடுதல்

Vatican News
குடும்ப மேய்ப்புப்பணி குடும்ப மேய்ப்புப்பணி 

மகிழ்வின் மந்திரம்: குடும்ப மேய்ப்புப்பணிக்கு பயிற்சிகள்

அருள்பணித்துவ வாழ்வுக்கு உருவாக்கும் பயிற்சியில், பொதுநிலையினர், குடும்பங்கள், குறிப்பாக, பெண்கள் ஆகியோரின் பிரசன்னம் தேவை

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 6ம் பிரிவில் ("மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்") “இன்றையக் குடும்பத்தின் நற்செய்தியை அறிவித்தல்” என்ற தலைப்பில், 202, 203, மற்றும், 204ம் பத்திகளில் பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம்...

குடும்பங்களுக்கு மேய்ப்புப்பணியாற்றுவதற்கு, குடும்பங்களின் குடும்பமாகிய பங்குத்தளம், முக்கிய பங்கு வகிக்கிறது. பங்குத்தளத்தில், அன்பியங்கள், பக்த சபைகள், திருஅவை இயக்கங்கள் மற்றும், கழகங்கள் ஆகியவை நல்லிணக்கதோடு வாழ்கின்றன. தற்போது குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான பிரச்சனைகளை கையாள, அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவியர், வேதியர்கள், மற்றும், மேய்ப்புப்பணியில் ஈடுபட்டுள்ள பொதுநிலைத் தலைவர்கள் என்று, எல்லாருக்கும் அதிகமான பயிற்சிகள் தேவைப்படுகின்றன. அருள்பணித்துவ பயிற்சி மாணவர்களுள் சிலர், பிரச்சனைகள் நிறைந்த, வேறுசிலர் பெற்றோரில்லாத, உளவியல் அளவில் வளர்ச்சி குன்றிய.. இவ்வாறு பலதரப்பட்ட குடும்பச் சூழல்களிலிருந்து வருகின்றனர். எனவே, அவர்களின் வருங்கால மேய்ப்புப்பணிக்கு, உளவியலில் சமநிலை காப்பது உட்பட, அவர்கள் பக்குவம் நிறைந்தவர்களாக உருவாக்கப்பட பயிற்சிகள் அவசியம். அவர்கள், தங்களைப்பற்றிய நல்லெண்ணத்தில் வளர குடும்பப் பிணைப்பு, மிகவும் முக்கியம். இந்த மாணவர்களுக்கு, திருமறைக் கோட்பாடுகளில் மட்டுமல்லாமல், திருமணம் மற்றும், குடும்பம் குறித்த துறைகளிலும் பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். அருள்பணித்துவப் பயிற்சிநிலை மற்றும், அருள்பணித்துவ வாழ்வில் குடும்பங்களும் முக்கியமான ஓர் இடத்தை வகிக்கின்றன. அருள்பணித்துவ பயிற்சிநிலை மாணவர்கள், சிலகாலம் பங்குத்தளங்களில் தங்கிப் பணியாற்றுவது அவர்களுக்கு உதவியாக இருக்கும். அருள்பணித்துவ வாழ்வுக்கு உருவாக்கும் பயிற்சியில், பொதுநிலையினர், குடும்பங்கள், குறிப்பாக, பெண்கள் ஆகியோரின் இருப்பு தேவை. இதன் வழியாக, திருஅவையில் பல்வேறு அழைப்புக்களின் பன்மைத்தன்மை போற்றி வளர்க்கப்படும்.

08 July 2021, 14:22