தேடுதல்

Vatican News
வயதுமுதிர்ந்தோர் வயதுமுதிர்ந்தோர் 

மகிழ்வின் மந்திரம்: வயதுமுதிர்ந்தோரின் முக்கியத்துவம்

தன் குடும்பத்தின் உயிருள்ள நினைவாகிய தாத்தா, பாட்டியை மதிக்கத் தவறிய, மற்றும், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தாத ஒரு குடும்பம், ஏற்கனவே, நலிவடைந்துகொண்டிருக்கிறது (அன்பின் மகிழ்வு 193)

மேரி தெரேசா: வத்திக்கான் 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், வயது முதிர்ந்தோரின் முக்கியத்துவம் பற்றி, “வயதுமுதிர்ந்தோர் ” என்ற தலைப்பில் 191, 192, 193ம் பத்திகளில் கூறியுள்ள கருத்துக்கள் இதோ:

 “முதிர் வயதில் என்னைத் தள்ளிவிடாதேயும்; என் ஆற்றல் குன்றும் நாளில் என்னைக் கைவிடாதேயும்” (தி.பா.71:9). இது, மறக்கப்படுவோம், மற்றும், புறக்கணிக்கப்படுவோம் என்று பயப்படும் வயதுமுதிர்ந்தோரின் விண்ணப்பம். ஏழைகளின் அழுகுரலுக்குச் செவிசாய்க்கவேண்டும் என்று, கடவுள் நம்மிடம் கேட்பதுபோன்று, வயது முதிர்ந்தோரின் அழுகுரலுக்கும் நாம் செவிமடுக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இது குடும்பங்களுக்கும், குழுமங்களுக்கும் முன்வைக்கப்படும் ஒரு சவால். ஏனெனில் திருஅவை, வயதுமுதிர்ந்தோர் புறக்கணிக்கப்படும் ஒரு மனநிலையை விரும்பவில்லை, அவ்வாறு விரும்பவும் அதனால் முடியாது. வயதுமுதிர்ந்தோர் மீது நன்றி, மதிப்பு, உபசரிப்பு ஆகிய நல்லுணர்வுகள், ஒட்டுமொத்த சமுதாயத்திலும் ஏற்படும்படிச் செய்யவேண்டும். இதனால், வயதுமுதிர்ந்தோர், நம் குழுமத்தின் ஓர் உறுப்பினர் என்று உணர்வார்கள். இவர்கள், ஆண்கள் மற்றும், பெண்களாக, தந்தையர் மற்றும், அன்னையராக, நமது சொந்த வாழ்வுப் பாதையில், நம் சொந்த இல்லத்தில், மதிப்புமிக்க வாழ்வுக்காக நாம் மேற்கொள்ளும் தினசரி போராட்டத்தில், நமக்குமுன் இருந்தவர்கள். இளமைக்கும் முதுமைக்கும் இடையே, புதியதொரு ஆரத்தழுவுதலை உருவாக்குவதன் வழியாக, புறக்கணிக்கும் கலாச்சாரத்திற்குச் சவால்விடுக்கும் ஒரு திருஅவை அமைவதை நான் எவ்வளவு விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் குடும்பங்களில் வயதுமுதிர்ந்தோருக்கு மிகுந்த அக்கறை காட்டப்படவேண்டும் என்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த காலத்திலும், இக்காலத்திலும், குறிப்பாக, வளர்ந்துவரும்  முறையற்ற தொழிற்சாலை மற்றும், நகரப்புறமயமாக்கலில், ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அளவுக்கு வயதுமுதிர்ந்தோர் ஓரங்கட்டப்படும் கலாச்சாரங்கள் உள்ளன. இடைவெளியை இணைக்கும் தங்களின் தனிப்பண்புகள் வழியாக, வயதுமுதிர்ந்தோர், தலைமுறைகள் தொடர்ந்து அமைய உதவுகின்றனர். பலர் தங்களின் கிறிஸ்தவ வாழ்வின் ஆரம்பத்திற்கு, தாத்தாக்கள் பாட்டிகளுக்கே நன்றி தெரிவிக்கின்றனர். கடந்தகாலத்தோடு உள்ள பிணைப்பைத் துண்டிப்பவர்கள், நிலையான உறவுகளைக் கட்டியெழுப்பக் கஷ்டப்படுகின்றனர், மற்றும், அவர்கள் இருக்கும் நிலையைவிட எதார்த்தம் பெரிது என்பதை உணர்கின்றனர். ஒரு சமுதாயம், தனது வயதுமுதிர்ந்தோரில் அக்கறைகாட்டி, அவர்களின் ஞானத்தை மதித்தால், அந்த சமுதாயத்தில் நிச்சயமாக முன்னேற்றம் காணப்படும். மற்றும், அச்சமுதாயம் முன்னோக்கிச் செல்லும்.

வரலாற்று நினைவு குறைவுபடுவது, நம் சமுதாயத்தில் கடுமையான குறைபாடுகளை உருவாக்கும். கடந்த கால நிகழ்வுகளை அறிந்து அவை குறித்து கருத்துதெளிவுபெறுவது, வருங்காலத்தை அர்த்தமுள்ள முறையில் கட்டியெழுப்ப உதவும் ஒரே வழியாகும். “முன்னைய நாள்களை நினைவு கூருங்கள்” (எபி.10:32) என்பது போல், நினைவு, வளர்ச்சிக்குத் தேவை. வயதுமுதிர்ந்தோர் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என அவர்களைப் புறக்கணிக்கும் அல்லது அவர்களுக்கு இடமளிக்காத ஒரு சமுதாயம், உயரிக்கொல்லி கிருமியைக் கொண்டிருக்கின்றது. அது தன் அடிவேர்களிலிருந்தே கிழித்தெறியப்படும்.  

01 July 2021, 15:17