தேடுதல்

குடும்பத்தில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் உதவி, கற்றல் குடும்பத்தில் குழந்தைகள் ஒருவருக்கொருவர் உதவி, கற்றல்  

மகிழ்வின் மந்திரம் - உடன்பிறந்த நிலை என்ற இணைப்புச் சங்கிலி

குடும்பங்களில் காட்டப்படும் பாசம், மற்றும் கல்வியின் வழியாக உரம்பெறும் உடன்பிறந்த நிலை, சமுதாயம் முழுவதிலும் ஒரு வாக்குறுதியாக ஒளிர்விடுகின்றது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், ஐந்தாம் பிரிவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறப்புக்களிடையே அன்பை ஆழப்படுத்தல் என்பது குறித்து, 'சகோதரர்களாக, சகோதரிகளாக இருத்தல்' என்ற தலைப்பில் 194, மற்றும் 195ம் பத்திகளில் கூறியுள்ள கருத்துக்கள்:

சகோதரர்கள், மற்றும் சகோதரிகளிடையே நிலவும் உறவு, காலப்போக்கில் ஆழப்படுகின்றது. மேலும், குடும்பத்தில் குழந்தைகளிடையே காணப்படும் உடன்பிறந்த நிலை என்ற இணைப்புச் சங்கிலி, கற்றுக்கொள்ளும் சுழலில் உறுதிபெறும்போது, அது அமைதி மற்றும் சுதந்திரத்தின் சிறந்த பள்ளியாகிறது. ஒன்றாக எப்படி வாழ்வது என்பதை நாம் குடும்பத்தில் கற்றுக்கொள்கிறோம். நாம் அடிக்கடி இதனை நினைத்துப் பார்க்கவில்லையென்றாலும், ஒரு குடும்பமே, உடன்பிறந்த நிலையை உலகத்துக்கு அறிமுகப்படுத்துகின்றது. குடும்பங்களில் காட்டப்படும் பாசம், மற்றும் கல்வியின் வழியாக உரம்பெறும் இந்த உடன்பிறந்த நிலை அனுபவம் வழியாக, உடன்பிறந்த வாழ்வுமுறை, சமுதாயம் முழுவதிலும் ஒரு வாக்குறுதியாக ஒளிர்விடுகின்றது.

ஒருவர் மற்றவர்மீது அக்கறை காட்டுவது, மற்றும் ஒருவர் ஒருவருக்கு உதவுவது என்ற அழகான அனுபவத்தை சகோதரர் சகோதரிகளுடன் வளர்வதில் பெறுகிறோம். ஒரு குடும்பத்தின் இளைய சகோதரர்களுள் ஒருவர், சக்தியற்றவராக, நோயுற்றவராக, மாற்றுத்திறனாளியாக இருக்கும்போது, அவர்மீது காட்டும், அக்கறை, பொறுமை, பாசம், ஆகியவற்றில், உடன்பிறந்த நிலை சிறப்பான விதத்தில் ஒளிர்விடுவதைக் காணலாம். உங்கள்மீது அன்புபொழியும் ஒரு சகோதரரை, சகோதரியைக் கொண்டிருப்பது,  ஆழமான, விலைமதிப்பற்ற, தனிச்சிறப்புடைய ஓர் அனுபவமாகும். குழந்தைகள், ஒருவர் ஒருவரை சகோதரர் சகோதரிகளாக நடத்தும்படி, பொறுமையாகக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.  இந்த பயிற்சி என்பது, கடினமான ஒன்றாக சிலவேளைகளில் இருந்தாலும், இதுவே, சமுதாயமயமாக்கலின் உண்மையான பள்ளியாகும். ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக்கொள்வது என்பது சிலநாடுகளில் பரவலாக காணப்படும் நிலையில், ஒரு சகோதரராக, சகோதரியாக இருக்கும் அனுபவம் மிக மிக அரிதாகிவிடுகிறது. ஒரு குழந்தை மட்டுமே இருக்கும் நிலையில், அக்குழந்தை, தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழாமல் இருக்கும் வழிகள் உறுதிச் செய்யப்படவேண்டும். (அன்பின் மகிழ்வு 194,195)

02 July 2021, 15:18