தேடுதல்

புதுமண தம்பதியர் புதுமண தம்பதியர் 

மகிழ்வின் மந்திரம் : திருமண வாழ்வுக்குத் தயாரித்தல்

திருமணத்தின் மாண்பையும் அழகையும் கண்டுகொள்ள நாம் இளையோருக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து உலக ஆயர் மாமன்றத் தந்தையரின் கருத்துக்கள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

தன் 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில் வழங்கியுள்ள 6ம் பிரிவில், 'மண ஒப்பந்தம் ஆனவர்களை திருமணத்திற்கு தயாரித்தல்' என்றப் பகுதியில், 205, மற்றும் 206  பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம் இதோ:

திருமணத்தின் மாண்பையும் அழகையும் கண்டுகொள்ள நாம் இளையோருக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை ஆயர் மாமன்ற தந்தையர்கள் பல்வேறு வழிகளில் எடுத்துரைத்துள்ளனர். வாழ்வின் சமூக பரிமாணத்தை மேன்மையாக்கவும், மற்றும் முழுநிறைவாக்கவும், பாலுணர்வுக்கு ஆழமான அர்த்தத்தை வழங்கவும், குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்குரிய சிறந்தச் சூழலை உருவாக்கவும், பலவிதங்களில் உதவும்,  முழு ஒன்றிப்பை நோக்கிய ஈர்ப்பை புரிந்துகொள்ள, இளையோருக்கு ஊக்கமளிக்க வேண்டியது அவசியம்.

குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமுதாய சிக்கல்கள், மற்றும் சவால்களை நோக்கும்போது, திருமணத்திற்கு தயாரித்து வருவோருக்கு உதவும் வகையில், அதிகம் அதிகமான முயற்சிகள் கிறிஸ்தவ சமுதாயத்தால் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது. நன்னெறி மதிப்பீடுகளின் முக்கியத்துவத்தின் தேவை இங்கு இணைக்கப்பட வேண்டும். இதில், இருவரிடையே நிலவும் அன்பின் வளர்ச்சிக்கு கற்புடைமை என்பது விலைமதிக்க முடியாதது. திருமணம், திருமுழுக்கு மற்றும் ஏனைய அருளடையாளங்களிடையே இருக்கும் தொடர்பை கொணர்வது வழியாகவும், கிறிஸ்தவ குடும்பங்களின் சான்று பகரும் வாழ்வு வழியாகவும், இளையோரின் திருமண தயாரிப்புக்கு உதவுவதை, ஆயர் மாமன்றத் தந்தையர்கள் வலியுறுத்தியுள்ளனர். குடும்ப வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கு தம்பதியரை அறிமுகப்படுத்துதல், அவர்கள் திருஅவை வாழ்வில் பங்குபெறுவதால் கிட்டும் உண்மையான அனுபவத்தை பெறுதல், போன்றவை வழியாக திருமணத்திற்கு தயாரிக்கும் குறிப்பிடத்தக்க திட்டங்களின் தேவை குறித்தும் ஆயர் மாமன்றத் தந்தையர்கள் பேசியுள்ளனர். (அன்பின் மகிழ்வு 205, 206)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 July 2021, 10:18