தேடுதல்

இந்திய கத்தோலிக்க திருமணம் இந்திய கத்தோலிக்க திருமணம் 

மகிழ்வின் மந்திரம் : திருமண வாக்குறுதி

வாக்குறுதிகள், கட்டாயத்தின் பேரில் காப்பாற்றப்படக்கூடாது, அதேவேளை, தியாகங்கள் இல்லாமலேயே காப்பாற்றப்பட முடியும் எனவும் எண்ணக்கூடாது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், "மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு சில கண்ணோட்டங்கள்" என்ற தலைப்பில், 'திருமண விழாவுக்குத் தயாரிப்பு' என்ற பகுதியின் இறுதி மூன்று பத்திகளில் (214,215,216), திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பதிவுசெய்துள்ள கருத்துக்களின் சுருக்கம்...

சிலவேளைகளில் தம்பதியர் தங்கள் திருமணத்தின்போது வாக்குறுதியளிக்கும் வார்த்தைகளின் இறையியல், மற்றும் ஆன்மீக முக்கியத்துவத்தை முற்றிலுமாக உணர்ந்திருப்பதில்லை. இந்த வாக்குறுதி, நிகழ்காலத்திற்கானது மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும், மரணம் வரை தொடரப்படவேண்டியது. சுதந்திரமும், விசுவாசமாக இருத்தலும், ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதையும், இங்கு வலியுறுத்திக் காட்டவேண்டும். வாக்குறுதிகள், கட்டாயத்தின் பேரில் காப்பாற்றப்படக்கூடாது, அதேவேளை, தியாகங்கள் இல்லாமலேயே காப்பாற்றப்படமுடியும் எனவும் எண்ணக்கூடாது.

இளையோர் தங்கள் திருமண நாளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்துவிட்டு, வாழ்நாள் முழுவதும் தொடரப்படவேண்டிய வாக்குறுதியை மறந்துவிடுகின்றனர் என்று, கென்யா நாட்டு ஆயர்கள் கூறியுள்ளனர். இந்த அருளடையாளத்தை, குறிப்பிட்ட ஒரு நேரத்தில் நிகழ்வதாக மட்டும் பார்க்காமல், வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒன்றாக கருத, இளையோருக்கு ஊக்கம் அளிக்கப்படவேண்டும். திருமண வாழ்வின் அனைத்து அங்கங்களும், ஒரு திருவழிபாட்டு மொழியின் தொடர்ச்சியாக மாறி, ஒருவகையில் பார்த்தால், தாம்பத்ய வாழ்வே திருவழிபாடாக மாறுகின்றது.

விவிலிய வாசகங்கள், திருமணத்தின்போது மாற்றப்பட்ட மோதிரங்கள், திருமண திருவழிபாட்டின் பல சடங்குகள் ஆகியவை குறித்து தம்பதியார் தியானிக்கலாம். திருமணத்திற்கு முன் ஒருவர் ஒருவருக்காக செபித்து, திருமண வாழ்வுக்கு தயாரிக்கலாம். இந்த இறைவேண்டல் நேர அனுபவங்களைப் பெற, திருமணத்திற்கு இவர்களைத் தயாரிப்போர் உதவவேண்டும்.

திருமணத் திருவழிபாடு என்பது, தனிச்சிறப்பு வாய்ந்த குடும்ப, மற்றும் சமுதாய நிகழ்வு. இயேசுவின் முதல் புதுமை, கானா திருமணத்தில்தான் இடம்பெற்றது. அந்தப் புதுமையின் வழியே வந்த நல்ல திராட்சை இரசம்,  குடும்பத்தை துவக்குவதற்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததுடன், எல்லா காலத்தின் ஆண், பெண்களுடன் இறைவன் உருவாக்கிய உடன்படிக்கையின் புதிய திராட்சை இரசமாகியது. இங்கு திருவழிபாட்டை நிறைவேற்றுபவர், கோவிலுக்குள் எப்போதாவது வருகின்ற ஒரு மக்கள் கூட்டத்துடனோ, பிற மத அங்கத்தினர்களுடனோ, ஏனைய கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களுடனோ, உரையாடும் வாய்ப்பு கிட்டுகிறது. ஆகவே இது, இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் ஒரு வாய்ப்பாகவும் மாறுகின்றது. (அன்பின் மகிழ்வு 214-216)

16 July 2021, 15:30