தேடுதல்

கர்தினால் திமோத்தி டோலன் (Timothy Dolan) கர்தினால் திமோத்தி டோலன் (Timothy Dolan) 

அமெரிக்க ஐக்கிய நாட்டில் மதச்சுதந்திர வாரம்

உலகம் முழுவதும் தங்கள் விசுவாசத்திற்காக சித்ரவதைகளை அடைந்துவரும் கிறிஸ்தவர்களுக்காக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் மதச்சுதந்திர வாரத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்பான இறைவேண்டல்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூன் 22, இச்செவ்வாய் முதல், 29ம் தேதி வருகிற செவ்வாய் வரை அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திருஅவையில் மதச்சுதந்திர வாரம் சிறப்பிக்கப்பட்டுவரும் வேளையில், மதவிடுதலை தொடர்புடைய விடயங்களுக்காக ஒவ்வொரு நாளும் கத்தோலிக்கர்கள் இறைவேண்டல் செய்யுமாறு, அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

'விடுதலையில் ஒருமைப்பாடு' என்ற மையக்கருத்துடன் சிறப்பிக்கப்படும் இந்த மதச்சுதந்திர வாரத்தின் ஒவ்வொரு நாளும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஓர் ஆயர், மதச்சுதந்திரத்தை பாதிக்கும் ஒரு விடயத்தை முன்வைத்து, மக்களின் இறைவேண்டலுக்கு விண்ணப்பிப்பார்.

இங்கிலாந்து மறைசாட்சிகள் தாமஸ் மூர், மற்றும் ஜான் பிஷ்ஷர் ஆகியோரின் திருவிழாவாகிய ஜூன் 22ம் தேதி துவங்கி, திருத்தூதர்களான, புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் திருவிழா அன்று நிறைவடையும் இவ்வாரம் குறித்து, டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்ட நியூ யார்க் பேராயர், கர்தினால் திமோத்தி டோலன் (Timothy Dolan) அவர்கள்,  மத விடுதலை என்பது அனைவருக்கும் உரியது, என அதில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு ஒரு கருத்து என ஒவ்வொரு நாளும் ஓர் ஆயர் விளக்கமளித்து செபிக்க, என திட்டமிடப்பட்டுள்ள இவ்வாரத்திற்கு, மதச்சுதந்திரத்தோடு தொடர்புடைய, நலப்பராமரிப்பாளர்களின் மனச்சான்று சுதந்திரம், ஈராக் கிறிஸ்தவர்கள், நிக்கராகுவா கத்தோலிக்கர்கள், தத்தெடுப்பு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு, கோவில்கள் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்கப்படுதல், பெருந்தொற்றுக் காலத்தில் கத்தோலிக்க மறைப்பணிகள், சரிநிகர் சட்டம் ஆகியவை தலைப்புக்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மதச்சுதந்திரம் என்பது, மத சமுதாயங்கள் தங்கள் விசுவாச வாழ்வை பொதுவில் வெளிப்படுத்தவும், அனைவரின் நலனுக்காக உழைக்கவும் உதவுகின்றன எனறு கூறியுள்ள கர்தினால் டோலன் அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டின் மூலைக்கல்லாக மத விடுதலை உள்ளது என மேலும் எடுத்துரைத்தார்,

உலகம் முழுவதும் தங்கள் விசுவாசத்திற்காக சித்ரவதைகளை அடைந்துவரும் கிறிஸ்தவர்களுக்காக, குறிப்பாக, நைஜீரியா, நிக்கராகுவா, மற்றும் ஈராக்கின் கிறிஸ்தவர்களுக்காக சிறப்பான விதத்தில் இவ்வாரத்தில் இறைவேண்டல் செய்யப்படுமென மேலும் எடுத்துரைத்தார் நியூ யார்க் பேராயரும், அமெரிக்க ஆயர்கள் பேரவையின் கீழ் இயங்கும் மத சுதந்திரத்திற்கான அவையின் தலைவருமான கர்தினால் டோலன்.

22 June 2021, 15:02