தேடுதல்

Vatican News
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லும் தென் அமெரிக்க புலம்பெயர்ந்தோர் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குச் செல்லும் தென் அமெரிக்க புலம்பெயர்ந்தோர்  (2021 Getty Images)

பாகுபாடு ஏதுமின்றி, குடிபெயர்வோர் அனைவரும் மனிதர்கள்

குடிப்பெயர முயலும் ஒவ்வொரு மனிதரிலும், நம் இல்லங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் இயேசுவின் உருவை நாம் காணவேண்டும் - ஆயர் மார்க் சீட்ஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமெரிக்க ஐக்கிய நாடு, மெக்சிகோ நாடு ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ள மறைமாவட்டங்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டில் தஞ்சம்புக விழையும் புலம்பெயர்ந்தோருக்கு மனித மாண்பை உறுதி செய்யும்வண்ணம் உதவிகள் வழங்கவேண்டும் என்று, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை அண்மையில் நடத்திய வசந்தகால கூட்டத்தில், டெக்ஸாஸ் மாநிலத்தின் எல் பாசோ மறைமாவட்ட ஆயர் மார்க் சீட்ஸ் (Mark Seitz) அவர்கள் பேசுகையில், குடிபெயரும் உரிமை கொண்டவர்கள், உரிமையற்றவர்கள் என்ற பாகுபாடுகளை வலியுறுத்தாமல், புலம்பெயரும் அனைவரும் மனிதர்கள் என்ற உண்மையின் அடிப்படையில் திருஅவையின் பணிகள் அமையவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

குடிப்பெயர முயலும் ஒவ்வொரு மனிதரிலும், நம் இல்லங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் இயேசுவின் உருவை நாம் காணவேண்டும் என்று அழைப்பு விடுத்த ஆயர் சீட்ஸ் அவர்கள், எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்கள் விடுதலைப்பயணம் துவங்கிய காலம் முதல், பயணிப்பது, கிறிஸ்தவ சமுதாயத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று எடுத்துரைத்தார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புலம்பெயர்ந்தோர் உலக நாள் சிறப்பிக்கப்பட்டு வந்தாலும், உலகமெங்கும் புலம்பெயர்ந்தோரின் வாழ்வுததரம் உயராமல், இன்னும் அதிகமாக தாழ்ந்துவருவது, மனித சமுதாயத்தின் அக்கறையற்ற நிலையைக் காட்டுகிறது என்று, ஆயர் சீட்ஸ் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள், அண்மைய மாதங்களில், தளர்த்தப்பட்டிருப்பதாலும், கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாலும், நாட்டிற்குள் தஞ்சம்புக விழைவோரின் எண்ணிக்கை கூடிவருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆயர் சீட்ஸ் அவர்கள், இந்த நெருக்கடியைச் சமாளிக்க, எல்லைப்புற மறைமாவட்டங்கள் கூடுதலாக உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். (Fides)

23 June 2021, 15:19