தேடுதல்

மியான்மாரில் தொடரும் போராட்டம் மியான்மாரில் தொடரும் போராட்டம்  (AFP or licensors)

மியான்மாருக்கு ஆயுதங்கள் விற்க தடை

தற்போது இராணுவம், குடிமக்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மேற்கொண்டு, போர்க்காலக் குற்றங்களைச் செய்து வருகின்றது - ஐ.நா. பிரதிநிதிகள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

வன்முறை, தொடர்ந்து இடம்பெற்றுவரும் மியான்மாரில், உள்நாட்டுப் போர், நாடெங்கும் பரவிவருவது மிகுந்த கவலையையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது என்று, அந்நாட்டு அருள்பணியாளர் ஒருவர், பீதேஸ் செய்தியிடம் கூறியுள்ளார்.

Mandalay உயர்மறைமாவட்டத்தில், இம்மாதம் 15ம் தேதி இடம்பெற்ற தாக்குதலில் Kin Ma என்ற கிராமம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது என்றும், அக்கிராமத்தில் ஏறத்தாழ 200 வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றும், கிராம மக்கள் அருகிலுள்ள காடுகளுக்குச் சென்றுள்ளனர் என்றும், அருள்பணி Peter Htwal Sei Myint அவர்கள் கூறியுள்ளார்.

இராணுவமும், போராளிகளும் ஒருவரையொருவர் பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டி வரும்வேளை, இராணுவம், தங்களுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துகிறது என அப்பாவி குடிமக்கள் கூறுகின்றனர் அருள்பணி Peter அவர்கள் கூறியுள்ளார்.

வன்முறையில் ஈடுபட்டுள்ள அனைவரும், மனித மாண்பையும், வலுவிழந்த மக்களையும் மதிக்கவேண்டும் என்று, தலத்திருஅவை அழைப்பு விடுப்பதாகவும், அருள்பணி Peter அவர்கள் தெரிவித்துள்ளார். (Fides)

இதற்கிடையே, தற்போது இராணுவம், குடிமக்கள் மீது மனிதாபிமானமற்ற தாக்குதல்களை மேற்கொண்டு, போர்க்காலக் குற்றங்களைச் செய்துவருகின்றது என்று ஐ.நா. பிரதிநிதிகள் குறைகூறியுள்ளனர்

மேலும், ஜூன் 18, இவ்வெள்ளி மாலையில், ஐ.நா. பொது அவை, மியான்மாரில் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்ததோடு, அந்நாட்டிற்கு எதிரான ஆயுதத் தடைக்கும் அனுமதியளித்துள்ளது.  (AsiaNews)

19 June 2021, 15:04