தேடுதல்

"நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" - மாற்கு 5:28 "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்" - மாற்கு 5:28 

பொதுக்காலம் 13ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

அழிவைத் தரும் நஞ்சு எதுவும் இல்லாத உலகையும், நலம் நிறைந்த வாழ்வையும் கடவுள் உருவாக்கினார் என்றும், அலகையின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது என்றும் சாலமோனின் ஞான நூல் தெளிவாகக் கூறியுள்ளது

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 13ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம், உலகின் ஏதோ ஒரு மூலையில், யாரோ ஒரு சிலர் நடுவே பரவியிருந்த ஒரு தொற்றுநோய், அடுத்த சில நாள்களில், வாரங்களில், பல நாடுகளில் பரவியது. 2020ம் ஆண்டின் துவக்கத்தில், இந்த நோய்க்கு ஒரு பெயர் சூட்டி, தற்போது, 'கோவிட்-19' என்ற பெருந்தொற்று, அனைவரும் பயந்து ஒதுங்கும் நோயாக மாறிவிட்டது. எங்கோ, யாருக்கோ என்று ஆரம்பமான ஒரு நோய், நமக்கு மிக அருகில், நம் உறவினர் நடுவே பரவியபோது, மரணத்தை நாம் மிக அருகில் சந்திக்க ஆரம்பித்தோம்.

18 மாதங்கள் கடந்தபின்னரும், இந்த நோயின் ஆரம்பம், இது நமக்குள் உருவாக்கும் தாக்கங்கள் ஆகியவற்றைக் குறித்து, மருத்துவ உலகம் வெவ்வேறான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது. பொதுவாகவே, ஒரு நோயைக்குறித்து, அதுவும், புதிதாகத் தோன்றியுள்ள ஒரு நோயைக்குறித்து, தெளிவான ஆய்வுகளும், முடிவுகளும் வெளிவராத வேளையிலும், மருத்துவர்கள், தங்களுக்கு இந்நோயைப்பற்றித் தெரியாது என்பதை, அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதற்குப் பதிலாக, தங்களுக்குத் தெரிந்த அரைகுறை கருத்துக்களை, கோட்பாடுகளாக, உண்மைகளாக சொல்ல முற்படுவர்.

உடல் மருத்துவர்களைப்போலவே, உள்ள மருத்துவர்களான, ஆன்மீகவாதிகளும், மதத்தலைவர்களும், உலகில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளைப்பற்றி, தங்களுக்கு சரிவரத் தெரியவில்லை என்றாலும், அவற்றை, கடவுளோடு தொடர்புபடுத்தி, அரைகுறையான, அவசரமான, சிலவேளைகளில், தவறான கோட்பாடுகளை, மக்கள்மீது திணிக்க முயல்வதைக் காணலாம். மரணத்தைக் கொணர்ந்துள்ள கோவிட்-19 பெருந்தொற்று, கடவுளிடமிருந்து தண்டனையாக வந்துள்ளது என்று, ஆன்மீகவாதிகள் எழுப்பிவரும் குரல்களுக்கு மத்தியில், இன்றைய முதல் வாசகம், கடவுளுக்கும், மரணத்திற்கும் தொடர்பில்லை என்ற உண்மையை உரக்கக்கூறுகிறது. அரைகுறை ஆன்மீகவாதிகளுக்கு செவிமடுப்பதற்குப் பதில், சாலமோனின் ஞான நூல் வழியே, இறைவன் உணர்த்தும் உண்மைக்கு செவிமடுப்போம்:

  • சாலமோனின் ஞான நூல் 1: 13-15; 2: 23-24
  • சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை.
  • கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

அழிவைத் தரும் நஞ்சு எதுவும் இல்லாத உலகையும், நலம் நிறைந்த வாழ்வையும் கடவுள் உருவாக்கினார் என்றும், அலகையின் பொறாமையால் சாவு இவ்வுலகில் நுழைந்தது என்றும் சாலமோனின் ஞான நூல் தெளிவாகக் கூறியுள்ளது.

சாவை இவ்வுலகில் நுழைத்த கோவிட்-19 கிருமி, நிச்சயமாக இறைவனிடமிருந்து வரவில்லை, அது, மனிதர்களாகிய நம்மை அடிமைப்படுத்தியிருக்கும் சுயநலம் என்ற அலகையினால் நுழைந்தது என்பது, மிக, மிக தெளிவாக நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. இத்தகையத் தெளிவான பாடங்களை உணரமறுத்து, இந்த பெருந்தொற்று காலத்திலும், தங்கள் ஆணவத்தையும் அதிகாரத்தையும் நிலைநாட்ட, உயிர்ப்பலிகள் நிகழ்த்திவரும் சுயநலத்தலைவர்களை இவ்வேளையில் எண்ணி வேதனையடைகிறோம். இந்த சுயநலத்தின் கோரவடிவங்களில் ஒன்றாக, இஸ்ரேல் அரசு, புனிதபூமியின் காசாப்பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள்மீது நடத்திய தாக்குதல்களை எண்ணிப்பார்க்கலாம்.

இவ்வாண்டு மே மாதம், இஸ்ரேல் அரசு, காசாப்பகுதியில் மேற்கொண்ட வெறித்தனமான வான்வழித் தாக்குதல்களில், பாலஸ்தீன மக்களின் குடியிருப்புக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் அழிவுற்றன. கொல்லப்பட்ட 256 பாலஸ்தீன மக்களில், 66 குழந்தைகள், 35 பெண்கள், 16 வயதுமுதிர்ந்தோர் அடங்குவர். இத்தாக்குதல்களைக் குறித்து, பிபிசி இணையத்தளம், மே 19ம் தேதி வெளியிட்டச் செய்தியில், கொல்லப்பட்ட குழந்தைகளின் படங்களும், இந்தத் தாக்குதல்களால் தங்கள் குடும்பத்தினரை இழந்துள்ள ஒரு சில குழந்தைகளின் படங்களும் வெளியாயின. அவற்றில், 10 வயதான Aziz al-Kawalek என்ற சிறுவனின் படம் நம் உள்ளத்தைக் கீறி வதைக்கின்றது.

சிறுவன் அஸீஸின் குடும்பத்தினர் அனைவரும், இஸ்ரேல் அரசின் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர். ஏதோ ஒரு தற்காலிக் கூடாரத்தில், சிறுவன் அஸீஸ், கொல்லப்பட்டு, போர்வையால் மூடப்பட்டுள்ள தன் அம்மாவின் உடலருகே, வெறித்த பார்வையுடன் அமர்ந்திப்பதை, இந்தப் படத்தில், காணமுடிகிறது. பெரியவர்களாகிய நாம் செய்துள்ள தவறுகள், நம் அடுத்த தலைமுறையை எவ்வளவுதூரம் பாதிக்கின்றன எனபதை உணர்த்தும் ஆயிரமாயிரம் செய்திப்படங்களில் இதுவும் ஒன்று.

உயிர்களின் மதிப்பையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பற்றி சற்றும் அக்கறை கொள்ளாத நம் தலைமுறைக்கு, இந்த உண்மைகளை உணர்த்த, இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள இரு புதுமைகள் உதவியாக இருக்கும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, தொடர்பற்ற இருவேறு புதுமைகள் இணைக்கப்பட்டுள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.

இரு பெண்கள் குணமடைகின்றனர். நோயுள்ள ஒரு பெண்ணும், நோயுற்று இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வுபெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால், தன் உயிரை, கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வந்தவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய், சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிரிழந்தவர்.

இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், பிறருக்குத் தெரியாமல், கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச்சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

இவ்விரு நிகழ்வுகளையும் நற்செய்தியாளர் மாற்கு இணைத்து சொல்லியிருப்பது, நம் வாழ்வுக்குத் தேவையான ஒரு முக்கியமானப் பாடத்தைச் சொல்லித்தருகின்றது. நாம் மையம் என்று கருதுபவை ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாறும் என்பதே, அந்தப் பாடம். இந்த எண்ணத்தை சிறிது ஆழமாகச் சிந்திப்பது பயனளிக்கும்.

இறக்கும் நிலையில் இருக்கும் தன் மகளை, காக்க வரும்படி, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி. நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பலவாறாகத் திரித்துச் சொல்லியிருக்கும். ஒரு சிறுமி சாகக்கிடக்கிறார் என்ற முக்கிய செய்தியைவிட, தொழுகைக்கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை, முதல் பக்கத்தில், படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.

யாயிரின் வேண்டுதலைக் கேட்டு, இயேசு புறப்பட்டபோது, 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' என்று நற்செய்தி சொல்கிறது. இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை நாம் சிந்தித்த எதுவும் இன்றைய நற்செய்தியின் முக்கியச் செய்தி அல்ல. உலகின் பார்வைக்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும், ஓரங்களில் ஒதுக்கப்பட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த நிகழ்வு, மையமாக மாறியது. அதுதான், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண், குணமடைந்த நிகழ்வு.

பெயரற்ற அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தார். ஒரு பெண், நோயுள்ள பெண், அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண், கூட்டத்தில் இருந்தார் என்பது, யூதர்களுக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமுதாயத்தினின்று விலக்கி வைக்கப்படவேண்டும் என்பது, இஸ்ரயேலர்களின் விதி. ஆனால், இவரோ, கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த ஆண்களை, மதத்தலைவர்களைப்பற்றி.

கூட்டத்தின் மத்தியில், இயேசுவை அணுகுவதைத் தவிர, வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.

"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று எண்ணி வந்த பெண்ணை, இயேசு, ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, அங்கு நடந்த புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார்.

இயேசு நின்றார். கூட்டமும் நின்றது. தன் மேலுடையைத் தொட்ட பெண்ணை கூட்டத்தின் மையத்திற்குக் கொணர்ந்தார். இயேசுவின் ஆடையைத் தொட்டதால் அந்தப் பெண் உடலளவில் குணமானார். இயேசுவின் இந்த அழைப்பு, அவர் மனதையும் குணமாக்கியது.

இரத்தப்போக்கு நோயுள்ள பெண்ணென்று தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல், அந்தச் சமுதாயத்தை சட்டங்களால் கட்டிப்போட்ட மதத்தலைவர்கள் மேல், இப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட அந்தக் கடவுள் மேல், பன்னிரு ஆண்டுகளாய் அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்புக்கள் எல்லாம், அந்தக் கணத்தில் விடைபெற்று மறைந்தன. விடுதலை பெற்றார் அவர்.

தன்னைக் கண்டதும், தன் கதையைக் கேட்டதும், அந்தக் கூட்டம் கொதித்தெழும், தங்களைத் தீட்டுப்படுத்தியப் பெண்ணைத் தீர்த்துக்கட்ட கல்லெடுக்கும் என்று அப்பெண்ணுக்குத் தெரியும். கல்லால் சமாதியே கட்டினாலும் பரவாயில்லை. தான் அடைந்த மீட்பைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும் என்று அப்பெண் தன் கதையைச் சொன்னார். "நிகழ்ந்தது அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5:33) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. அவரது கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்துநின்றது. இயேசு, அந்தப் பெண்ணிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" (மாற்கு 5:34) என்று சொன்னார். அவர் அவ்வாறு சொன்னபோது, "உன்னால், இன்று, இக்கூட்டத்தில் பலர் குணம்பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் இறுகிப்போயிருந்த பலர், இன்று, உன்னால் குணம்பெற்றனர், சமாதானமாகப் போ!" என்று, இயேசு, ஆசீர் வழங்கி அனுப்பினார் என்று நாம் கற்பனைசெய்து பார்க்கலாம்.

இதன்பின், யாயிரின் மகள் குணமான நிகழ்வையும் இன்று நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வின்போது, அவ்வில்லத்தில் கூடியிருந்த அனைவரையும் இயேசு வெளியில் அனுப்பிவிட்டு, (மாற்கு 5:40) இப்புதுமையைச் செய்கிறார். அதைத் தொடர்ந்து, இயேசு, “‘இதை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்" (மாற்கு 5:43) என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது. ஆரவாரமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பமான அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார். ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.

மரணம் என்ற நஞ்சை இவ்வுலகில் புகுத்திய பெருந்தொற்றின் தாக்கம் குறைந்தபின், நாம் தொடரப்போகும் காலத்தில், இறைவன் வழங்கியுள்ள வாழ்வு என்ற மிக உயர்ந்த கொடையை, பேணிக்காக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம். இந்த வாழ்வை, நாமும், குறிப்பாக, வருங்காலத் தலைமுறையினரும் முழுமையாக அனுபவிக்கும் வண்ணம், நமது தலைமுறையினரின் வாழ்வுமுறை, குறிப்பாக, அரசியல் தலைவர்களின் சுயநலப் போக்குகள் மாறவேண்டுமென மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 June 2021, 14:51