தேடுதல்

Vatican News
இயேசு புயலை அடக்கும் காட்சி - மாற்கு 4:35-41 இயேசு புயலை அடக்கும் காட்சி - மாற்கு 4:35-41 

பொதுக்காலம் 12ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று இயேசு கேட்ட கேள்வி, புயலாக வீசும் துயரங்களையும், நம்பிக்கையையும் இணைத்துப்பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 12ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

புயல் வீசிக்கொண்டிருந்தது. இயேசு தூங்கிக்கொண்டிருந்தார்.

புயலில் சிக்கிய ஒரு படகில், இயேசு தூங்கிக்கொண்டிருந்த நிகழ்வு, இஞ்ஞாயிறு நற்செய்தியாக நமக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதுவும், ஒவ்வொரு நற்செய்தியிலும் அவர் தூங்கியவிதம் வெவ்வேறாக கூறப்பட்டுள்ளது.

இயேசு தூங்கிக்கொண்டிருந்தார் (மத். 8:24) என்று மத்தேயுவும், அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார் (லூக். 8:23) என்று லூக்காவும் சொல்லும்போது, மாற்கு இன்னும் சிறிது கூடுதலாக, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார் (மாற். 4:38) என்று, இந்தக் காட்சியைச் சித்திரிக்கிறார்.

புயலுக்கு நடுவிலும் ஒருவரால் தூங்கமுடியுமா? மனசாட்சியோடு மல்யுத்தம் செய்யாமல், மனநிம்மதியோடு தூங்கச் செல்பவர்கள், நன்றாகத் தூங்கமுடியும். நாள் முழுவதும், தன் சொல்லாலும், செயலாலும், மக்களுக்கு, நல்லவற்றையே செய்துவந்த இயேசு, மாலை நேரமானதும், உடலளவில் களைத்துப்போனார். உள்ளத்தளவில், நிறைவுடன் இருந்தார். உடல் களைப்பு, உள்ள நிறைவு ஆகிய இரண்டும் இணைந்தால், ஆழ்ந்த உறக்கம் உறுதி.

நம்மில் பலருக்கு, ஒரு நாள் முடியும்போது, உடல் களைத்துவிடுகின்றது. உள்ளமோ, தேவையான, தேவையற்ற நினைவுகளைச் சுமந்து, அலைபாய்கிறது. எனவே, உடல் உறங்க நினைத்தாலும், உள்ளம் உறங்க மறுப்பதால், போராட்டம் ஆரம்பமாகிறது. ஒரு சிலர், இந்த போராட்டத்திற்கு காணும் தீர்வு என்ன? தூக்க மாத்திரைகள், அல்லது, மதுபானங்கள். இவை நிம்மதியான உறக்கத்திற்கு வழிகளா? சிந்திப்பது நல்லது.

நிம்மதியாக உறங்க, பலரும் பரிந்துரைக்கும் ஒரு வழியை, மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். நாள் முழுவதும் நமது சொல், செயல் இவற்றால் மனதில் பாரங்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படியே, நம்மையும் மீறி, வந்துசேரும் பாரங்களை, மாலைநேரத்தில், ஆண்டவர் பாதத்திலோ, அல்லது, பிறருடன் பகிர்ந்துகொள்வதன் வழியாகவோ, இறக்கிவைக்க முயலவேண்டும்.

பாரங்கள் பாதியான, அல்லது பாரங்களே இல்லாத மனதுடன் படுக்கைக்குச் சென்றால், சீக்கிரம் தூக்கம் வரும். மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாபெரும் கொடைகளில் ஒன்றான தூக்கத்தைப்பற்றி சிந்திக்கவும், அக்கொடைக்காக இறைவனுக்கு நன்றி சொல்லவும், இந்த ஞாயிறு நற்செய்தி நமக்கு ஒரு வாய்ப்பளித்துள்ளது.

இன்றைய நற்செய்திக்குத் திரும்புவோம். புயல் வீசியவேளையில், தூங்கிக்கொண்டிருந்த இயேசுவை, சீடர்கள் எழுப்பமுயன்றனர். இயேசுவை எழுப்ப சீடர்கள் பயன்படுத்திய சொற்கள், மூன்று நற்செய்திகளிலும், வெவ்வேறு விதமாகப் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நெருக்கடியான வேளைகளில், நாம், இறைவனோடு எவ்வாறு தொடர்புகொள்கிறோம் என்பதைக் குறித்து, சில பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

சீடர்கள் தங்கள் பிரச்சனையை மட்டும் கூறினர் என்பதை, "ஆண்டவரே, ஆண்டவரே, சாகப்போகிறோம்" (லூக்கா 8:24) என்ற சொற்களாக நற்செய்தியாளர் லூக்கா பதிவு செய்துள்ளார். சீடர்கள் தங்கள் பிரச்சனையைக் கூறி, இயேசுவை உதவிக்கு அழைத்தனர் என்பதை, "ஆண்டவரே, காப்பாற்றும், சாகப்போகிறோம்" (மத்தேயு 8:25) என்ற சொற்களில், நற்செய்தியாளர் மத்தேயு கூறியுள்ளார். தங்கள் பிரச்சனையைக் கூறுவதுடன், இயேசுவின்மீது பழிசுமத்துவதுபோல், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" (மாற்கு 4:38) என்ற கேள்வியை, சீடர்கள் எழுப்பியதாக, மாற்கு நற்செய்தியில் காண்கிறோம்.

‘உமக்குக் கவலையில்லையா’ என்று சீடர்கள் எழுப்பிய கேள்வி, கடவுளுக்கு கண்ணில்லையா, காதில்லையா, கவலையில்லையா, இரக்கமில்லையா என்ற பாணியில், இவ்வுலகிலிருந்து, ஒவ்வொருநாளும், விண்ணைநோக்கி எழும் கேள்விக்கணைகளை நினைவுறுத்துகிறது. பிரச்சனைகள் வந்ததும், கடவுளை, அவற்றுடன் இணைப்பதும், பிரச்சனைகள் தீராது தொடரும்போது, கடவுளைக் குறைசொல்வதும் நாம் எளிதாக பின்பற்றும் வழிகள். பிரச்சனைகளின் ஆணிவேரைக் கண்டுபிடிக்கும் பொறுமையும், தெளிவும் நமக்குத் தேவை.

இன்றைய உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளில் பெரும்பாலானவை, நம்மாலோ, அல்லது, நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களாலோ உருவாகும் பிரச்சனைகள் என்பதை மறுப்பது கடினம். ஆனால், இயற்கையில் உருவாகும் வெள்ளம், புயல், நிலநடுக்கம் ஆகிய பேரிடர்களை, நாம், பலமுறை, இறைவனுடன் தொடர்புபடுத்திவிடுகிறோம். அப்படியே, நம்மை மீறிய ஒரு சக்தியினால் இயற்கைப் பேரிடர்கள் உருவாகின்றன என்பதை ஏற்றுக்கொண்டாலும், அவற்றில் நிகழும் உயிர்பலிகளின் எண்ணிக்கை, மீண்டும் மனிதர்களின் தவறுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. நிலநடுக்கத்தில், உயிர்ப்பலிகள் அதிகமாய் நிகழ்வது, வறுமைப்பட்ட நாடுகளில் என்பதையும், அந்த உயிர்ப்பலிகள், பெரும்பாலும், மனசாட்சியின்றி கட்டப்பட்ட, தரக்குறைவான கட்டடங்களின் இடிபாடுகளால் நிகழ்ந்தன என்பதையும் உணரும்போது, மனிதர்கள் செய்த தவறுகள், நிலநடுக்கம் என்ற பிரச்சனையை, கூடுதலான வேதனையாக மாற்றுவதைக் காணமுடிகிறது. இந்தியாவின் பல நகரங்களில் வெள்ளம் சூழும்போது, அங்கு, ஆற்றுமணல் கொள்ளை, ஏரிகள், மக்களின் குடியிருப்புகளாக மாறுதல் என்ற மனிதத் தவறுகள் வெளிச்சத்திற்கு வருவதை காணமுடிகிறது.

கடந்த 18 மாதங்களாக நம்மை வதைத்துவரும் கோவிட்-19 பெருந்தொற்று, ஒரு சில மனிதர்களின் மனசாட்சியற்ற, விபரீத ஆய்வுகளால் உருவான கோரம் என்பதை, பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இத்தகைய ஒரு சூழலில், புயல் வீசிய வேளையில், அக்கறையின்றி தூங்கியதாக இயேசுவின் மீது, சீடர்கள் சுமத்திய பழி, துன்ப நேரங்களில் நாம் இறைவனுடன் கொள்ளும் தொடர்பைப்பற்றிய ஓர் ஆன்மீகத் தேடலுக்கு நம்மை அழைத்துச்செல்கிறது.

இயேசு விழித்தெழுந்ததும் செய்தவை, மீண்டும் ஓர் ஆன்மீகத் தேடலை மேற்கொள்ள, நம்மைத் தூண்டுகின்றன. இயேசு விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று. பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். (மாற்கு 4:39-40) என்று இன்றைய நற்செய்தியில் வாசிக்கிறோம்.

தன்மீது குற்றம் சுமத்தும் தொனியில், "போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?" என்று, சீடர்கள் பேசியதற்குக் காரணம், அவர்களது அச்சமே என்பதை உணர்ந்த இயேசு, அந்த அச்சத்திற்குக் காரணமான புயலை முதலில் அடக்கினார். பின்னர், அவர்களை, ஏன் அவ்வளவு அச்சம் ஆட்கொண்டது என்பதை சிந்திக்குமாறு, அழைப்புவிடுத்தார்.

நம் குடும்ப உறவுகளில், புயல் வீசும் வேளைகளில், ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் சூழல்களும் எழுவது இயல்பு. அத்தகையைச் சூழல்களில், குற்றச்சாட்டுகளின் மீது நம் கவனத்தைத் திருப்புவதற்குப் பதில், வீசுகின்ற புயலை அடக்கும் முயற்சிகளை முதலில் மேற்கொள்வது முக்கியம் என்பதை, இயேசு, தன் செயல்கள் வழியே நமக்கு உணர்த்துகிறார்.

“ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று இயேசு கேட்ட கேள்வி, புயலாக வீசும் துயரங்களையும், நம்பிக்கையையும் இணைத்துப்பார்க்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. புயல் வீசும் நேரத்தில் நம் நம்பிக்கை எங்கே போகிறது? ஆழ்மனதில் அதுவும் தூங்கிக்கொண்டிருக்கிறதா? அல்லது, எழுந்து நின்று, சப்தம் போட்டு, இறைவனை அழைக்கிறதா? அல்லது, புயல் வரும்போதெல்லாம், நம்பிக்கை, நமக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டு, நடுக்கடலில் நம்மைத் தத்தளிக்க விட்டுவிடுகிறதா?

கடந்த 18 மாதங்களாக, விடாமல் பெய்யும் மழைபோல, வீசியடிக்கும் புயலைப்போல, சுழன்று வதைக்கும் சுனாமி போல, நம்மை நிலைகுலையைச் செய்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நாம் எத்தனைவிதமான கேள்விகளை எழுப்பியுள்ளோம் என்பதை அறிவோம். குறிப்பாக, எத்தனை முறை நம் கேள்விக்கணைகளை, இறைவன் மீது தொடுத்துள்ளோம் என்பதையும் நாம் அறிவோம்.

இவ்வேளையில், துன்பங்களையும், அழிவுகளையும் தன் வாழ்வில் அடுக்கடுக்காய் சந்தித்த யோபை இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கிறோம். 42 பிரிவுகளைக் கொண்ட இந்நூலில், பெரும்பாலான பிரிவுகளில், யோபின் துன்பங்களைக் குறித்து, யோபும், அவரது நண்பர்களும் கேட்ட பல கேள்விகள் இடம்பெற்றுள்ளன. அக்கேள்விகளுக்கு, இறைவன் கூறும் பதில்கள், இந்நூலின் இறுதி ஐந்து பிரிவுகளில் பதிவாகியுள்ளன.

"ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்" என்று ஆரம்பமாகும் 38ம் பிரிவின் நான்கு இறைவாக்கியங்கள், இன்றைய முதல் வாசகமாக நம்மை அடைந்துள்ளன. கடல் வெள்ளத்தைக் கதவிட்டு அடைத்து, அதற்கு தாழ்ப்பாளைப் பொருத்தி, அதன் எல்லைகளை வறையறுத்து, அலைகளின் இறுமாப்பை நிறுத்தியது நானே என்று இறைவன் யோபிடம் கூறுவதை, இந்தப் பெருந்தொற்று காலத்தில் கேட்பது, நமக்கு நம்பிக்கை தருகின்றது. முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என்று மீண்டும், மீண்டும் எழும் இந்தப் பெருந்தொற்றின் அலைகளுக்கு, கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவரை வருவாய், இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!’ (யோபு நூல் 38: 10-11) என்று இறைவன் கட்டளையிடுவார் என்று நம்புவோம்.

நம் நம்பிக்கையை வளர்க்கும்வண்ணம் இன்றைய பதிலுரைப்பாடலில் நாம் அறிக்கையிட்ட உண்மைகளை மீண்டும் ஒரு முறை மனதில் பதிப்போம்:

தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார். புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டுபோய்ச் சேர்த்தார். ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! (திபா 107: 28-31)

இறுதியாக, இரு எண்ணங்கள், வேண்டுதல்கள். ஜூன் 20, இஞ்ஞாயிறன்று, புலம்பெயர்ந்தோர் உலக நாளைக் கடைபிடிக்கிறோம். ஜூன் 20, ஞாயிறு, தந்தை தினத்தைக் கொண்டாடுகிறோம். மே மாதம் இரண்டாம் ஞாயிறை அன்னை தினமாகவும், ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறை தந்தை தினமாகவும் நாம் கொண்டாடுகிறோம்.

புலம் பெயர்ந்தோர் நாளையும், அன்னைதினம், அல்லது, தந்தைதினம் இவற்றையும் இணைத்துச் சிந்திக்கும்போது, நமது அன்னையரும் தந்தையரும் நம் குடும்பங்களிலேயே புலம்பெயர்ந்தோராய் மாறிவரும் துயரத்தையும் சிந்திக்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் தங்கள் நாட்டைவிட்டு, அல்லது, உள்நாட்டுக்குள்ளேயே ஆதரவு ஏதுமின்றி அலைகழிக்கப்படுகின்றனர். அன்னையரும், தந்தையரும், வீட்டுக்குள்ளேயே, உறவுகள் அறுக்கப்பட்டு, அல்லது, வீட்டைவிட்டு முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு, புலம்பெயர்ந்தோராய் வாழ்கின்றனர். குறிப்பாக, இந்தப் பெருந்தொற்று உருவாக்கிய பல்வேறு கட்டுப்பாடுகளால், வயதில் முதிர்ந்த பல பெற்றோர், தங்கள் உறவுகளைவிட்டு தனிமைப்படுத்தப்பட்டு, வேரற்ற மரங்களாக, இவ்வுலகைவிட்டுப் பிரிந்துசென்ற வேதனையை இன்று நினைவுகூர்வோம்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தாய்க்கு ஒரு தினம், தந்தைக்கு ஒரு தினம் என்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்தக் கொண்டாட்டங்கள், வருடத்தின் இரு நாள்களோடு முடிந்துவிடுவது நியாயமா? ஆண்டின் இரு நாள்களில் மட்டுமல்ல. ஆண்டின் ஒவ்வொரு நாளும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். அவர்கள் இவ்வுலகில் வாழும் எஞ்சிய நாட்கள் அனைத்தும், அவர்கள் நினைவுகூரப்பட வேண்டியவர்கள். போற்றிக் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

உலகில் வீசும் வன்முறைப் புயல்களால் புலம்பெயர்ந்துள்ள குடும்பங்களை, அதிலும் குறிப்பாக, இந்த பெருந்தொற்றினால், தாய், தந்தை என்ற ஆணிவேர்கள் அகற்றப்பட்டு, காய்ந்த சருகுகள் போல புயலில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரம் குழந்தைகளை இன்று சிறப்பாக நினைவுகூர்ந்து, அவர்களுக்காக, இறைவனிடம் உருக்கமான வேண்டுதல்களை எழுப்புவோம்.

19 June 2021, 14:26