தேடுதல்

Vatican News
விதைகள் பற்றி இயேசு கூறியுள்ள உவமைகள் - மாற்கு 4: 26-34 விதைகள் பற்றி இயேசு கூறியுள்ள உவமைகள் - மாற்கு 4: 26-34 

பொதுக்காலம் 11ம் ஞாயிறு: ஞாயிறு சிந்தனை

மண்ணில் புதையுண்டு, ஏனைய உயிர்களை வாழவைக்கும் விதைகளைப்போல, இவ்வுலகில் வாழும் நல்ல உள்ளங்கள் தரும் நம்பிக்கையும், உறுதியும், நம் உள்ளங்களில் இன்று விதைக்கப்படவேண்டும் என்று மன்றாடுவோம்.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

பொதுக்காலம் - 11ம் ஞாயிறு – ஞாயிறு சிந்தனை

‘Got Talent’, அதாவது, 'திறமை உள்ளது' என்ற தலைப்பில், உலகின் பல நாடுகளில் நடைபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை நாம் பார்த்திருக்க வாய்ப்புண்டு. ஒவ்வொருவரும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் அந்நிகழ்வில், அவ்வப்போது, ஒரு சிலர், தங்கள் வாழ்வு அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதைக் கண்டிருக்கிறோம். பல பிரச்சனைகளைத் தாண்டி, தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டது எப்படி என்று, சிலர் கூறும் கதைகள், நம் உள்ளத்தைத் தொட்டிருக்கவும் வாய்ப்புண்டு. அத்தகைய ஒரு பகிர்வு, ஜூன் 8, கடந்த செவ்வாயன்று, America’s Got Talent (AGT) நிகழ்வில் இடம்பெற்றது. Jane Marczewski என்ற 30 வயதுள்ள இளம் பெண் இந்நிகழ்வில் பகிர்ந்துகொண்டது, இன்று நாம் வாழும் கோவிட்-19 சூழலையும், இஞ்ஞாயிறு நற்செய்தியையும் புரிந்துகொள்ள உதவியாக உள்ளது.

மேடைக்கு வந்த இளம்பெண் ஜேன் அவர்கள், தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டபின், தான் இயற்றிய, ஒரு பாடலை பாடப்போவதாகவும், அந்தப் பாடலின் தலைப்பு, “It’s Okay”, அதாவது, 'அது நல்லதே' என்றும் கூறினார். அந்தப் பாடலை, அவர், எந்தப் பின்புலத்தில் உருவாக்கினார் என்று கூறியபோது, அவர் வாழ்வில், குறிப்பாக, அவர் உடல்நிலையில் பலவிடயங்கள் சரியில்லை என்பது, அரங்கத்தில் இருந்தவர்களுக்குப் புரிந்தது. ஜேன் அவர்கள், கடந்த இரு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிவருகிறார். தற்போது, அவரது நுரையீரல், தண்டுவடம், மற்றும் கல்லீரல் ஆகியவற்றில் புற்றுநோய் இருப்பதாகக் கூறினார்.

இந்த நிகழ்வில் நடுவர்களாக இருப்பவர்களில் ஒருவர், "'அது நல்லதே' என்ற பாடலை உருவாக்கியுள்ள உங்கள் உடல்நலம் நன்றாக இல்லையே" என்று கூறியபோது, ஜேன் அவர்கள் பதில்மொழியாக, "எனக்கு ஏற்பட்டுள்ள பல மோசமான விடயங்களைக் காட்டிலும் நான் உயர்ந்தவள் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது முக்கியம்" (“It's important that everyone knows I'm so much more than the bad things that happen to me,") என்று, அழகான ஒரு புன்னகையோடு கூறினார்.

அதைத் தொடர்ந்து அவர் பாடியபோது, அப்பாடலின் வரிகளும், அவரது குரலும் அரங்கத்தில் இருந்த அனைவரையும் 3 நிமிடங்கள் கட்டிப்போட்டன. வாழ்வில் தொலைந்துபோனதுபோல் தான் உணர்ந்த அனுபவங்களைக் கூறும் இப்பாடலில், "நாம் எல்லாருமே வாழ்வில் சிறிது தொலைந்துபோயிருக்கிறோம். அவ்வாறு தொலைந்துபோவதும் நல்லதே" என்ற வரிகளை இளம்பெண் ஜேன் அவர்கள் எழுதியுள்ளார்.

அவர் பாடி முடித்ததும், அரங்கத்தில் இருந்த அனைவரும், நடுவர்கள் நால்வரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். அவரது திறமையைப் பாராட்டிய மற்றொரு நடுவர், "உங்கள் குரல் மிக, மிக அழகாக உள்ளது. அதைவிட, நீங்கள் கடந்துவந்துள்ள வேதனைகளை இவ்வளவு இலேசான மனதோடு கூறியது மிகச்சிறப்பாக இருந்தது" என்று பாராட்டினார். அப்போது, இளம்பெண் ஜேன் அவர்கள் சொன்ன சொற்கள், மிக, மிக ஆழமானவை: "ஒருவர் தன் வாழ்வில் மகிழ்வாக இருக்கும் முடிவை எடுப்பதற்கு, இதைவிடக் கொடுமைகள் வாழ்வில் ஏற்படப்போவதில்லை என்ற நிலை வரும்வரை காத்திருக்கத் தேவையில்லை" (“You can’t wait until life isn’t hard anymore before you decide to be happy.”) என்று ஜேன் அவர்கள் கூறியது, நடுவர்களையும், அரங்கத்தில் இருந்தோரையும், கண்கலங்க வைத்தது. அவரது பாடலின் காரணமாக, அவர் நேரடியாக இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.

மேடையின் பின்புறம் சென்ற இளம்பெண் ஜேன் அவர்களை, இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் சந்தித்தபோது, "உங்கள் குரலாலும், பாடலாலும், எங்கள் அனைவரையும் நீங்கள் மெய்மறக்கச் செய்தீர்கள். இந்த ஆண்டு எங்களுக்குத் தேவையானது, உங்கள் குரலே" என்று கூறினார். தொகுப்பாளர் அவ்வாறு சொன்னபோது, ஜேன் அவர்களின் அழகானக் குரலைத் தாண்டி, அவரது பின்னணிக் கதையை, இவ்வுலகம் இவ்வாண்டு கட்டாயம் கேட்கவேண்டும் என்று அவர் சொன்னதுபோல் தெரிந்தது.

இந்த நிகழ்வின் இறுதியில், ஜேன் அவர்கள், YouTube பதிவில் கூறும் மற்றொரு கூற்றும், நம் உள்ளங்களைத் தொடுவதாக அமைந்துள்ளது: "நான் வாழ்வதற்கு, 2 விழுக்காடு வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது 2 விழுக்காடு, பூஜ்யம் விழுக்காடு அல்ல. 2 விழுக்காடு இன்னும் எவ்வளவு முக்கியமானது, அது எவ்வளவு வியப்புக்குரியது என்பதை, மக்கள் உணரவேண்டும் என்று விரும்புகிறேன்" (“I have 2% chance of survival, but 2% is not zero percent. 2% is something and I wish people know how amazing it is.”) என்று அவர் கூறியுள்ளார்.

புற்றுநோயுடன் போராடினாலும், தன் கனவை நிறைவேற்ற மேடையேறிய இளம்பெண் ஜேன் அவர்களின் உள்ள உறுதி, இவ்வாண்டு பலருக்குத் தேவைப்படுகிறது. குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றுடன் போராடிவரும் பலரது உள்ளங்களில், ஜேன் அவர்களின் உள்ள உறுதி, ஒரு விதையாக விதைக்கப்படவேண்டும் என்ற வேண்டுதலுடன் நம் சிந்தனைகளைத் தொடர்வோம்.

ஜேன் அவர்களைப்பற்றியும், அவர் கலந்துகொண்ட நிகழ்வைப்பற்றியும், இவ்வளவு விரிவாகக் கூறுவதற்கு இரு காரணங்கள் உண்டு. இளம்பெண்  ஜேன் அவர்களின் கதையைப்போன்று, நேர்மறையான உணர்வுகளையும், நம்பிக்கையையும் தரும் கதைகளை, இந்நாள்களில் நாம் அதிகம் கேட்பது, நம் உள்ளங்களுக்கு நல்லது. என்பது, முதல் காரணம்.

அடுத்து, இன்றைய நற்செய்தியில், (மாற்கு 4: 26-34) யாருக்கும் தெரியாமல், தானாகவே வளரும் விதை, மற்றும், பெரியதொரு செடியாக வளரும் மிகச் சிறிய கடுகுவிதை என்ற இரு உவமைகளைக் கேட்கும்போது, ஜேன் போன்றவர்களைப்பற்றிய வாழ்க்கை விவரங்கள், விதைகளாக மாறி, நமக்குள் பலன்கள் தரவேண்டும் என்பது, இரண்டாவது காரணம்

மண்ணில் விதைக்கப்படும் ஒவ்வொரு விதையும், தான் மடிந்து புதைந்தால்தான், பல மடங்கு பயன்தரும். இந்த எண்ணத்தை வெளிப்படுத்த, இயேசு மற்றொரு விதையைப்பற்றி கூறிய கூற்று, நினைவில் தோன்றுகிறது: "கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" (யோவான் 12:24). தான் ஒரு விதையாக மண்ணில் புதைக்கப்படப்போகிறோம் என்ற எண்ணம் இயேசுவின் உள்ளத்தில் மேலோங்கியிருந்த வேளையில், அவர் இந்த 'உவமை'யைக் கூறியுள்ளார் என்ற உண்மை, இவ்வுவமைக்கு இன்னும் அதிக ஆழத்தைத் தருகிறது.

ஒரு விதை, மரணத்தையொத்த அனுபவம் பெறும்போது, பல விதைகளை வழங்குகிறது, அல்லது, பல உயிர்களுக்கு நிழல்தரும் மரமாக உயர்கிறது. இளம்பெண் ஜேன் அவர்கள், AGT நிகழ்வில் தோன்றிய YouTube பதிவை, 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 23 இலட்சம் பேர் பார்த்திருந்தனர். அடுத்த இரு நாள்களில், இப்பதிவைப் பார்த்தோரின் எண்ணிக்கை, ஆறு மடங்காக உயர்ந்து, இச்சனிக்கிழமை காலையில், 1 கோடியே, 38 இலட்சத்தைத் தாண்டி, (13,870,702) இன்னும் வளர்ந்த வண்ணம் உள்ளது. இத்தனை இலட்சம் பேரில், புற்றுநோய், கோவிட் பெருந்தொற்று போன்ற பல பிரச்சனைகளைச் சந்தித்துவரும் ஆயிரமாயிரம் பேரின் உள்ளங்களில், இல்லங்களில், ஜேன் அவர்கள், நம்பிக்கை விதைகளை விதைத்திருப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

விதைகளிடமிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ள நமக்கு பணிவுள்ள மனம் தேவை. தானாக வளரும் விதை, கடுகு விதை என்ற இரு விதைகள் வழியே, இயேசு சொல்லித்தரும் பாடங்களை, பணிவான உள்ளத்துடன் பயில முயல்வோம்.

பொதுவாகவே, இயற்கை என்ற பள்ளியில், இறைவன் நமக்குச் சொல்லித்தரும் பாடங்களை, கவனமாகக் கற்றிருந்தால், இயற்கையை அழிவிலிருந்து எவ்விதம் காப்பாற்றுவது என்று கவலைப்படும் நிலைக்கு நாம் வந்திருக்கத் தேவையில்லை. இயற்கையைவிட நாம் அறிவாளிகள் என்ற இறுமாப்பில், இறைவன் படைத்த இயற்கையை சின்னாபின்னமாக்கிவிட்டு, இப்போது, இறந்துகொண்டிருக்கும் இயற்கையை எப்படி உயிர்பிப்பது என்று கற்றுக்கொள்ள, உச்சி மாநாடுகள் நடத்திவருகிறோம்.

மனிதர்களாகிய நாம், நம் சுயநல வெறியால், இயற்கையைச் சீரழித்து, ஏனைய உயிர்களை, அளவுக்கதிகமாக வதைத்துவந்ததன் விளைவாக, கோவிட்-19 பெருந்தொற்றையும், அதன் உறவு தொற்றுக்களையும் இவ்வுலகில் புகுத்திவிட்டோம். இப்போது, இவற்றை நம் நடுவிலிருந்து இனி விரட்டியடிக்க முடியாது என்பதை உணர்ந்து, இந்தக் கிருமிகளோடு எவ்வாறு வாழ்வது என்ற பாடங்களைப் பயில முயன்று வருகிறோம்.

ஆரம்பத்திலிருந்தே, இறைவன் தந்த கொடையான இயற்கையை அடக்கி ஆளாமல், அதனுடன் நாம் எவ்வாறு இணைந்து வாழமுடியும் என்ற பாடத்தைப் பயின்றிருந்தால், தற்போது, கிருமிகளோடு வாழும் பாடங்கள் நமக்குத் தேவையில்லாமல் போயிருக்கும். இயற்கையை, அதன் வழியில் வளரவிடுவதே தலைசிறந்த ஞானம் என்பதை, இயேசு, 'தானாகவே வளரும் விதை' உவமை வழியே சொல்லித்தர விழைகிறார்.

மாற்கு நற்செய்தியில் மட்டும் நாம் காணும் இந்த அழகிய உவமை (மாற்கு 4: 26-29) கேட்பதற்கு மிக எளிதான உவமை. வேளாண்மை என்பது மிகவும் எளிதான விடயம் என்ற கற்பனையை, இயேசுவின் வார்த்தைகள் உருவாக்குகின்றன. விதைப்பவர் செய்யவேண்டியதெல்லாம், மிக, மிக எளிதான காரியங்கள்... விதைக்கவேண்டும், காத்திருக்கவேண்டும், அறுவடைக்காலம் வந்ததும் அறுவடை செய்யவேண்டும்... அவ்வளவுதான். விதைப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் இடைப்பட்டக் காலத்தில், இயற்கை தானாகச் செயல்படும் என்ற கருத்தில் இயேசு பேசியிருக்கிறார். "அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது... நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது" (மாற்கு 4: 27) என்பவை, இயேசுவின் வார்த்தைகள்.

இவ்வார்த்தைகளைக் கேட்கும்போது, நமக்குள் கேலிச்சிரிப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. இயேசுவுக்கு விவசாயம்பற்றி சரிவரத் தெரியவில்லை என்ற மமதையில் எழும் கேலிச்சிரிப்பு அது. ஆனால், இந்த உவமையின் ஆழத்தைப் புரிந்துகொண்டால், நம் கேலி மறைந்து, கேள்விகள் மனதை உறுத்தும். இந்த உவமையில், இயேசு சுட்டிக்காட்டுவது, எளிதான, இயற்கை வழிகள்... இந்த இயற்கை வழியில் நாம் சென்றிருந்தால்... நம் பேராசைகளுக்கும், அவசரங்களுக்கும் ஏற்றபடி இயற்கையை மாற்றாமல், அது செயல்படும் போக்கில் நாம் சென்றிருந்தால்... இயற்கையை இவ்வளவு சீரழித்திருப்போமா, கோவிட் கிருமியின் குடும்பத்தை நம் மத்தியிலும், நமக்குள்ளும் வாழ அழைத்திருப்போமா என்ற கேள்விகள் எழுகின்றன.

இந்த உவமையில் இயேசு முக்கியமாக வலியுறுத்துவன - பொறுமை, நிதானம், நம்பிக்கை போன்ற அற்புத குணங்கள்... இந்த அற்புத குணங்கள், நாம் வாழும் உலகில், பெருமளவு காணாமல்போய்விட்டன. இன்றைய அவசர உலகின் கணக்குப்படி, இன்று விதைக்க வேண்டும், நாளையே அறுவடை செய்யவேண்டும்.

நமது அவசரத்துக்கு ஈடுகொடுக்கும் வண்ணம், தொழில் நுட்பங்கள், வேதியல் உரங்கள், விதைகளில் மரபணு மாற்றங்கள், திடீர் விதைகள், திடீர் பயிர்கள் என்று எத்தனை, எத்தனை விபரீதச் சோதனைகள். இந்தச் சோதனைகளின் தீய விளைவுகளால், ஆயிரக்கணக்கில் விவசாயிகளின் தற்கொலைகளும் நிகழ்ந்துவருகின்றன.

சுயநலம், பேராசை, குறுக்குவழி, உடனடித்தீர்வுகள், அவசரம், என்ற களைகளை ஆரம்பத்திலிருந்தே நமது தனிப்பட்ட வாழ்விலும், சமுதாய வாழ்விலும் நாம் வேரோடு களைந்திருந்தால், சுற்றுச்சூழலைப்பற்றி இவ்வளவு தூரம் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. பூமிக்கோள உச்சி மாநாடுகளை நடத்தியிருக்கத் தேவையில்லை. ஒரு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் சரிவர நடக்காமல் போனதால், அடுத்தடுத்து, உலக உச்சி மாநாடுகளை நடத்தியுள்ளோம்.

அடிப்படையில் மனித சமுதாயத்தில் ஆழமாய் வேரூன்றியிருக்கும் சுயநலத்தையும் அதன் கிளைகளாய் வளர்ந்திருக்கும் பேராசை, குறுக்குவழிகள் என்ற களைகளையும் நீக்காவிட்டால், மீண்டும், மீண்டும் பூமிக்கோள உச்சி மாநாடுகள் மட்டும் நடைபெறுமே தவிர, நாம் முழு மனித வளர்ச்சியில் உச்சிகளை அடைவது கடினமாகிவிடும்.

மண்ணில் புதையுண்டு, தங்கள் உருவை இழந்து, செடிகளாக, மரங்களாக மாறி, ஏனைய உயிர்களை வாழவைக்கும் விதைகளைப்போல, இவ்வுலகில் வாழும் இளம்பெண் ஜேன் போன்றவர்கள் தரும் நம்பிக்கையும், உறுதியும், நம் உள்ளங்களில் இன்று விதைக்கப்படவேண்டும் என்று மன்றாடுவோம். மனிதர்களாகிய நாம், சுயநல வெறியை அழித்து, இறைவன் வழங்கிய அற்புதக் கொடையான இயற்கையைப் பேணிக்காக்கவும், இயற்கையோடு இயைந்து வாழவும் தேவையான பாடங்களை பயில, இறைவன், நமக்கு உள்ளொளியை வழங்குவாராக!

12 June 2021, 15:46