தேடுதல்

Vatican News
தச்சரான புனித யோசேப்பு தச்சரான புனித யோசேப்பு 

மகிழ்வின் மந்திரம் - புனித யோசேப்பின் விருந்து விழா

மற்றவர்களால் செய்யமுடியாத ஒரு பெரும்பணியை ஆற்றிவிட்டு, போய் வருகிறேன் என்று சொல்லாமலும், கூலி வாங்காமலும் சென்றுவிட்ட பெரும் புனிதர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் :   வத்திக்கான்

எத்தனையோ ஆயிரம் புதுமைகளை ஆற்றியுள்ள புனித யோசேப்பின் நான்கு புதுமைகள் குறித்து உங்களுக்குத் தருகிறோம்.

புனித யேசேப்பு உருவாக்கிய அதிசய படிக்கட்டு

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ மெக்சிகோ என்ற இடத்தில் இருந்த லொரேட்டோ பெண் துறவியர் சபையைச் சேர்ந்தவர்கள், தங்கள் இல்லத்திற்கென கோவில் ஒன்றை கட்டினர். 1878ம் ஆண்டு அது கட்டி முடிக்கப்பட்டபோது, மேல் சிறு தளத்தில் பாடகர் குழுச் செல்வதற்கு படிக்கட்டு ஒன்றை அமைக்க திட்டமிட்டனர். 22 அடி உயரத்தில் மரப்படிக்கட்டு ஒன்றை அமைக்க தச்சர்களுக்கு அழைப்பு விடப்பட்டது. ஏற்கனவே, கோவில் சிறியதாக இருந்ததால், படிக்கட்டு அமைத்தால், இடத்தை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும், ஆகவே, தேவைப்படும்போது ஏணியை வைத்துக் கொள்ளுங்கள் என பலரும் ஆலோசனை வழங்கி ஒதுங்கிக்கொண்டனர். இப்பணி, தச்சுத்தொழில் தொடர்பானதால், தச்சரான புனித யோசேப்பை நோக்கி 9 நாள் செபத்தை துவக்கி, அவரின் பரிந்துரையைக் கேட்டு மன்றாடினர் அந்த அருள்சகோதரிகள். ஒன்பதாம் நாள் ஒரு கழுதையுடனும், தச்சுத் தொழிலுக்குத் தேவையான பொருட்களுடனும் அந்த கோவிலின் முன் வந்த ஒரு மனிதர், தனக்கு எதுவும் வேலை கொடுக்கமுடியுமா என சகோதரிகளிடம் கேட்டார். லொரேட்டோ சகோதரிகளும் அந்த மரப்படிக்கட்டை அமைத்துத் தரும் பணியை அவரிடம் ஒப்படைத்தனர். மூன்று மாதங்கள் அங்கு பணிபுரிந்த அந்த மனிதர், வேலை முடிந்ததும், சொல்லாமல் கொள்ளாமல், கூலியும் வாங்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். அவரைத் தேடிய சகோதரிகள், அவரைக்குறித்து அப்பகுதி தினத்தாளில் விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டனர். எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அருள்சகோதரிகளின் செபத்திற்கு பதிலுரைக்கும் விதமாக புனித யோசேப்பே வந்து அதனை ஆற்றிக்கொடுத்தார் என அனைவரும் நம்புகின்றனர்.

 • ஏனெனில், அந்த மரப்படிக்கட்டு, அமைக்கப்பட்டிருக்கும் சூட்சுமம், நேர்த்தி, தொழில் நுட்பம், இன்றும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக உள்ளன. இரண்டு பெரும் வளைவுகளைக் கொண்டுள்ள இந்த பட்டிக்கட்டுக்கு, தாங்கி நிற்கும் தூண்களே இல்லை.
 • இந்த மரப்படிக்கட்டில் ஆணிகள் பயன்படுத்தப்படவில்லை, மரத்துண்டுகளே, இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
 • இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மரம் அப்பகுதியைச் சேர்ந்தது அல்ல, மற்றும், அது எப்படி, எப்போது கொண்டுவரப்பட்டது என்பது யாருக்கும் தெரியவில்லை.
 • அந்த தச்சர் அங்கு வேலை செய்த மூன்று மாதத்தில் ஒருமுறை கூட அங்கிருந்து வெளியேறியதை எவரும் பார்த்ததில்லை.
 • இந்த வேலை முடிந்தபின் எவரும் அவரை எங்கும் பார்த்ததாக இல்லை.
 • இவற்றையெல்லாம் குறித்து ஆச்சரியமடையும் அருள்கன்னியர்களும், அப்பகுதி மக்களும், நிச்சயமாக அது புனித யோசேப்புதான் என உறுதியாக நம்புகின்றனர்.

புனித யோசேப்பின் விருந்து விழா

 • அமைதியின் மனிதர், கனவுகளின் புனிதர் என்றெல்லாம் அறியப்படும் நம் புனித யோசேப்பு, புதுமைகள் ஆற்றுவதிலும் வல்லவராக இருக்கின்றார். இத்தாலியர்களைப் பொருத்தவரையில், புனித யோசேப்புக்கு, அவர்களின் இதயங்களில், எப்போதும் தனியிடம் உண்டு.
 • வரலாற்றின் மத்தியக் காலத்தில், இத்தாலியின் சிசிலி தீவை, பெரும் வறட்சியும் பஞ்சமும் தாக்கின. அவர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பை நோக்கி, மழைக்காக, அவர்கள் வேண்டினர். அவ்வாறு வேண்டும்போது, மழை பெய்தால், புனித யோசேப்பின் பெயரால் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து, அனைத்து வறியோரையும் அழைத்து, இணைந்து உண்போம் என, வாக்குறுதியும் அளித்தனர், சிசிலி தீவு மக்கள்.
 • தந்தையர்களின், தச்சுத்தொழிலாளர்களின், மற்றும், சமூக நீதியின் பாதுகாவலரான புனித யோசேப்பு, சிசிலி மக்களின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தார். அவர்களுக்காக இறைவனிடம் பரிந்துரைத்து, மழையைப் பெற்றுத்தந்து, பஞ்சத்தைப் போக்கினார். புனித யோசேப்பின் பெயரில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அனைத்து வறியோருக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. அன்றிலிருந்து, ஒவ்வோர் ஆண்டும், புனித யோசேப்பின் திருவிழாவான மார்ச் 19ம் தேதி, அனைத்து ஏழைகளையும் அழைத்து விருந்து படைப்பது, சிசிலி தீவின் வழக்கமாக இருந்துவருகிறது. முதல் இடத்தில், திருக்குடும்பத்தை குறிக்கும் வகையில் மூன்று வறிய குழந்தைகளை உட்கார வைத்து அவர்களுக்கு விருப்பமான உணவையும் பானங்களையும் பரிமாறி, ஏனைய வறியோருடன் இணைந்து உண்பது, சிசிலி தீவு மக்களின் மார்ச் 19 விழாச் சடங்கின் ஒரு பகுதியாக உள்ளது. வழக்கமாக, தவக்காலத்தில் சிறப்பிக்கப்படும் புனித யோசேப்பின் திருவிழாவில், முற்றிலும் மாமிசத்தை தவிர்த்த ஒரு பெரும் விருந்தை வறியோருக்கென ஏற்பாடுச் செய்யும் சிசிலியர்கள், அதில் அனைத்து காய்கறிகளும், பழங்களும், இனிப்புகளும் இடம்பெறச் செய்வர். முதலில், அருள்பணியாளர் அந்த உணவை ஆசிர்வதித்தபின், புனித யோசேப்பின் உணவு வாழ்க, என மக்கள் ஆரவாரம் செய்வர். அதன் பின்னரே விருந்து துவங்கும். பஞ்சத்திலிருந்து மக்களைக் காப்பாற்றிய புனித யோசேப்புக்கு நன்றியுரைப்பதாக, இந்த விருந்து விழா துவக்கப்பட்டது.

புனித யோசேப்பின் Cotignac நீரூற்று

 • இவ்வுலகில் அன்னைமரியா வழங்கியுள்ள அற்புத காட்சிகள் எண்ணிலடங்காதவை. பல்வேறு புதுமைகளையும் அவர் ஆற்றியுள்ளார். ஆனால், புனித யோசேப்பின் புதுமைகளும் காட்சிகளும் மிகக்குறைவே. அதிலும், திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவை, இன்னும் குறைவே. திருஅவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புனித யோசேப்பின் புதுமைகளுள் ஒன்று:
 • பிரான்ஸ் நாட்டின் Cotignac எனுமிடத்தில் 1660ம் ஆண்டு ஜூன் மாதம் 7ம் தேதி, Gaspard Ricard என்ற இடையர், தன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த வேளையில், அவருக்குத் தாகம் எடுக்க, தன் குவளையைத் திறந்துப் பார்த்தார். அதில் தண்ணீர் ஏற்கனவே முடிந்திருந்தது. அங்கும் இங்கும் ஓடி அலைந்து எங்கும் தண்ணீர் கிட்டாததால், சோர்வாக ஓர் இடத்தில் கவலையோடு அமர்ந்திருந்தார். தாகத்தால் அவர் நாக்கு வறண்டு போயிருந்தது. அப்போது, திடீரென்று அங்கு தோன்றிய ஒரு வயதான மனிதர், இடையரை நோக்கி, தன் பெயர் யோசேப்பு என அறிமுகப்படுத்திக்கொண்டு, அருகே இருக்கும் பாறையை தூக்கி தண்ணீரை அருந்து என்று கூறினார். இடையர் ரிச்சர்ட் அவர்களுக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. ஏனெனில், அது ஒரு பெரிய பாறை. பலர் ஒன்று கூடினாலும் தூக்கமுடியாதது. இருப்பினும், முதியவரின் வார்த்தைகளுக்கு மதிப்புக்கொடுத்து, தூக்கித்தான் பார்ப்போமே என தூக்க முயன்றார். அவரால் அந்த பெரிய பாறையை எளிதாகத் தூக்கமுடிந்தது. அநத பாறைக்கடியில், ஒரு நீரூற்றும் புறப்பட்டது. தண்ணீரைக் குடித்துவிட்டு, நன்றி சொல்லலாம் என நிமிர்ந்து பார்த்தால், அந்த முதியவரைக் காணவில்லை. ஊருக்குள் ஓடிச்சென்ற ரிச்சர்டு, நடந்த அனைத்தையும்  எடுத்துரைத்தார். அன்றிலிருந்து அந்த நீரூற்று, உடல் மற்றும் ஆன்மீக சுகமளிக்கும் நீரூற்றாக இன்றும் இருந்துவருகிறது. அதே இடத்தில் புனித யோசேப்பு பெயரால் ஒரு கோவிலும் கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு இன்னுமொரு பெரிய சிறப்பும் உள்ளது. அதாவது, இதன் அருகில்தான், இப்புதுமை நடப்பதற்கும் 81 ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1519ம் ஆண்டு அருள்கொடைகளின் நமதன்னை காட்சி அளித்ததன் நினைவாக திருத்தலம் ஒன்றும் உள்ளது.

துறவிக்கு வழிகாட்டிய புனித யோசேப்பு

 • புனித யோசேப்பு நிகழ்த்திய புதுமைகள் குறித்து எண்ணற்ற குறிப்புக்கள் வரலாற்று ஏடுகளில் உள்ளன. அவற்றுள் ஒன்று, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த இஸ்பானிய துறவி ஒருவரின் வாழ்வில் நிகழ்ந்தது.
 • இஸ்பெயின் நாட்டின் Montserrat எனும் துறவு மடத்திலுள்ள துறவி ஒருவர், புனித யோசேப்பு மீது அதிக பக்திகொண்டவர். குறிப்பாக, குழந்தை இயேசுவைத் தூக்கிக் கொண்டு, பெத்லகேமில் இருந்து புனித யோசேப்பு, அன்னை மரியாவுடன் எகிப்துக்கு எவ்வாறு தப்பிச் சென்றிருக்கமுடியும், ஒரு சிசுவுடனும், இளம் தாயுடனும் எத்தனை சிரமங்களை தன் பயணத்தில் சந்தித்திருக்கவேண்டும் என, அடிக்கடி, இந்த துறவி தியானம் செய்வதுண்டு. 
 • ஒருநாள் இரவு மலைப்பாதை வழியாக தன் துறவுமடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த இந்த துறவி, பாதையை தவறவிட்டுவிட்டார். தனிமையில் வந்துகொண்டிருந்த இவருக்கு அப்பாதையின் கொடிய விலங்குகள் குறித்தும், கொடூரமான வழிப்பறி திருடர்கள் குறித்தும் அச்சம் ஏற்பட்டது. உடனே, தனக்கு மிகவும் பிடித்தமான புனித யோசேப்பின் பாதுகாவலை வேண்டி செபிக்கத் தொடங்கினார். அப்போது, எங்கிருந்தோ வந்த வயதான ஒரு மனிதரும், அவருடன், ஒரு கழுதையின் மேல், கையில் குழந்தையை ஏந்திய ஒரு பெண்மணியும், தன் அருகில் வருவதைக் கண்டார் அத்துறவி. வயதானவரை நோக்கி, 'என்னுடைய துறவுமடத்திற்கான வழியை தவறவிட்டுவிட்டேன். எத்திசையில் நான் செல்லவேண்டும் என கூறினால், நான் விரைவாகச் சென்றுவிடுவேன்' என கூறினார் துறவி. வயதான அம்மனிதரோ, துறவியை நோக்கி, 'நீ என்னைப் பின்தொடர்ந்தால், இந்த இரவு வேளையிலும், கரடுமுரடான இந்த பாதையிலும், என்னால், உன்னை, உன் துறவு இல்லத்திற்கு கொண்டு சேர்க்கமுடியும், ஏனெனில், இந்த வழி எனக்கு முற்றிலுமாகத் தெரியும்' என்றார்.
 • அந்த இளம்பெண், குழந்தையை தாங்கியவண்ணம், கழுதையில் அமர்ந்திருக்க, வயதான அம்மனிதர் கழுதையின் கயிற்றை பிடித்துக்கொண்டு முன்னால் வழிநடக்க, அந்த துறவி அவர்களைப் பின்தொடர்ந்துச் சென்றார். துறவுமடம் வரை வந்த அந்த வயதானவரும், இளம்பெண்ணும், குழந்தையும் அதன்பின்னர் மாயமாக மறைந்துவிட்டனர்.
 • அப்போதுதான் அந்த துறவிக்குப் புரிந்தது, தனக்கு உதவியது திருக்குடும்பம் என்பது. 'என்னைப் பின்தொடர்ந்தால், நான் உன்னை பத்திரமாக உன் இருப்பிடம் சேர்ப்பேன்', என புனித யோசேப்புக் கூறியது, அத்துறவியின் இறப்புவரை, ஓர் இனிய நினைவாக, ஆறுதலின் வார்த்தையாக இருந்துவந்தது. எத்தனையோபேர் வாழ்விலும் அது தொடர்கிறது.
26 June 2021, 13:11