தேடுதல்

இலங்கை கடற்பகுதியில் கழிவுகளை அகற்றும் பணி இலங்கை கடற்பகுதியில் கழிவுகளை அகற்றும் பணி 

இலங்கை கிறிஸ்தவ தலைவர்கள்: உலக அளவில் தடுப்பூசி பாகுபாடு

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில், இலங்கையிலும், பன்னாட்டு அளவிலும், நீதி மற்றும், நேர்மை குறைவுபடுகின்றது - இலங்கை கிறிஸ்தவ தலைவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கையில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடினமான பொருளாதார மற்றும், சமுதாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மக்களுக்கு, ஆதரவுக்கரம் நீட்டப்படுமாறு அந்நாட்டு கிறிஸ்தவத் தலைவர்கள், அரசுக்கு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளனர்.

இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களும், அந்நாட்டு தேசிய கிறிஸ்தவ அவைத் (NCC) தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருந்தொற்று உருவாக்கியுள்ள நலவாழ்வு நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றோடு,  இலங்கை கடற்பகுதியில், X-Press Pearl என்ற கப்பல் விபத்துக்குள்ளாகியதால் இடம்பெற்றுள்ள சுற்றுச்சூழல் மாசுகேடும், ஏழைகளை அதிகம் பாதித்துள்ளன என்று கூறப்பட்டுள்ளது. 

கடற்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதால், மீன்பிடித் தொழிலும், பல குடும்பங்களின் வாழ்வாதாரங்களும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்று குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், பெருந்தொற்று பரவத்தொடங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், பொதுவான நலவாழ்வைக் காப்பதற்கு, போதுமானத் திட்டங்கள் இன்னும் வகுக்கப்படவில்லை என்று, இலங்கை அரசை குறை கூறியுள்ளனர்.

தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளிலும், நாட்டிலும், பன்னாட்டளவிலும், நீதி மற்றும், நேர்மை குறைவுபடுகின்றது என்றும், இவற்றை விநியோகிப்பதில், உலக அளவில் வடக்கிற்கும், தெற்கிற்கும் இடையே, பாகுபாடு நிலவுகிறது என்றும், இலங்கை கிறிஸ்தவ தலைவர்கள் கூறியுள்ளனர்.

காவல்துறை தடுப்புக்காவலில் இடம்பெறும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன, 2019ம் ஆண்டில் உயிர்ப்புப் பெருவிழாவன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளில் அதிகாரிகளின் அக்கறையின்மை நிலவுகிறது, மீனவர்கள், விவசாயிகள் போன்ற சமுதாயத்தில் வாய்ப்பிழந்த குழுமத்தினர் எதிர்கொள்ளும் கடினவாழ்வை அவர்களே சமாளிக்க வேண்டியிருக்கின்றது போன்ற பல விடயங்களை, அத்தலைவர்கள், இலங்கை அரசின் கவனத்திற்கு முன்வைத்துள்ளனர். (AsiaNews)  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 June 2021, 15:14