தேடுதல்

இலங்கையில் கப்பல் சேதத்தால் கடலில் கலந்த வேதியக் கழிவுகள் சுத்தம் செய்யப்படுகின்றன இலங்கையில் கப்பல் சேதத்தால் கடலில் கலந்த வேதியக் கழிவுகள் சுத்தம் செய்யப்படுகின்றன 

சுற்றுச்சூழல் பேரிடருக்கு காரணமான முதலாளிக்கு எதிராக...

இலங்கை கடற்கரையில் ஒதுங்கும் பொருள்கள் எவற்றையும் யாரும் தொடவேண்டாம் என்றும், அவை நச்சுகலந்ததாக இருக்கும் என்றும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இலங்கை கடற்கரையில் சுற்றுச்சூழல் பேரிடர் உருவாகக் காரணமான, ஒரு கப்பல் முதலாளிக்கு எதிராக, சட்டமுறைப்படி நடவடிக்கை எடுப்பதற்கு, அந்நாட்டு கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தீர்மானித்துள்ளார் என்று யூக்கா செய்தி கூறுகின்றது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட MV X-Press Pearl என்ற கப்பல், இவ்வாண்டு மே 20ம் தேதி இலங்கை கடற்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததால், கடலில் கலந்துள்ள வேதியக் கழிவுகள், இலங்கை மீனவ சமுதாயத்தைக் கடுமையாய்ப் பாதித்துள்ளன என்று, கர்தினால் இரஞ்சித் அவர்கள் கூறியுள்ளார்.

இந்த கப்பல், மற்ற வேதியப் பொருள்களோடு, 25 டன்கள் நைட்ரிக் அமிலம் மற்றும், ஏனைய அழகுசாதனப் பொருள்களையும் கொண்டிருந்தது. இது விபத்துக்குள்ளாகியபின் தீப்பற்றி எரிந்தபோது, அதிலிருந்த வேதியப் பொருள்கள் கடலில் கலந்துள்ளன.

இது குறித்து, சூன் 02, இப்புதனன்று யூக்கா செய்தியிடம் பேசிய கர்தினால் இரஞ்சித் அவர்கள், இந்த கப்பல் நிறுவன முதலாளிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டமுறையான நடவடிக்கையை, தான் முன்னின்று நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கும் பொருள்கள் எதனையும் தொடவேண்டாம் என்றும், அவை நச்சு கலந்ததாக இருக்கும் என்றும், அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கப்பல் படை மற்றும், இராணுவத்தினர் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள், அண்மை நாள்களாக, கடற்கரையைச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன. (UCAN)

04 June 2021, 15:47