தேடுதல்

கர்தினால் Andrew Yeom Soo-jung கர்தினால் Andrew Yeom Soo-jung  

தடுப்பூசிகள் வழங்கப்பட சோல் கத்தோலிக்கர் வத்திக்கானுக்கு நிதி

கொரியாவின் பாதுகாவலரான புனித Andrew Kim பிறந்ததன் 200ம் யூபிலி ஆண்டு நிறைவுபெறுகின்ற இவ்வாண்டு நவம்பர் 27ம் தேதி வரை, தடுப்பூசி விநியோகத்திற்கு நிதி திரட்டும் நடவடிக்கை தொடரும்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் வழங்கப்படுவதற்கென, தென் கொரியாவின் சோல் உயர்மறைமாவட்டம், வத்திக்கானுக்கு பத்து இலட்சம் டாலரை வழங்கியுள்ளது.

பெருந்தொற்று தடுப்பூசிகள், அனைத்து நாடுகளுக்கும், சமமாகவும், சரியான நேரத்திலும், விநியோகிக்கப்படவேண்டும் என்பதை உறுதிசெய்யும் நோக்கத்தில், சோல் உயர்மறைமாவட்டம் திரட்டிய பத்து இலட்சம் டாலர் நிதியுதவி, சூன் 01, இச்செவ்வாயன்று, வத்திக்கானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்த விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கும் வண்ணம், கொரிய கத்தோலிக்க ஆயர் பேரவை (CBCK), கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற்ற பொது அவையில், ‘தடுப்பூசிகள் பகிர்வு’ என்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்தது. 

உலகில் அனைவருக்கும், குறிப்பாக, வறிய நாடுகளில் வாழ்வோருக்கு, தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட திருத்தந்தைக்கு உதவும் நோக்கத்தில், சோல் மாநகரிலுள்ள 234 பங்குத்தளங்கள், மற்றும், நிறுவனங்கள் ஆகியவை, ஒரே உடல், ஒரே ஆன்மா என்ற இயக்கத்தோடு (OBOS) சேர்ந்து, இந்த நிதி திரட்டும் திட்டத்தில் ஈடுபட்டன.

பெருந்தொற்று தடுப்பூசிகள், வறிய நாடுகளிலுள்ள மக்களுக்கும் கிடைப்பதற்கு உதவுமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பணக்கார நாடுகளுக்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துவருவதை முன்னிட்டு, சோல் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள், தன் உயர்மறைமாவட்ட கத்தோலிக்கர் நிதியுதவி செய்யுமாறு உற்சாகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோல் உயர்மறைமாவட்டத்தின் பிரதிநிதியாக செய்தியாளர்களிடம் பேசிய அருள்பணி Matthias Young-yup Hur அவர்கள், இந்த நிதியுதவி பற்றிக் கூறுகையில், இந்த பெருந்தொற்று காலத்தில், ஏழை-செல்வந்தர் இடைவெளி அதிகரித்துள்ளது என்றும், இதனைத் தடுக்க, கத்தோலிக்கர் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை ஒரு சிறிய முயற்சி என்றும் தெரிவித்தார்.

கொரியாவின் முதல் அருள்பணியாளரும், பாதுகாவலருமான புனித Andrew Kim Tae-gon அவர்கள் பிறந்ததன் 200ம் யூபிலி ஆண்டு நிறைவுபெறுகின்ற இவ்வாண்டு நவம்பர் 27ம் தேதி வரை, இந்த நிதி திரட்டும் நடவடிக்கை தொடரும் என்றும், அருள்பணி Matthias Young- அவர்கள் அறிவித்தார். 

04 June 2021, 15:54