தேடுதல்

Vatican News
அனைவரும் உடன்பிறந்தோர் அனைவரும் உடன்பிறந்தோர் 

"ஒன்றிணைந்து, உடன்பிறந்த நிலையைக் காப்பாற்றுதல்" - அறிக்கை

திருஅவை என்பது, ஆன்மீகத்தில் மேல்தட்டு மக்களைக் கொண்ட சமுதாயம் அல்ல, மாறாக, இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உருவான உடன்படிக்கையான வானவில்லைக் கொண்டுள்ள வரவேற்புக் கூடாரம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'Fratelli tutti' என்ற திருமடலைப் பின்னணியாகக் கொண்டு, "ஒன்றிணைந்து, உடன்பிறந்த நிலையைக் காப்பாற்றுதல்" என்ற தலைப்பில், திருஅவையின் பத்து இறையியல் அறிஞர்கள் இணைந்து, ஜூன் 8, இச்செவ்வாயன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

வாழ்வை வளர்க்கும் பாப்பிறைக் கல்விக்கழகத்தின் தலைவரான பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களின் அழைப்பை ஏற்று, பத்து இறையியல் அறிஞர்கள், இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

முற்சார்பு எண்ணங்கள் பலவற்றின் காரணமாக தன்னைத்தானே மேலும், மேலும் மூடிக்கொண்டிருக்கும் உலக சமுதாயங்களின் நடுவே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள 'Fratelli tutti' திருமடல், திறந்த மனம் கொண்டிருக்கவேண்டும் என்ற அழைப்பை விடுத்துவருகிறது என்று, இவ்வறிக்கையின் ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆண்டவர் ஒருவரே மீட்பர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்பதை வலியுறுத்தும் இவ்வறிக்கை, இறையியல் தளத்தில், மிக நுணுக்கமான விவாதங்களை மேற்கொண்டு, "நான் பவுலைச் சார்ந்துள்ளேன்" என்றோ "நான் அப்பொல்லோவைச் சார்ந்துள்ளேன்" என்றோ "நான் கேபாவைச் சார்ந்துள்ளேன்" என்றோ (1 கொரி. 1:12) பிரிவுகளை உருவாக்கும் பொருளற்ற வாதங்களைக் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றையச் சூழல் நம்மீது சுமத்தியுள்ள நெருக்கடியை அனைத்து மத நம்பிக்கையாளர்களும் இணைந்து தீர்க்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று சுட்டிக்காட்டியுள்ள இவ்வறிக்கை, அனைத்து மத நம்பிக்கையாளர்களுக்கும் தற்போது தேவையானது மனமாற்றம் என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

திருஅவை என்பது, ஆன்மீகத்தில் மேல்தட்டு மக்களைக் கொண்ட சமுதாயம் அல்ல, மாறாக, இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே உருவான உடன்படிக்கையான வானவில்லைக் கொண்டுள்ள வரவேற்புக் கூடாரம் என்ற உருவகம் இறையியல் அறிஞர்களின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

கானானிய பெண், கிணற்றடியில் சந்தித்த சமாரியப் பெண், சக்கேயு, நூற்றுவர் தலைவர் ஆகிய அனைவரையும் வரவேற்ற இயேசுவின் உள்ளம், திருஅவைக்குத் தேவை என்பதை, இறையியல் அறிஞர்கள், இவ்வறிக்கையில், சுட்டிக்காட்டியுள்ளனர்.

09 June 2021, 14:15