தேடுதல்

இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் உரோம் நகரின் விமான நிலையத்தை அடைந்த புலம்பெயர்ந்தோர் இத்தாலிய காரித்தாஸ் அமைப்பின் உதவியுடன் உரோம் நகரின் விமான நிலையத்தை அடைந்த புலம்பெயர்ந்தோர்  (ANSA)

லிபியாவின் புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் இத்தாலிய காரித்தாஸ்

இத்தாலிய ஆயர் பேரவையும், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் வழியே, புலம்பெயர்ந்தோர் இத்தாலியில் சட்டப்பூர்வமாக குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது - இத்தாலிய காரித்தாஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லிபியா நாட்டில் பெரும் துன்பங்களை அடைந்துவந்த நைஜர் நாட்டு புலம்பெயர்ந்தோர் 45 பேர், ஜூன் 23, இப்புதனன்று, உரோம் நகரின் விமான நிலையத்தில் வந்து சேர்ந்தனர்.

இத்தாலிய ஆயர் பேரவை, இத்தாலிய காரித்தாஸ், மற்றும், ஐ.நா.வின் மனித உரிமைகள் அவை ஆகிய மூன்றும் இணைந்து மேற்கொண்ட ஒரு முயற்சியின் விளைவாக, உரோம் நகரை அடைந்துள்ள புலம்பெயர்ந்தோர், இத்தாலியின் பல்வேறு மறைமாவட்டங்களில் குடியமர்த்தப்பட உள்ளனர்.

'மனிதாபிமான தாழ்வாரம்' என்ற பெயரில், இத்தாலிய ஆயர் பேரவையும், இத்தாலிய காரித்தாஸ் அமைப்பும் இணைந்து மேற்கொள்ளும் முயற்சிகள் வழியே, மத்தியக் கிழக்குப் பகுதி, ஆப்ரிக்கா ஆகிய இடங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோர் இத்தாலியில் சட்டப்பூர்வமாக குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று இத்தாலிய காரித்தாஸ் கூறியுள்ளது.

சிறு, சிறு குழுக்களாக இதுவரை இத்தாலி நாட்டை அதிகாரப்பூர்வமாக அடைந்துள்ள புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 1000த்திற்கும் அதிகமென்றும், இவர்கள், இத்தாலி நாட்டின் பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த பங்குத்தளங்கள், மற்றும் பிறரன்பு அமைப்புக்களிடமிருந்து உதவிகள் பெற்றுள்ளனர் என்றும், இத்தாலிய காரித்தாஸ் கூறியுள்ளது.

லிபியா நாட்டின் பல்வேறு தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்தோரைக் குறித்தும், மத்தியத் தரைக்கடலில் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரைக் குறித்தும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடிக்கடி தன் கருத்துக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லிபியாவிலிருந்து தப்பித்து வரும் புலம்பெயர்ந்தோரை, இத்தாலி நாடு, 2016ம் ஆண்டிலிருந்து, 'மனிதாபிமான தாழ்வாரம்' முயற்சியின் வழியே வரவேற்றுள்ளது.

2021ம் ஆண்டில், இதுவரை, மத்தியத்தரைக் கடலில் 800க்கும் மேற்பட்டோர் மறைந்துவிட்டனர் என்றும், 13,000த்திற்கும் அதிகமானோர் லிபியா நாட்டுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இத்தாலிய காரித்தாஸ் நிறுவனத்தின் அறிக்கையொன்று கூறுகிறது.

24 June 2021, 12:54