தேடுதல்

Vatican News
இன்றைய வத்திக்கான் பெருங்கோவில் இன்றைய வத்திக்கான் பெருங்கோவில்  (Vatican Media)

திருத்தந்தையர் வரலாறு - ஸ்லாவ் இன மக்களின் மனமாற்றம்

ஸ்லாவ் இனத்தவரை மனந்திருப்ப, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்த புனித சகோதரர்கள் சிறில் மற்றும், மெத்தடியசுக்கு முழு ஆதரவையும் வழங்கினார் திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியன்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் உயிரிழந்ததும், திருஅவையில் ஏட்ரியன் என்பவர், அவரின் விருப்பத்திற்கு மாறாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்தினாலாக இருந்த இவர், ஏற்கனவே முந்தைய காலங்களில் இருமுறை திருத்தந்தையாகப் பரிந்துரைக்கப்பட்டு, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தவர். இவரின் குடும்பத்திலிருந்து ஏற்கனவே இரு திருத்தந்தையர்கள், அதாவது, மூன்றாம் ஸ்தேவானும், இரண்டாம் செர்ஜியுசும் திருஅவையை வழிநடத்திச் சென்றுள்ளனர். திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் 867ம் ஆண்டு உயிரிழந்தபோது, கர்தினால் ஏட்ரியனின் வயதோ 75. பிறரன்பிற்கும், உடன்பிறந்த உணர்வு நிலைக்கும் பெயர்போன கர்தினால் ஏட்ரியன் அவர்கள், திருஅவையை வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தன் முதுமையைக் காரணம் காட்டி அதனை மறுத்துப் பார்த்தார். அதுமட்டுமல்ல, இவர் ஏற்கனவே திருமணம் புரிந்து, இல்லற வாழ்வுக்குப்பின் அருள்பணி வாழ்வைத் தேர்ந்துகொண்டவர். இவரின் விருப்பத்திற்கு எதிராக, திருஅவையின் தலைமைப் பணிச் சுமை, இவர்மேல் சுமத்தப்பட்டாலும், அதனை திறம்பட எடுத்து நடத்தினார் திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியன். புனித திருத்தந்தை முதலாம் நிக்கோலாசின் வழிகளிலேயே திருஅவையை வழிநடத்திச் சென்றார் இவர். மன்னர் Lothair தன் மனைவியை விலக்கி வைத்துவிட்டு, வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததைக் கண்டித்ததுடன், அப்பெண்ணை விலக்கி வைக்கவும், மனைவியை மீண்டும் ஏற்றுக்கொள்ளவும் வைத்தார் இவர். இத்தகைய தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழியையே மன்னரிடம் இருந்து பெற்றார். மேலும், தன் சார்பாக, பத்து பிரதிநிதிகளை கான்ஸ்தாந்திநோபிளுக்கு அனுப்பி,  அங்கு எட்டாவது பொதுஅவையைக் கூட்டி, கிழக்கு, மற்றும், மேற்கு திருஅவைகளுக்கிடையே ஒன்றிப்பை உருவாக்க முயன்றார். பல்கேரியர்களை உரோமைத் திருஅவையின் கீழ் கொண்டுவர இவர் எடுத்த முயற்சிகள் வெற்றியடையவில்லையெனினும், ஒன்றிப்பிற்கான இவரின் முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்தன. ஐரோப்பாவின் மேற்கு பகுதியில் வாழ்ந்த ஸ்லாவ் இனத்தவரை மனந்திருப்ப, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவந்த புனித சகோதரர்கள் சிறில் மற்றும், மெத்தடியசுக்கு முழு ஆதரவையும் வழங்கினார் திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியன். அதுமட்டுமல்ல, அக்காலத்திலேயே, ஸ்லாவ் மொழியில் திருவழிபாடுகளை நடத்த அனுமதியும் வழங்கினார் இத்திருத்தந்தை. இதனால், ஜெர்மன் அரசு, மற்றும் ஜெர்மன் திருஅவையின் கோபத்தையும் சம்பாதித்தார். ஏறக்குறைய 5 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய இந்த முதிய திருத்தந்தை ஏட்ரியன், 872ம் ஆண்டு இறைபதம் சேர்ந்தார்.

திருத்தந்தை எட்டாம் யோவான்

திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியனுக்குப்பின், திருஅவையை வழிநடத்தத் தேர்வுச் செய்யப்பட்டவர், திருத்தந்தை எட்டாம் யோவான். 853ம் ஆண்டு முதல் 869 வரை உரோமையத் திருஅவையின் தலைமைத் திருத்தொண்டராக இருந்த எட்டாம் யோவான் அவர்கள், 872ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி, திருஅவை தலைமைப் பொறுப்பை ஏற்றபோது, ஆயர் Formosus என்பவரால் கடுமையாக எதிர்க்கப்பட்டார். திருத்தந்தை எட்டாம் யோவான், தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபின், Moraviaவில் பணிசெய்ய அனுப்பப்பட்டிருந்த புனித மெத்தடியஸ் குறித்து எவ்வித செய்தியும் கிட்டாமலிருந்தது. 869ம் ஆண்டே உரோம் நகரில் புனித சிறில் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. திருத்தந்தை இரண்டாம் ஏட்ரியனின் அனுமதியுடன் புனித மெத்தடியஸ், ஸ்லாவ் மொழியை திருவழிபாட்டில் பயன்படுத்தியதை எதிர்த்த ஜெர்மன் அதிகாரிகள், இவரை, 871ம் ஆண்டே கைது செய்து சிறையில் வைத்திருந்தது, 873ம் ஆண்டுதான் திருத்தந்தை எட்டாம் யோவானுக்கு தெரியவந்தது. முழுமுயற்சி எடுத்து, இப்புனிதரை விடுவித்து, உரோம் நகருக்கு வரவைத்தார். அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு, அவரிடம் எந்த குற்றமும் காணாததால், மீண்டும் புனித மெத்தடியசை Moraviaவிற்கே அனுப்பி வைத்தார் திருத்தந்தை எட்டாம் யோவான். 885ம் ஆண்டு புனித மெத்தடியஸ் உயிரிழக்கும்வரை, திருத்தந்தை எட்டாம் யோவான், மற்றும் அதற்கடுத்து வந்த திருத்தந்தையர்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. இது மட்டுமல்ல, Saracens கடல்கொள்ளையர்களிடமிருந்து, உரோம் நகரையும் திருஅவையையும் காப்பாற்றினார் திருத்தந்தை எட்டாம் யோவான். இவரின் முயற்சிகளுக்கு பேரரசர் Charles the Bald  அவர்கள் உதவ முன்வந்தாலும், 877ம் ஆண்டு இடம்பெற்ற அவரின் மரணம் இதில் பின்னடைவை ஏற்படுத்தியது. இருப்பினும், தன் மரணம்வரை, Saracens கடல்கொள்ளையர்களுக்கு எதிரான தன் போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்தார் திருத்தந்தை எட்டாம் யோவான்.

Saracens கடல்கொள்ளையர்கள் மட்டுமல்ல, Porto ஆயர் Formususம், அவருடன் சேர்ந்து பல திருஅவை அதிகாரிகளும் திருத்தந்தைக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்துக்கொண்டே இருந்தனர். விசாரணைக்கு அழைத்தபோது, வர மறுத்தனர். இறுதியில் திருஅவை சொத்துக்களை எடுத்துக்கொண்டு கூட்டமாக பிரான்ஸ்க்கு இவர்கள் தப்பியோடியதும் நடந்தது. திருத்தந்தையை எதிர்த்துவந்த ஆயர் Formosusக்கு, இந்த திருஅவை சொத்துக்கள் கையாடலில் எந்தவித தொடர்பும் இல்லையெனினும், இவர் அதே காலக்கட்டத்தில் பிரான்சுக்கு தப்பியோடியதாலும், திருத்தந்தைக்கு பணியாமல் எதிர்த்து வந்ததாலும், மற்றவர்களுடன் சேர்ந்து இவரும் திருஅவையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

877ம் ஆண்டு பேரரசர் Charles the Bald உயிரிழந்தபோது பேரரசருக்குரிய போட்டி துவங்கியது. இத்தாலியின் Spoleto ஆட்சியாளர் லாம்பர்ட் என்பவர், இப்போட்டியில் தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என திருத்தந்தையை வலியுறுத்தினார். திருத்தந்தை இதற்கு இசைவு அளிக்காததால், அவரை பயமுறுத்தி இசைவு பெற, 878ம் ஆண்டு உரோம் நகரை முற்றுகையிட்டார் லாம்பர்ட். இத்தகைய பல எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் திருஅவையின் படிப்பினைகளுக்கு விசுவாசமாக இருந்து செயல்பட்ட திருத்தந்தை எட்டாம் யோவான் அவர்கள், 882ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இறைபதம் சேர்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை எட்டாம் ஜானுக்குப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் திருஅவையை வழிநடத்திய திருத்தந்தை முதலாம் மரினுஸ் குறித்து வரும் வாரம் காண்போம்.

02 June 2021, 15:10